ஜூன் 23 , தேவனுடைய வழிகாட்டுதலுக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும்

நான் கிறிஸ்துவின் சிநேகிதனாயிருக்கிறேன்

தேவன் போதிக்கும்படி முற்படும்போது, அவர் தம்முடைய மாணவர்களை அவர்களுடைய குணாதிசியத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்.

அவர்களுடைய கல்வித்தகுதி, அறிவுத்திறன், புத்திசாலித்தனம், சமூக அந்தஸ்து என்பவற்றின் அடிப்படையில் அவர் அவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. தம்மைக் குறித்த அவர்களுடைய இருதயத்தின் சிந்தை என்ன என்று அவர் பார்க்கிறார்.

தம்மைக் குறித்த பயபக்தியுடன் கூடிய கீழ்ப்படிதலும், அர்ப்பணிப்பின் உணர்வும் அவர்களுக்குள் இருக்கிறதா என்று அவர் பார்க்கிறார்.

அது மட்டுமல்ல, தேவன்தான் பாடத்திட்டத்தை தீர்மானிக்கிறார்.

அவர் தனிநபர்களை போதித்து நடத்துகிறார். சங்கீதம் 25:12 சொல்கிறது: “கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்கு தாம் தெரிந்து கொள்ளும் வழியைப் போதிப்பார்.

” நாம் தேர்ந்தெடுப்பதைப்போல, தேவன் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பதில்லை.

வல்லமையானதாகத் தெரிகின்ற தீர்க்கதரிசனங்களையும், வெளிப்பாடு அல்லது தரிசனங்களையும் நோக்கியே நாம் ஓடுகின்றோம். ஆனால் தேவனுடைய பாடத்திட்டம், தாழ்மையாய் தியாகத்தோடு மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதன் மீதும், காண்பிக்கப்பட வேண்டிய உண்மையின் மீதும் கவனம் செலுத்துகிறது.

தேவனுடைய கற்பித்தலுக்கு, நம்மை நாம் அர்ப்பணிக்கும்போது, அங்கே ஒரு ஆச்சரியமான வெகுமதி நமக்கு கிடைக்கின்றது: “கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது.”

நம்முடைய உறவுகளில், யாரை நாம் நம்புகிறோமோ, அவர்களிடம் மட்டுமே நம்முடைய இரகசியங்களை நாம் பகிர்ந்து கொள்கின்றோம்.

அதேபோல, தேவன் தம்முடைய இரகசியங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் என்றால், அது நாம் அவருடைய நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றோம் என்பதற்கு ஒரு ஆதாரமாக இருக்கின்றது.

அது அவருடைய ஸ்கூலில் நாம் பெறுகின்ற பட்டச் சான்றிதழாக இருக்கின்றது.

தம்முடைய சீஷர்களோடு இயேசு கொண்டிருந்த உறவில், இந்தச் சத்தியம் மிகவும் அழகாக விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது.

மிகவும் கண்டிப்பான ஒரு ஒழுக்கக் கட்டுப்பாட்டின் வழியாக, மூன்று வருடங்கள், அவர் அவர்களை நடத்தி வந்தார்.

அதற்குப் பிறகு அவர் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்கிறதில்லை.

ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறிய மாட்டான்.

நான் உங்களை சிநேகிதர் என்று சொல்கிறேன். ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவான் 15:15). முதலில் இயேசு, பிதாவாகிய தேவனிடம் கொடுத்திருந்த பூரண அர்ப்பணிப்பின் மூலம், அவரிடமிருந்து கற்றுக் கொண்டார்.

பிறகு, இயேசு பிதாவாகிய தேவனிடமிருந்து தாம் கற்றுக் கொண்ட அனைத்தையும், தம்மைப்போலவே ஒப்புக்கொடுத்தவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

இப்பொழுதும் தேவன் தம்முடைய மாணவர்களை இந்த அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கின்றார்.

அவருடைய நிபந்தனைகளோ அல்லது அவருடைய பாடத்திட்டமோ மாறி விடவில்லை.

இயேசுவே, நீர் என்னை மீட்டிருக்கிறீர். உமக்கு நன்றி. கர்த்தருடைய ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கும், அவருடைய கற்பித்தலும் என்னை முழுமையாய் அர்ப்பணிக்கின்றேன். அதன் மூலம் அவருடைய நண்பராய் நான் மாற விரும்புகிறேன். நான் கிறிஸ்துவின் சிநேகிதனாயிருக்கிறேன் என்று அறிக்கை செய்கின்றேன். ஆமென்.