மார்ச் 28, தேவன், நொறுங்குண்ட இருதயங்களை சுகமாக்குகிறார்

தேவன் ஒருபோதும் தம் ஜனங்களைக் கைவிட மாட்டார்

சங்கீதம் 147:2-3 வசனங்களில், நாம் இவ்வாறு வாசிக்கின்றோம்: “கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார். துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார். இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்.

அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.” இவை மிகவும் அழகான வார்த்தைகள்.

இதில் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லக்கூடிய, நம்மை மிகவும் உற்சாகப்படுத்தக்கூடிய விஷயம் என்னவென்றால், நம்முடைய வாழ்நாள் காலத்ததில், இந்தத் தலைமுறையில் இவை நிறைவேறிக் கொண்டிருக்கின்றன என்பதுதான்.

நான் இந்த வார்த்தைகளின் நிறைவேறுதலை கண்டிருக்கிறேன். திரும்பவும் சொல்கிறேன், இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு, இஸ்ரவேல் தேசம் மறுபடியும் பிறந்து உருவான அந்த நேரத்தில், 1948-ம் வருடம், மே மாதத்தில், யூதர்கள் வாழ்ந்த எருசலேமில் நான் அங்குதான் இருந்தேன்.

இது எனக்குக் கிடைத்த விசேஷமான ஒரு சிலாக்கியம் என்றுதான் நினைக்கிறேன். இன்று கர்த்தராகிய தேவன் எருசலேமைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார். வெளியே எங்கும் சிதறிக் கிடக்கின்ற இஸ்ரவேல் ஜனங்களை அவர் திரும்பக் கூட்டிச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

நொறுங்குண்ட இருதயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களை அவர் சுகமாக்குகிறார். அவர்களுடைய காயங்களை அவர் கட்டுகிறார்.

        தேவனிடம் திரும்புகிற எல்லோருக்கும் இது ஒரு நல்ல செய்தியாக இருக்கிறது. இது தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரேலுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கின்றது. இயேசுகிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கும்கூட இது ஒரு நற்செய்தியாக இருக்கின்றது. காரணம், இஸ்ரேலை திரும்பக் கூட்டிச் சேர்க்கிற அதே தேவன், சபையையும் திரும்ப தன்னிடமாய் கூட்டிச் சேர்க்கிறார். நம்முடைய சுதந்தரத்திற்குள் அவர் நம்மைக் கொண்டு வருகின்றார். அவர் நம்முடைய காயங்களை ஆற்றுகிறார். நம்முடைய நொறுங்குண்ட இருதயங்களை அவர் சுகமாக்குகிறார்.

இது பரிசுத்த ஆவியானவர் நமக்குள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்கின்ற கிரியையாக இருக்கின்றது. இது பரிசுத்த ஆவியானவர் இடைவிடாமல், தொடர்ச்சியாய் நமக்குள் செய்கின்ற ஒரு விசேஷமான ஊழியமாக இருக்கின்றது.

நொறுங்குண்ட இருதயங்களை அவர் சுகமாக்குகிறார். காயப்பட்ட இருதயமுடையவர்களுக்குச் செய்யப்படுகிற ஒரு ஊழியமாக இது இருக்கிறது. உங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு காயம் இருக்கிறதா? ஆம் என்றால், தேவனிடம் திரும்புங்கள்.

“தேவனே, இது காயங்களை ஆற்றுகிற நேரம். இது சிதறிக் கிடக்கிறவைகளை திரும்பக் கூட்டிச் சேர்க்கிற ஒரு நேரம். நொறுங்குண்ட இருதயங்களை நீர் சுகமாக்குகிறீர்.

அவர்களுடைய காயங்களை நீர் கட்டுகிறீர். கர்த்தாவே, எவ்வளவு காலமாய், என் இருதயத்தில் நான் இந்தக் காயத்தை சுமந்து கொண்டு வருகின்றேன் என்பது உமக்குத் தெரியும். என்னை சுகமாக்கும்,” என்று அவரை நோக்கி ஜெபியுங்கள்.

பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய விரலாய், நம் கண்களுக்குத் தெரியாத விதத்தில், நமக்குள் நுழைந்து, நம் இருதயத்தின் காயத்தைத் தொட்டு சுகமாக்குவார். வேறு எந்த அறுவை சிகிச்சை நிபுணரும் இதைச் செய்ய முடியாது.

ஆனால் பரிசுத்த ஆவியானவரால் இதைச் செய்ய முடியும். அவரால் நமக்கு சுகத்தையும், மறுவாழ்வையும் கொடுக்க முடியும்.

                                                                                                   

தேவனே, நீர் இஸ்ரவேலுக்கு உம்மையே அர்ப்பணித்திருக்கிறீர். உமக்கு நன்றி. இப்பொழுதே நான் அந்த தேசத்திற்காக பரிந்து மன்றாடி ஜெபிக்கின்றேன். இஸ்ரேலின் நொறுங்குண்ட இருதயத்தை தேவன் சுகமாக்கிக் கொண்டிருக்கிறார், அதன் காயங்களை அவர் ஆற்றிக் கொண்டிருக்கிறார். அதே தேவன் எனக்கு சுகத்தையும், மறுவாழ்வையும் நிச்சயம் கொடுப்பார் என்று நான் அறிக்கை செய்கின்றேன். காரணம், அவர் தம்முடைய ஜனங்களை ஒருபோதும் கைவிட மாட்டார். ஆமென்.