ஜூன் 22, அர்ப்பணிப்பின் அளவு

நான் கிறிஸ்துவின் சிநேகிதனாயிருக்கிறேன்

தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்தார் என்று ஆதியாகமம் 15-ல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட இருவரும், அதாவது, தேவனும் ஆபிரகமும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பைக் கொடுத்தனர்.

ஒரு நேரம் வந்தது. ஆபிரகாம் தன் அர்ப்பணிப்பை நிறைவேற்றத்தக்கதாக, அவனுடைய குமாரனாகிய ஈசாக்கை பலியாக ஒப்புக்கொடுக்கும்படி தேவன் ஆபிரகாமைக் கேட்டார்.

ஆனால் தேவனுடைய அர்ப்பணிப்பும், ஆபிரகாமுடையதைப்போல முழுமையான ஒன்றாகத்தான் இருந்தது. ஆகையால் இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு, உடன்படிக்கையின் மறுபக்கம் அங்கே வெளிப்பட்டது. தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை பலியாக ஒப்புகொடுத்தார்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தேவனிடம் வெளிப்படுத்துகிற அர்ப்பணிப்பு, உங்களிடம் தேவன் வெளிப்படுத்துகிற அர்ப்பணிப்பின் அளவைத் தீர்மானிக்கிறது. தேவனிடம் முழுமையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும்போது, அது தேவனிடமிருந்து முழுமையான அர்ப்பணிப்பை நமக்குப் பெற்றுக் கொடுக்கிறது. இதுதான் உடன்படிக்கை உறவின் சாராம்சமாக, அடிப்படையாக இருக்கின்றது.

தேவனோடு ஆபிரகாமின் உடன்படிக்கை, தேவனோடு அவனுக்கிருந்த தனிப்பட்ட உறவில், அவனுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருந்தது. யாக்கோபு எழுதிய நிருபத்தில், அவர் இதைக் குறித்துப் பேசுகிறார்.

ஆபிரகாம் ஈசாக்கை பலியாக ஒப்புக்கொடுத்தபோது, அவர் என்ன செய்தார் என்பதைக் குறித்தும், அவர் விரும்பி, கீழ்ப்படிந்து அப்படிச் செய்ததினால் உண்டான பலனைக் குறித்தும் யாக்கோபு எழுதியிருக்கிறார்.

நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கை பலிபீடத்தின் மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான். விசுவாசம் அவனுடைய கிரியைகளோடே கூட முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.

அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று. அவன் தேவனுடைய சிநேகிதன் என்னப்பட்டான்.  (யாக்கோபு 2:21-23)

இந்த உடன்படிக்கை உறவில் காண்பித்த அர்ப்பணிப்பின் மூலம், ஈசாக்கை பலியாக ஒப்புக்கொடுத்து அந்த அர்ப்பணிப்பை நிறைவேற்றியதன் மூலம், ஆபிரகாம் தேவனுடைய நண்பர் என்று அழைக்கப்பட்டார்.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, கனத்திற்குரிய பெயராக இருக்கின்றது. இதில் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் இதுதான்: உடன்படிக்கைதான், மெய்யான நட்புறவிற்கு வாசலாக இருக்கின்றது.

இரண்டு நபர்கள், ஒருவரோடு ஒருவர் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தும்போது, அவர்களுடைய உடன்படிக்கையின் அடிப்படையில் அவர்கள் வாழும்போது, அங்கே அவர்களுக்கிடையே உண்மையான நட்புறவு கிரியை செய்கின்றது.

இயேசுவே, நீர் என்னை மீட்டிருக்கிறீர். உமக்கு நன்றி. நான் தேவனிடம் என்னை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். தேவனும் தம்முடைய முழுமையான அர்ப்பணிப்பை இந்த உறவில் வெளிப்படுத்துகின்றார். எங்களுடைய உடன்படிக்கை, எங்களுக்கிடையே இருக்கும் உண்மையான நட்புறவிற்கு வாசலாக இருக்கின்றது. நான் கிறிஸ்துவின் சிநேகிதனாயிருக்கிறேன் என்று அறிக்கை செய்கின்றேன். ஆமென்.