வேதனையிலிருந்து விடுதலை கிடைத்தது

 

என் சரீரத்தின் அவயங்களை தேவனுடைய நீதியின் ஆயுதங்களாக,
அவருடைய பணிக்கென்றும், அவருடைய மகிமைக்கென்றும்
அவரிடம் இணங்கச் செய்து அர்ப்பணிக்கின்றேன்

 

பல வருடங்களாக, லண்டனில் ஒரு சபையின் மேய்ப்பராக, நான் ஊழியம் செய்து கொண்டிருந்த
நேரத்தில், மனச்சோர்வு மற்றும் விரக்தியின் உணர்வுகளுக்கு எதிராக பயங்கரமான ஒரு போராட்டம்
எனக்கு இருந்தது. அது என்னைப் பாரப்படுத்தியது. அது என்னை மனச்சிறையில் அடைத்தது.

 

அது என்னை நம்பிக்கையின்மை மற்றும் தோல்வியின் உணர்வுகளுக்குள் கொண்டு சென்றது. உங்களுக்கும்
இப்படிப்பட்ட போராட்டம் இருந்திருக்கலாம். எனக்குத் தெரிந்த எல்லா வழிமுறைகளைக் கொண்டும், நான்
இந்தச் சூழ்நிலையை எதிர்த்துப் போராடினேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. நான் தோற்றுக்
கொண்டிருந்தேன்.

 

அந்த நேரத்தில் ஏசாயா 61:3-ம் வசனம் என் கண்களில் பட்டது. நான் அதை வாசித்தேன்:
“சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்படுத்தவும் (ஆறுதல்படுத்தவும்)…………ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக,
துதியின் உடையைக் கொடுக்கவும்……” இந்த வார்த்தைகளை நான் வாசித்தபோது, “இது உன்னுடைய பிரச்சனை!” என்பதை பரிசுத்த
ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார். அப்பொழுது வெளிச்சம் எனக்குள் வெள்ளமாய் பாய்ந்தோடியதை
நான் உணர்ந்தேன்.

 

நான் எனக்கு எதிராக யுத்தம் செய்து கொண்டிருக்கவில்லை, என்னை
வேதனைப்படுத்தி, ஒடுக்கிக் கொண்டிருந்த ஒரு தீய ஆவிக்கு எதிராக யுத்தம் செய்து கொண்டிருந்தேன்
என்பதை நான் உணர்ந்தேன். நான் அதை உணர்ந்தபொழுதே, 80 சதவீத வெற்றி எனக்குக் கிடைத்து
விட்டது என்றுதான் நான் நினைத்தேன். இன்னும் ஒரே ஒரு வசனம்தான் எனக்குத் தேவைப்பட்டது.

 

“கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்கிறவன் எவனோ, அவன் இரட்சிக்கப்படுவான் (விடுதலை
செய்யப்படுவான்)” (யோவேல் 2:32). இவ்விரண்டு வேதவசனங்களையும் ஒன்றாய் சேர்த்து, நான் ஜெபித்தேன்: “தேவனே, பாரத்தின்
ஆவியினால் நான் ஒடுக்கப்படுகிறேன் என்பதை நீர் எனக்குக் காண்பித்திருக்கிறீர். இப்பொழுது நான்
உம்மிடம் வருகின்றேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை நான் தொழுது கொள்கிறேன்.

 

என்னை இரட்சியும். என்னை விடுதலை செய்யும்.” ஒடுக்குகிற ஆவியின் பிடியிலிருந்து தேவன் என்னை
விடுதலையாக்கினார். அதற்குப் பிறகு என்னுடைய மனதின் சிந்தையை ஒழுங்குபடுத்த வேண்டியது என்
பொறுப்பாயிருந்தது. எதிர்மறையானவைகளையே சிந்திப்பது என் பழக்கமாயிருந்தது. அது என்
இயல்பாயிருந்தது. அந்த இயல்பு, இயேசுவின் மீதான என் விசுவாசத்தை மறுதலிக்கின்றது என்பதை
தேவன் எனக்குக் காண்பித்தார்.

 

என் மனதை ஒழுங்குபடுத்தி, ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க
வேண்டியது என் வேலையாயிருந்தது. அதற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் எதிர்மறையான,
விரக்தியான, தோல்வியான, நம்பிக்கையற்ற சிந்தனை எனக்குள் வரும்போது, நான் அதை இயேசுவின்
நாமத்தில் நிராகரித்தேன். வேதவசனத்திலிருந்து ஒரு ஆக்கப்பூர்வமான அறிக்கையைச் செய்து, அதை
இடம் மாற்றினேன்.

 

பல வருடங்களாக நான் இதைத் தொடர்ந்து செய்து வந்தேன். பல வருடங்களுக்குப்
பிறகு, என்னுடைய உள்ளான எண்ணப்போக்கே, சிந்தையே முற்றிலும் மாறி விட்டது. நான் முற்றிலும்
வித்தியாசமான ஒரு மனுஷனாய் மாறினேன்.

 

சிலுவையில் நீர் அடைந்த வெற்றிக்காக, இயேசுவே, உமக்கு நன்றி. எல்லா வகையான
வேதனைகளிலிருந்தும் நான் விடுதலையாக்கப்பட்டிருக்கிறேன் என்று நான் அறிக்கை செய்கிறேன்.

என் சரீரத்தின் அவயங்களை தேவனுடைய நீதியின் ஆயுதங்களாக,
அவருடைய பணிக்கென்றும், அவருடைய மகிமைக்கென்றும்
அவரிடம் இணங்கச் செய்து அர்ப்பணிக்கின்றேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment