விசுவாசத்தை அறிக்கை செய்யுங்கள்

 

மரணமே நேரிடுகிறதாயிருந்தாலும், நான் என் ஜீவனையும் பெரிதாக எண்ணாமல், ஆட்டுக்குட்டியானவராகிய
இயேசுவின் இரத்தத்தினாலும், என் சாட்சியின் வார்த்தையினாலும் சாத்தானை மேற்கொண்டு, ஜெயிக்கின்றேன்

 

பல கிறிஸ்தவர்கள், தங்களுடைய கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பார்கள் என்றால், வழி நெடுக நிறைய எதிர்மறையான
அறிக்கைகளை அவர்கள் தங்கள் வாயினால் செய்து வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள்
கர்த்தராகிய இயேசு இதை எனக்குக் காண்பித்தார். உங்களுடைய தோல்விகள், ஏமாற்றங்கள், உங்களால் செய்ய இயலாத
விஷயங்கள் என பல எதிர்மறையான காரியங்களைக் குறித்து நீங்கள் பேசியிருக்கலாம். ஆனால் பாருங்கள், நம்முடைய
அறிக்கைகள்தான், நாம் எங்கே செல்கின்றோம் என்பதைத் தீர்மானிக்கின்றன.

 

தேவனால் வாக்குப் பண்ணப்பட்ட நல்ல தேசத்தை வேவு பார்க்கும்படி மோசே 12 பேரை அனுப்பினான். இந்தச்
சம்பவத்தில், இந்த முக்கியமான சத்தியத்தைக் குறித்த தெளிவான ஒரு எடுத்துக்காட்டை நாம் பார்க்க முடியும். இரண்டு
பேர், அதைக் குறித்த நல்ல அறிக்கையைச் செய்தார்கள். மீதி பத்து பேர், எதிர்மறையான அறிக்கையைச் செய்தனர்.

 

இஸ்ரவேல் ஜனங்களில் பெரும்பாலானோர், “நம்மால் அதை சுதந்தரிக்க முடியாது,” என்ற எதிர்மறையான
அறிக்கையைத்தான் விசுவாசித்தனர். ஆனால் “நம்மால் அதை சுதந்தரிக்க முடியும்,” என்பது நல்ல, ஆக்கப்பூர்வமான
அறிக்கையாக இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும், தங்களுடைய அறிக்கையின் பிரகாரமாகவே அதன் பலனைப்
பெற்றுக் கொண்டனர். “நம்மால் முடியாது” என்று சொன்னவர்களால், அதை அடைய முடியவில்லை.

 

மாறாக, “நம்மால் நிச்சயமாக முடியும்,” என்று சொன்னவர்கள், அதை நிச்சயமாக அடைந்தார்கள்.
நீங்கள் சில எதிர்மறையான வார்த்தைகளைச் சொல்லியிருக்கலாம். இயேசுவை மகிமைப்படுத்தாத சில
வாக்கியங்களை நீங்கள் பேசியிருக்கலாம். உங்களை முடக்கக்கூடிய, தோல்விக்கு நடத்தக்கூடிய ஏமாற்றங்கள் மற்றும்
விரக்தியான விஷயங்களில் நீங்கள் தங்கியிருந்திருக்கலாம். நாம் தோல்வியை அறிக்கை செய்தால், தோல்விதான் நம்
பங்காயிருக்கும். நாம் விசுவாசத்தை அறிக்கை செய்வோம் என்றால், தேவன் நம் பங்காயிருக்கிறார்.

 

தேவனிடம் இவ்வாறு அறிக்கை செய்யுங்கள், “கர்த்தராகிய இயேசுவே, என்னை மன்னியும். என்னுடைய அவிசுவாசம் மற்றும் எதிர்மறையான
சிந்தையின் மூலம், நான் பல முறை உம்முடைய கரங்களை கட்டிப் போட்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் நீர்
செய்யக்கூடிய அற்புதமான விஷயங்களுக்கு நான் ஒரு தடையாய் இருந்திருக்கிறேன். நான் உம்மை
மட்டுப்படுத்தியிருக்கிறேன். என்னை மன்னியும்.”

 

1 யோவான் 1:9 சொல்கிறது: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மை சுத்திகரிப்பதற்கு அவர்
உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”

 

எதிர்மறையான அறிக்கைகளை நிராகரித்து விட்டு, அந்த இருள் மற்றும் தனிமை எனும் பள்ளத்தாக்கிலிருந்து
நீங்கள் வெளியே வந்ததற்காக தேவனுக்கு நன்றி சொல்லி, “எனக்குள் வாசம் செய்து, என்னை பெலப்படுத்துகிற
கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு,” என்று அறிக்கை செய்யுங்கள் (பிலிப்பியர் 4:13).

 

தேவனே, ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவின் இரத்தத்திற்காக உமக்கு நன்றி. எனக்குள் இருந்து, என்னைப்
பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு என்று நான் அறிக்கை செய்கிறேன்.
மரணமே நேரிடுகிறதாயிருந்தாலும், நான் என் உயிரையும் பெரிதாக எண்ணாமல், ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவின்
இரத்தத்தினாலும், என் சாட்சியின் வார்த்தையினாலும் சாத்தானை மேற்கொண்டு, ஜெயிக்கின்றேன் என்று அறிக்கை

செய்கிறேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment