மார்ச் 9, கிருபையைத் தெரிந்துகொள்ளுங்கள்

என் சரீரத்தின் அவயங்களை தேவனுடைய நீதியின் ஆயுதங்களாக, அவருடைய பணிக்கென்றும், அவருடைய மகிமைக்கென்றும் அவரிடம் இணங்கச் செய்து அர்ப்பணிக்கின்றேன்

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்கிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. (ரோமர் 12:1).

நம்முடைய சித்தத்தை ஒன்றின் மீது நிலைநிறுத்தி, பிறகுதான் அதற்கு இணங்கிச் செயல்படுகிறோம். இந்த வரிசையில்தான் இது நடக்கின்றது. ஆனால் எதன் மீது நம் சித்தத்தை நிலைநிறுத்துகிறோம் என்பதுதான் கேள்வியே.

நாம் சித்தம் கொள்ளவில்லை என்றால், ஒரு பழக்கமாக, தவறான விஷயத்திற்கு இணங்கிச் செயல்படுவோம். நம்முடைய சரீரத்தையும், அதன் அவயங்களையும், பாவத்திற்கு ஒப்புக்கொடுப்பதை நாம் முதலில் நிறுத்த வேண்டும்.

நாம் அவிசுவாசிகளாய் வாழ்ந்தபோது, பாவ வாழ்க்கைமுறையைத்தான் பின்பற்றினோம். ஆனால் இப்பொழுது அதற்கு முடிவுகட்டும் நேரம் வந்து விட்டது. “அவ்வளவுதான். இனி நான் அப்படி வாழ மாட்டேன்,” என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

நம்முடைய சித்தத்தை தேவனுக்கு இணங்கச் செய்து விட்டோம் என்றால், நம்முடைய சரீரத்தின் அவயங்களை சாத்தானுக்கு இணங்கச் செய்ய மாட்டோம்.

“நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல், கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது” (ரோமர் 6:14). இந்த வேதவசனம் மிகவும் ஆழமான ஒரு தாக்கத்தை உண்டாக்கக்கூடியதாய் இருக்கிறது.

நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை, மாறாக, கிருபையின் கீழ் இருக்கின்றோம் என்று பவுல் சொல்கிறார். ஒன்று, நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்வோம். அல்லது நாம் கிருபையின் கீழ் வாழ்வோம்.

ஒரே நேரத்தில், இரண்டின் கீழும் நாம் வாழ முடியாது. நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்கின்றோம் என்றால், நாம் கிருபையின் கீழ் வாழவில்லை என்று அர்த்தம். நாம் கிருபையின் கீழ் வாழ்கின்றோம் என்றால், நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழவில்லை என்று அர்த்தம்.

அது மட்டுமல்ல, நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லாதபடியால், பாவம் நம் மீது ஆளுகை செய்ய முடியாது என்றும் பவுல் சொல்கிறார். அப்படியென்றால், நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழும்போது, பாவம் நம் மீது ஆளுகை செய்ய முடியும் என்ற வாக்கியமும் உண்மையாயிருக்கிறது.

இது பலருக்கு அதிர்ச்சி தரக் கூடிய வாக்கியமாக இருக்கிறது. ஆனால் இதைத்தான் வேதாகமம் மாறுபடாமல், தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது.

நாம் சில சட்டதிட்டங்களால் நடத்தப்படுவதில்லை. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். நாம் அவரை நேசிக்கிறபடியால், அவருக்குக் கீழ்ப்படிகிறோம். இப்பொழுதிலிருந்து பயம் அல்ல, அன்புதான் நம்முடைய கீழ்ப்படிதலுக்கான ஒரு உந்துசக்தியாக இருக்கிறது.

தேவன் நம்மை அடிமைகளாய் உருவாக்கவில்லை. நியாயப்பிரமாணம்தான் அதைச் செய்தது. தேவன் நம்மை தம்முடைய மகன்களாய், மகள்களாய் உருவாக்கியிருக்கிறார்.

இப்பொழுது நாம் நியாயப்பிரமாணத்தைத் தெரிந்துகொள்கிறோமா அல்லது தேவனுடைய கிருபையைத் தெரிந்துகொள்கிறோமா என்பதுதான் கேள்வியே.

    

சிலுவையில் நீர் அடைந்த வெற்றிக்காக, இயேசுவே, உமக்கு நன்றி. நான் கிருபையைத் தெரிந்து கொண்டு, என்னுடைய சித்தத்தை தேவனுக்கு இணங்கச் செய்கிறேன். என் சரீரத்தின் அவயங்களை தேவனுடைய நீதியின் ஆயுதங்களாக, அவருடைய பணிக்கென்றும், அவருடைய மகிமைக்கென்றும், அவரிடம் இணங்கச் செய்து அர்ப்பணிக்கின்றேன். ஆமென்.