மார்ச் 3, முற்றிலும் தேவனுக்கு ஒப்புக்கொடுத்துக் கீழ்ப்படியுங்கள்

என் சரீரம், இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது. அது தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகின்ற ஒரு ஆலயமாக இருக்கின்றது

நாம் இந்த அறிக்கையைச் செய்யும்போது, இதன் வார்த்தைகளை உணர்ந்தவர்களாய் செய்ய வேண்டும். இந்த வார்த்தைகளின்படி, அப்படியே நாம் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

கிறிஸ்தவ ஜீவியம் என்பது, முற்றிலுமான, முழுமையான ஒரு அர்ப்பணிப்பு உள்ள ஜீவியமாக இருக்கின்றது. ‘முற்றிலும்’ என்றால், ‘முழுமையான, அடியோடு’ என்று அர்த்தம்.

ஆங்கிலத்தில் இது ‘ரேடிக்கல் (radical)’ என்ற வார்த்தையாக வருகின்றது. யோவான் ஸ்நானகன் சுவிசேஷத்தையும், இயேசுவையும் அறிமுகப்படுத்தியபோது, அவன் இவ்வாறு சொன்னான்:

“இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே (வேரிலேயே) வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்” (மத்தேயு 3:10).

தேவன் மரத்தினுடைய ஒரு சில கிளைகளை வெட்டியெறியப் போவதில்லை. அல்லது, மரத்தின் தண்டைக்கூட அவர் வெட்டப் போவதில்லை. அவர் நேரடியாக வேருக்கே சென்று விட்டார்.

ஒரு மரம் நல்ல கனிகளைக் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம். ஆகையால் ஒரு மரம் நல்ல கனிகளைக் கொடுக்கவில்லை என்றால், அவர் அதை வெட்டி எறிந்து விடுவார். அதை அவரே சொல்லியிருக்கிறார்.

முற்றிலுமாய் அடியோடு மாறக்கூடிய ஒரு போக்கு, இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் நிறையவே காணப்படுகிறது. இந்த சிந்தையை சரியான திசையில் ஊக்குவிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

உண்மையைச் சொன்னால், முந்தின தலைமுறையினராகிய நாம், பெரும்பாலும் சமரசம் செய்து கொள்கிறோம். அடியோடு மாற வேண்டும் என்ற சிந்தையைத் தவிர்க்கின்றோம். எனவே அடியோடு மாற வேண்டிய விஷயங்களுக்கு நேராக நம்மை அழைக்கின்ற பரிசுத்த ஆவியானவரோடு இணங்கி, நாம் ஒத்துழைக்க வேண்டும்.

அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். (ரோமர் 8:11)

நம்மை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தக்கூடிய வார்த்தைகளை இங்கு பவுல் எழுதுகிறார். கல்லறையிலிருந்து இயேசுவின் மரித்துப்போன சரீரத்தை தேவனுடைய ஆவியானவர், பரிசுத்த ஆவியானவர்தான் உயிரோடு எழுப்பினார்.

இப்பொழுது உங்களுடைய சரீரத்திற்குள் அதே பரிசுத்த ஆவியானவர் வாழ்கின்றார் என்றால், உங்களுடைய சரீரத்தில் உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் தம்முடைய வல்லமையின் மூலம் நிச்சயம் செய்வார்.

அவர் அதை அதிகமாகவே செய்வார். இது நம்மை அடியோடு மாற்றக்கூடிய வல்லமையான ஒரு சத்தியமாயிருக்கிறது!

இயேசுவின் இரத்தத்திற்காகவும், எனக்குள் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் செய்கின்ற கிரியைக்காகவும், கர்த்தாவே உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரோடு இணங்கி ஒத்துழைக்கின்ற விஷயத்தில், நான் அவருக்கு அடியோடு கீழ்ப்படியப் போகிறேன். காரணம், என் சரீரம், இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது, தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகின்ற ஒரு ஆலயமாக இருக்கின்றது. ஆமென்.