ஜூன் 14, ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம்

நான் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறேன்

எபேசியர் 1:5-6 வசனங்களில் எழுதப்பட்டிருக்கிற வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். “தேவன் தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தமக்கு மிகவும் பிரியமானவருக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் அவர் நம்மை வைத்திருக்கிறார்,” என்ற அர்த்தத்தில் இவ்வசனங்கள் பேசுகின்றன.

இதில் “ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் (accepted)” என்ற வார்த்தை மிகவும் முக்கியமானது.

திரும்பவும் சொல்கிறேன், நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறோம் என்று தேவன் சொல்லும்போது, நம்மை ஏதோ அவர் சகித்துக் கொள்கிறார் என்ற அர்த்தத்தில் அவர் சொல்லவில்லை. அவருடைய தயவு மிகுதியாய் நமக்கு உண்டாயிருக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம்.

அவருடைய அன்பும், கரிசனையும், அக்கறையும், கவனமும் முழுமையாய் நம் மீது குவிந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தில் எவற்றையெல்லாம் அக்கறையாய் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பட்டியல் அவரிடம் இருக்கிறது.

அதில் நாம்தான் முதலிடத்தில் இருக்கின்றோம். அவர் நம்மை ஒரு ஓரத்தில் தள்ளி, “பொறுத்திரு. இப்பொழுது நான் பிஸியாக இருக்கிறேன். உன்னோடு செலவிடுவதற்கு எனக்கு நேரம் இல்லை,” என்று ஒருபோதும் சொல்வதில்லை.

“சத்தம் எழுப்பாதே. அப்பா தூங்கிக் கொண்டிருக்கிறேன்,” என்றும் அவர் நம்மிடம் சொல்வதில்லை. அவர் நம்மைப் பார்த்து என்ன சொல்கிறார் தெரியுமா? அவர் சொல்கிறார்: “எனக்கு நீ வேண்டும். நான் உன்னை நேசிக்கிறேன்.

நீ எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். உன் விஷயங்களில் நான் ஆர்வமாய் இருக்கிறேன். உள்ளே வா. நான் உனக்காக நீண்ட காலமாய் காத்திருக்கிறேன்.”

ஊதாரி மகன் என்ற கதையில் வரும் தகப்பனைப்போலவே பிதாவாகிய தேவன் இருக்கிறார். தன்னுடைய மகன் வீடு திரும்புகிறானா என்று அவன் வெளியே காத்துக் கொண்டிருந்தான். “உனக்குத் தெரியுமா? உன்னுடைய மகன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறான்,” என்று ஒருவரும் அவனிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அதை முதலில் அறிந்து கொண்டது, அந்தத் தகப்பன்தான். குடும்பத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்பே அவன் அதை அறிந்து கொண்டான். கிறிஸ்துவுக்குள் நம்மைக் குறித்த தேவனுடைய சிந்தையும் இதுதான்.

நாம் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்ல. நாம் இரண்டாம் தர குடிமகன்கள் அல்ல. நாம் வேலைக்காரர்களும் அல்ல.

தகப்பனுடைய சொத்துக்களையெல்லாம் அழித்து விட்டு, ஊதாரி மகன் திரும்பி வந்தபோது, ஒரு வேலைக்காரனாக இருக்கலாம் என்ற மனநிலையில்தான் வந்தான். அவன் சொன்னான், “தகப்பனே, உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ளும்.”

இந்தக் கதையை மிகவும் கவனமாக வாசித்துப் பாருங்கள். மகன் தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்தபோதே, அவனுடைய தகப்பன் அவனை இடைமறிக்கின்றான் என்பதை நீங்கள் கவனிக்க முடியும்.

அவன் தன் மகனை பேசி முடிக்கும்படி விடவே இல்லை. “என்னை உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக வைத்துக் கொள்ளும்,” என்று அவன் தன் மகனை சொல்லும்படி அனுமதிக்கவே இல்லை. அதற்கு நேரெதிராக அவன் என்ன சொன்னான் தெரியுமா?

அந்தத் தகப்பனுடைய வார்த்தைகள் இவைதான். லூக்கா 15:22-24 வசனங்களை வாசித்துப் பாருங்கள்: “நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தை கொண்டு வந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும், கால்களுக்கு பாதரட்சைகளையும் போடுங்கள்.

கொழுத்த கன்றைக் கொண்டு வந்து, அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.

என் குமாரனாகிய இவன் மரித்தான். திரும்பவும் உயிர்த்தான். காணாமல் போனான். திரும்பவும் காணப்பட்டான்.” தேவனுக்கே புகழ்ச்சியும், துதியும் உண்டாவதாக!

இயேசுவே, நீர் என்னை மீட்டிருக்கிறீர். உமக்கு நன்றி. தேவனுடைய கிருபையினால், “அவருக்கு மிகவும் பிரியமானவராகிய கிறிஸ்துவுக்குள் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறேன்” என்று நான் அறிக்கை செய்கிறேன். நான் தேவனுடைய பிள்ளை என்றும் அறிக்கை செய்கிறேன். ஆமென்.