நம் சரீரத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்போம்

 

என் சரீரம் கர்த்தராகிய இயேசுவுக்கு உரியது; கர்த்தராகிய இயேசுவும் என் சரீரத்திற்கு உரியவர்

 

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக
ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்கிறேன்.
இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. (ரோமர் 12:1).

 

ரோமர் நிருபத்தின் முந்திய அதிகாரங்களில், நம் இரட்சிப்பைக் குறித்த ஆழமான, அஸ்திபாரமான சத்தியங்களை
நாம் கற்றுக் கொள்கிறோம். இப்பொழுது நாம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இந்த சத்தியங்களின் பயன்பாடு நம்
சரீரங்களிலிருந்து ஆரம்பிக்கின்றது. நாம் நம் சரீரங்களை ஜீவபலியாய் தேவனிடத்தில் அர்ப்பணிக்க வேண்டும்.
“நம் ஆத்துமாதான் நமக்கு முக்கியம். நம் சரீரம் அவ்வளவு முக்கியமானதல்ல,” என்று நாம் சிந்திக்கலாம்.

 

இப்பொழுது நான் ஒரு எடுத்துக்காட்டை உங்களுடைய கண்கள் முன்பாக கொண்டு வருகின்றேன். ஒரு பாத்திரத்தில்
தண்ணீர் வேண்டுமென்று நான் கேட்டால், எனக்கு அந்த பாத்திரமும், அதிலுள்ள தண்ணீரும் சேர்ந்துதான் கிடைக்கும்.
பாத்திரம் இல்லாமல், தண்ணீர் மட்டும் எனக்குக் கிடைக்காது. தேவனும் அதைத்தான் சொல்கின்றார். அவருக்கு
பாத்திரமாகிய நம் சரீரமும் வேண்டும். அதிலுள்ள ஆத்துமாவும் வேண்டும். முதலில், நம் சரீரத்தைக் கொடுக்காமல், நம்
ஆத்துமாவை மட்டும் நாம் கொடுக்க முடியாது.

 

நம் சரீரங்களை ஜீவ பலியாய் ஒப்புக் கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு என்ன அர்த்தம்? பழைய ஏற்பாட்டில்,
பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட மிருகங்கள், கொல்லபட்டன. பிறகு அவை பலிபீடத்தில் கிடத்தப்பட்டன. இபொழுது தேவன்
சொல்கிறார்: “பழைய ஏற்பாட்டு பலிகளைப் போலவே, உன் சரீரமும் முழுமையாய் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட
வேண்டும். ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும்.

 

நீ உன் சரீரத்தை செத்துப்போன ஒன்றாக அல்ல, ஜீவ
பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். உன் சரீரம் எனக்குச் சொந்தமானதாய் மாறும்போது, நீயே எனக்குச்
சொந்தமானவனாய் மாறி விடுகிறாய். உன்னுடைய முழுமையும் எனக்குச் சொந்தமாகி விடுகிறது.”
மத்தேயு 23-ம் அதிகாரத்தில், இயேசு பரிசேயர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். எது தேவனுடைய பார்வையில்
மிகவும் முக்கியமானது என்று இயேசு அவர்களுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். பலிபீடத்தைக் காட்டிலும், பலி
தான் முக்கியமானது என்று அவர்கள் சொன்னார்கள். இயேசு சொன்னார்: “மதிகேடரே, குருடரே, எது முக்கியம்?
காணிக்கையோ (பலியோ), காணிக்கையைப் (பலியைப்) பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?” (மத்தேயு 23:19).

 

பலிபீடம்தான், அதன் மீது வைக்கப்பட்ட பலிப் பொருளை பரிசுத்தமாக்குகிறது. தேவனுடைய பலிபீடத்தில் வைக்கப்படுவதன் மூலம்,
பலிப்பொருளானது பரிசுத்தமாக்கப்படுகிறது. நம் சரீரங்களைக் குறித்தும் இதுதான் உண்மையாயிருக்கிறது. நாம் நம்
சரீரங்களை தேவனுடைய பலிபீடத்தில் வைத்து ஒப்புக்கொடுக்கும்போது, அவை பரிசுத்தமாகின்றன. அவை
தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுகின்றன. இதை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். ஆம்,
நாம் ஒவ்வொருவரும் நம் சரீரங்களை தேவனிடம் அர்ப்பணிக்க வேண்டும்.

 

 

கர்த்தராகிய இயேசுவே, என் சரீரத்திற்கு வேண்டிய யாவற்றையும் நீர் முன் கூட்டியே ஆயத்தம் செய்து வைத்திருக்கிறீர்.
உமக்கு நன்றி. நான் என்னையே ஜீவபலியாய் தேவனுக்கு அர்ப்பணிக்கின்றேன். என் சரீரம் கர்த்தராகிய இயேசுவுக்குரியது.

கர்த்தராகிய இயேசுவும் என் சரீரத்திற்கு உரியவர் என்று நான் அறிக்கை செய்கிறேன்.

 

ஆமென்....

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment