ஜூன் 10, நாம் முழுவதும் அவருக்குச் சொந்தம்

நான் மன்னிக்கப்பட்டிருக்கிறேன்; என்னுடைய பாவங்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறேன்

கடற்கரையோரம் இருந்த ஒரு பட்டணத்தில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் மர வேலைகளை திறம்பட, ஞானமாய் செய்யக்கூடியவன். அவன் தனக்கென்று ஒரு சிறிய மரப்படகைச் செய்தான்.

அவன் அதை தண்ணீரில் விட்டான். அது மெய்யாகவே மிதந்து சென்றது. ஒருநாள் அவன் அதை கடற்கரைக்கு எடுத்துச் சென்றான். அவன் அதை கடலின் ஓரமாக மிதக்கும்படி விட்டான்.

ஆனால் காற்றின் திசை மாறியது. அது அவனுடைய படகை கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது. அவனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் அவன் தன் படகு இல்லாமலே, தன் வீட்டிற்குச் சென்றான்.

காற்றின் திசை மாறியது. அலைகள் அவனுடைய படகை திரும்பவும் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தன. கடற்கரையோரம் நடந்து சென்ற ஒரு மனுஷன் அந்தக் படகைக் கண்டான். அவன் அதை எடுத்தான். அது ஒரு அழகான வேலைப்பாடாய் இருக்கிறது என்று கண்டவனாய், அவன் அதை உள்ளூரில் இருந்த ஒரு கடைக்குக் கொண்டு சென்றான். அங்கே அவன் அதை விற்றான்.

கடை முதலாளி, அதை சுத்தம் செய்து, தன்னுடைய கடையின் கண்ணாடிக்குள் காட்சியாக அதை வைத்து, அதற்கு விலையாக, 35 டாலர்களை நிர்ணயித்தான்.

சில நாட்கள் சென்றன. அந்தச் சிறுவன் அந்தக் கடையின் வழியாகச் சென்றான். கண்ணாடியின் பின்னால், காட்சிப் பொருளாக வைக்கப்பட்ட தன் படகைக் கண்டான். அதன் விலை, 35 டாலர்கள் என்பதையும் அவன் அறிந்து கொண்டான்.

அது அவனுடைய படகுதான் என்பதை நிரூபிப்பதற்கு அவனிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். அவனுடைய படகை திரும்ப தன்னுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அவனால் ஒரே ஒரு காரியத்தைத்தான் செய்ய முடியும்.

அதற்குரிய விலையைச் செலுத்தி, அவன் அதை வாங்க வேண்டும். அது ஒன்றுதான் ஒரே வழியாயிருந்தது.

இதை அறிந்தவனாய், அவன் வேலைக்குச் சென்றான். தன்னுடைய படகை திரும்ப வாங்குவதற்கான பணத்தைச் சம்பாதிக்கும்படி, அவன் எந்த ஒரு வேலையையும் எடுத்துச் செய்தான். அதற்குத் தேவையான பணத்தை அவன் சம்பாதித்தான்.

நேராக, அவன் அந்தக் கடைக்குச் சென்றான். “எனக்கு அந்தப் படகு வேண்டும்,” என்று அவன் சொன்னான். அதற்குரிய பணத்தை, அவன் கொடுத்தான். அவனுடைய கரங்களில், அந்தப் படகு கொடுக்கப்பட்டது. அவன் வெளியே சென்றான்.

நடைபாதையில் நின்று, அவன் தன்னுடைய படகை தன் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டான். “இப்பொழுது நீ எனக்குச் சொந்தம். நானே உன்னை உருவாக்கினேன். இப்பொழுது நானே உன்னை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன்,” என்று அவன் அதைப் பார்த்துச் சொன்னான்.

அதுதான் மீட்பு. முதலில் தேவனாகிய கர்த்தரே நம்மை உருவாக்கினார். ஆனால் நாம் சாத்தானுடைய அடிமைச் சந்தையில் இருந்தோம். அப்பொழுது அவர் நம்மை விலை கொடுத்து வாங்கினார்.

இப்பொழுது நாம் இரண்டு மடங்கு அவருக்குச் சொந்தமானவர்களாய் இருக்கின்றோம். நீங்கள் கர்த்தராகிய இயேசுவுக்கு எவ்வளவு முக்கியமானவர்கள், எவ்வளவு விலையேறப்பெற்றவர்கள் என்று உங்களால் பார்க்க முடிகிறதா?

அந்தப் படகாக, உங்களைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவர்களாக, மதிப்பற்றவர்களாக நீங்கள் உங்களைக் குறித்து உணரலாம். தேவன் மெய்யாகவே உங்கள் மீது அக்கறையாய் இருக்கிறாரா என்று நீங்கள் குழம்பிப் போகலாம்.

இந்த உணர்வுகளை இப்பொழுதே உதறித் தள்ளுங்கள். கர்த்தராகிய இயேசுவின் கரங்களில் இருக்கும் அந்தப் படகாக, உங்களை நீங்கள் பாருங்கள். அப்படி விசுவாசிக்கும்படி, முயற்சியுங்கள். அவர் உங்களைப் பார்த்துச் சொல்கிறார்:

“இப்பொழுது நீ எனக்குச் சொந்தம். நானே உன்னை உருவாக்கினேன். நானே உன்னை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன்.

நீ விலையேறப்பெற்றவன். நீ எனக்குச் சொந்தம். நீ முழுவதுமாய் எனக்குச் சொந்தமானவனாய் இருக்கிறாய்.”

இயேசுவே, உம்முடைய மன்னிப்பிற்காக உமக்கு நன்றி. நான் கர்த்தராகிய இயேசுவின் கரங்களில் இருக்கின்றேன் என்று நான் அறிக்கை செய்கிறேன். நான் அவருக்குச் சொந்தமானவன் என்று அவர் அறிவித்திருக்கிறார். அவரே என்னை உருவாக்கினார். அவரே என்னை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். அவர் என்னை நேசிக்கிறார். நான் முழுமையாய் அவருக்குச் சொந்தமானவன். நான் மன்னிக்கப்பட்டிருக்கிறேன்; என்னுடைய பாவங்களிலிருந்து நான் விடுதலையாக்கப்பட்டிருக்கிறேன். ஆமென்.