நீதியினால் நமக்கு உண்டாகும் பலன்கள்

 

விசுவாசத்தினால் நான் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன்

 

நீதியானது, கண்களால் பார்க்கக்கூடிய சில நிச்சயமான, உடனடி விளைவுகளை உண்டாக்குகிறது. நாம்
நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் எவ்வளவாய் உணருகிறோமோ, அதைப் பொறுத்துதான், நம்
வாழ்க்கையே இருக்கின்றது. நம் சிந்தை, நம் உறவுகள், கிறிஸ்தவ ஜீவியத்தில் நம் செயல்பாடுகள் என
எல்லாமே அதைத்தான் சார்ந்திருக்கிறது.

 

நீதிமொழிகள் 28:1 இவ்வாறு சொல்கிறது: “ஒருவனும்
தொடராதிருந்தும், துன்மார்க்கர் ஓடிப் போகிறார்கள். நீதிமான்களோ சிங்கத்தைப்போல
தைரியமாயிருக்கிறார்கள்.” இன்றைக்கு சில கிறிஸ்தவர்களே தைரியமாய் இருக்கிறார்கள். ஆனால்
பெரும்பாலானோர் கோழைகளாய், பரிதபிக்கத்தக்கவர்களாய் இருக்கின்றனர். பிரச்சனைகளையும்,
போராட்டங்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலை வரும்போது, அவர்கள் பின்வாங்கி விடுகின்றனர்.

 

தேவனுடைய பார்வையில் அவர்கள் நீதிமான்களாய் இருக்கின்றனர், இயேசுகிறிஸ்துவின் நீதியையே
உடையவர்களாய் இருக்கின்றனர் என்பதை உணரத் தவறுவதுதான், இதற்கான வேர்க்காரணமாக
இருக்கின்றது. இந்த வேத சத்தியத்தை நாம் விசுவாசித்து ஏற்றுக் கொள்ளும்போது, அது நம்மை
தைரியவான்களாய் ஆக்குகிறது.

 

நீதியினால் உண்டாகக்கூடிய மற்ற பலன்களையும் நாம் பார்ப்போம். ஏசாயா 32:17 சொல்கிறது,
“நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும், சுகமுமாம்.” நீதியினால் நமக்கு
உண்டாகக்கூடிய மூன்று பலன்களை இவ்வசனம் பேசுகிறது: சமாதானம், அமரிக்கை, சுகம். இயேசு
கிறிஸ்துவின் நீதியையே உடைய நீதிமான்களாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை நாம்
அறிந்துணரும்போது, இந்த பலன்கள் நமக்கு உண்டாகின்றன.

 

ரோமர் 14:17 சொல்கிறது: “தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல. அது நீதியும் சமாதானமும்
பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.” ஆக, சமாதானம், அமரிக்கை, சந்தோஷம்,
நிச்சயம், சுகம் என்பவைகளெல்லாம் நீதியினால் விளைகின்ற பலன்களாய் இருக்கின்றன.

 

விசுவாசத்தினால் உண்டாகும் இந்த நீதியை நாம் பெற்றுக் கொள்ளவில்லை என்றால், இந்த பலன்களை அடைய முடியாதபடி
நாம் போராடிக் கொண்டிருப்போம். நம் போராட்டம் வீணாய் முடியும். இந்த பலன்களை நாம் அடைய
மாட்டோம். சந்தோஷமாய் இருக்கும்படி, சமாதானமாய் வாழும்படி, நிச்சய உணர்வை உடையவர்களாய்
சுகமாய் வாழும்படி கிறிஸ்தவர்கள் முயற்சிப்பதைப் பார்க்கும்போது, அது பரிதாபமாக இருக்கின்றது.

 

காரணம், அவர்கள் அப்படி வாழ வேண்டும் என்று யாரோ ஒருவர் அவர்களிடம் அப்படிச் சொல்லியிருக்கின்றனர். என்
அனுபவம் இதுதான். பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், விசுவாசத்தினால் வரும் நீதியையும் கிறிஸ்தவர்கள்
மெய்யாகவே பெற்றுக் கொள்ளூம்போது, இந்த நீதியின் பலன்கள் தானாகவே அவர்களை வந்தடையும்.

 

இயேசுகிறிஸ்துவின் நீதியினால் தாங்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம் என்று ஜனங்களை உணரச்
செய்வதுதான், இங்கு திறவுகோலாயிருக்கிறது.

 

இயேசுவே, சிலுவையில் உம்மையே தியாகபலியாய் ஒப்புக் கொடுத்தீர். உமக்கு நன்றி. இயேசுவின் மூலம்
எனக்கு உண்டாயிருக்கிற நீதியினால், எனக்குள் தைரியமும், சமாதானமும், அமரிக்கையும், சுகமும்,
நிச்சயமும் உண்டாயிருக்கிறது என்று நான் அறிக்கை செய்கிறேன். நான் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment