அவருடைய மகன்களாய், மகள்களாய் இருக்கிறோம்

நான் தேவனுடைய பிள்ளையாய் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறேன்


நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய் தமக்கு சுவிகாரப் புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். 


(இயேசுகிறிஸ்துவின் மூலம் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாய் ஏற்றுக்கொள்ளும்படி தேவன் நம்மை அன்பினால் முன்குறித்தார். இது அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது, அவருடைய சித்தத்திற்கு ஏற்றதாகவும் இருந்தது. தேவன் தம்முடைய மகிமையான கிருபையின் புகழ்ச்சிக்குத் தகுதியாக, அவர் தாம் மிகவும் நேசிக்கிற கிறிஸ்துவுக்குள் இதை நமக்கு இலவசமாய் தந்திருக்கிறார்.)

எபேசியர் 1:3-6

எல்லாவற்றையும் சிருஷ்டிப்பதற்கு முன்பு, தேவனுடைய நித்திய நோக்கம் என்னவாயிருந்தது என்று பவுல் இங்கு விளக்கிச் சொல்கிறார்: நாம் அவருடைய பிள்ளைகளாய், அதாவது அவருடைய மகன்களாய், மகள்களாய் மாற வேண்டும் என்பதுதான் அது. சிலுவையில் நமக்குப் பதிலாக இயேசு மரித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். சிலுவையில் இயேசு நம்முடைய பாவத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டு, தேவன் நம்மை நிராகரித்ததினால் உண்டான வேதனையை அவர் அனுபவித்ததன் மூலம், நாம் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான ஒரு வழியை அவர் திறந்து விட்டார்.

அவர் சிலுவையில் தொங்கிய நேரத்தில் மட்டும், தேவனுடைய குமாரன் என்ற தன்னுடைய ஸ்தானத்தை அவர் இழந்தார். அதினால், தேவனுடைய குமாரர்கள், குமாரத்திகள் என்ற அதே ஸ்தானத்தை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

எனக்கு ஐந்து, ஆறு வசனங்கள் மிகவும் பிடிக்கும். “தேவன் தம்முடைய மகிமையான கிருபையின் புகழ்ச்சிக்கு ஏற்ற விதத்தில், அவர் மிகவும் நேசிக்கிற கிறிஸ்துவுக்குள் நமக்கு இலவசமாய் (அந்த ஸ்தானத்தை) தந்திருக்கிறார்.” இவ்வசனத்தில் “இலவசமாய் நமக்குத் தந்திருக்கிறார்” என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தைகள், மிகவும் வல்லமையானவை. “கிருபை பெற்றவளே” என்று தேவதூதன் வந்து கன்னி மரியாளை வாழ்த்தியபோது, அதே வார்த்தையைத்தான் பயன்படுத்தினான் (லூக்கா 1:28).

இதற்கு அர்த்தம், நாம் தேவனுடைய விசேஷமான தயவினால் நிரம்பியவர்களாய் மாறியிருக்கிறோம். தேவன் “தமக்குப் பிரியமான கிறிஸ்துவுக்குள் நம்மை ஏற்றுக் கொண்டிருக்கிறார்” என்று புதிய கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு சொல்கிறது (எபேசியர் 1:6).

இயேசு உங்களுடைய பாவத்தையும், நிராகரிக்கப்பட்ட நிலையையும் ஏற்றுக் கொண்டார். அதன் மூலம் நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாய் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.    

நன்றி கர்த்தாவே, நீர் என்னை அன்பினால் தெரிந்து கொண்டீர். நீர் என்னை ஏற்றுக் கொள்ளும்படி, இயேசு நான் நிராகரிக்கப்பட்ட நிலையை தன் மேல் ஏற்றுக் கொண்டார் என்று நான் அறிக்கை செய்கிறேன். நான் தேவனுடைய பிள்ளையாய் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறேன்.

ஆமென்......................................