ஜீலை 24, பரிசுத்தர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்

நான் பரிசுத்தமாய் இருக்கிறேன்

தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார். எபேசியர் 1:4

ரோமாபுரியில் வாழ்ந்த விசுவாசிகளை "தேவனுக்குப் பிரியமானவர்களே, பரிசுத்தவான்களாய் வாழும்படி அழைக்கப்பட்டவர்களே" (ரோமர் 1:2) என்று பவுல் அழைத்தார்.

"பரிசுத்தவான்கள்" என்றால், "பரிசுத்தமாய் வாழ்கின்றவர்கள்" என்று எளிமையாகச் சொல்லலாம். "ஆகும்படி" என்ற வார்த்தையை உண்மையில் மொழிபெயர்ப்பாளர்கள்தான் சேர்த்தனர். கிரேக்க மொழியில், "பரிசுத்தர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்" என்ற அர்த்தத்தில்தான் வருகின்றது.

பரிசுத்தம் என்பது ஏதோ ஒரு சில விசுவாசிகள் மட்டுமே அடையக் கூடிய கூடுதலான ஒரு தகுதி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது எல்லா விசுவாசிகளிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிற ஒன்றாகும்.

இது ஏதோ மற்ற விசுவாசிகளுக்கு எட்டாத ஒரு உயரிய தளத்தில், விசேஷமான "உயர் வகுப்பு" விசுவாசிகள் மட்டுமே வாழக்கூடிய ஒன்றாக பவுல் இதைச் சொல்லவில்லை. பவுல் எல்லா விசுவாசிகளையும் பரிசுத்தமாய் வாழ்கின்றவர்களாகத்தான் எண்ணி அழைக்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதற்கான சுவிசேஷ அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போதே, தேவன் உங்களை பரிசுத்தராய் அழைக்கிறார். இனி நீங்கள் தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டவர்கள்.

இனி நீங்கள் தேவ நீதிக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் இணங்கி வாழும்படி ஆயத்தமானவர்கள். நீங்கள் ஒருவேளை உங்களையே பார்த்து, "என்னைப் பார்த்தால், பரிசுத்தமானவனைப்போலத் தெரியவில்லையே," என்று சொல்லலாம்.

ஆனால் பவுல் என்ன சொன்னார் என்பதை திரும்பவும் நினைவுகூருங்கள்: நம் தேவன் "இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவர்" (ரோமர் 4:17). ஆபிரகாமுக்கு ஒரு குமாரன் கூட இல்லாதபோதே, தேவன் அவனை "பல தேசங்களுக்குத் தகப்பன்" என்று அழைத்தார் (ஆதியாகமம் 17:4-5).

தேவன் உங்களை குறிப்பிட்ட ஒன்றாக அழைக்கும்போது, அவர் உங்களை அந்தக் குறிப்பிட்ட ஒன்றாக உருவாக்கப் போகிறார் என்று அர்த்தம். தேவன் உங்களைப் பரிசுத்தவான் என்று அழைக்கும்போது, நீங்கள் பரிசுத்தவானாக இருக்கிறீர்கள்.

அவர் உங்களை பரிசுத்தவான் என்று அழைத்தபடியால், உங்களுடைய வாழ்க்கையில் அந்தப் பரிசுத்தத்தை உருவாக்குவதற்கு கொஞ்சக் காலம் எடுக்கலாம். ஆனால் அதுதான் உங்களைக் குறித்த தேவனுடைய நிச்சயமான கட்டளையாய் இருக்கிறது. 

               

நன்றி கர்த்தாவே, நீர் என்னை அழைத்திருக்கிறீர். உமக்கு நன்றி. நான் பரிசுத்தவானாய் இருக்கிறபடியால், என்னுடைய வாழ்க்கையில் உம்முடைய அழைப்பின்படி என்னை நீர் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர் என்று நான் அறிக்கை செய்கிறேன். ஆமென்.