மார்ச் 31, தேவன், உடன்படிக்கையின் தேவன்

தேவன் ஒருபோதும் தம் ஜனங்களைக் கைவிட மாட்டார்

சங்கீதம் 89:34-ல், தேவன் சொல்கிறார்: “என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.” தேவன் ஒரு உடன்படிக்கையைச் செய்கிறார் என்றால், அவர் அதை ஒருபோதும் மீற மாட்டார்.

ஒருபோதும் மாறாத இந்த உண்மையை, இந்தச் சத்தியத்தை நாம் உறுதியாய் பிடித்துக் கொள்ள வேண்டும். இது அத்தியாவசியமானது. இதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. நாம் இதை அறிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய வேதாகமத்தில், இரண்டு உடன்படிக்கைகள் இருக்கின்றன. ஒன்று, பழைய உடன்படிக்கை. இன்னொன்று, புதிய உடன்படிக்கை. தேவனுடைய வெளிப்பாட்டின் சாரம், உடன்படிக்கையில் மையங்கொண்டிருக்கிறது.

தேவன் தம்முடைய உடன்படிக்கையை முறித்துக் கொள்வார் என்றால், நமக்கு எந்த நம்பிக்கையும் இருக்காது. என்னுடைய தனிப்பட்ட உறுதியான நம்பிக்கை இதுதான்:

இஸ்ரவேலுடன் ஏற்படுத்திய தம்முடைய உடன்படிக்கையை தேவன் முறித்துக் கொள்வார் என்றால், சபையுடன் ஏற்படுத்திய தம்முடைய உடன்படிக்கையை அவர் முறித்துக் கொள்ள மாட்டார் என்று விசுவாசிப்பதற்கு நமக்கு எந்த முகாந்திரமும், எந்தக் காரணமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

“இஸ்ரவேல் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் விழுந்து விட்டது,” என்று நீங்கள் சொல்லலாம். சந்தேகமே இல்லை. அது உண்மைதான். ஆனால் சபை தேவனுக்குக் கீழ்ப்படிந்தது என்று உங்களால் உண்மையாக, நேர்மையாகச் சொல்ல முடியுமா?

 தேவனுடைய பார்வையை முன் வைக்குமளவிற்கு எனக்கு திறன் இல்லை. ஆனால் என்னுடைய ஒரு எல்லைக்குட்பட்ட புரிதலின்படி, நான் இதைச் சொல்கிறேன். இஸ்ரவேல் தேவனிடமிருந்து ஒரு உடன்படிக்கையைப் பெற்றது. தேவனுக்குக் கீழ்ப்படியாமல், மிகவும் மோசமாக அது விழுந்தது.

சபையும் தேவனிடமிருந்து ஒரு உடன்படிக்கையைப் பெற்றது. சபையும் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், இஸ்ரவேலைக் காட்டிலும் மிகவும் மோசமாக, பரிதாபமாக விழுந்தது.

இஸ்ரவேல் திரும்ப மீட்கப்படுவதைக் குறித்து தேவன் என்ன சொல்கிறார்? குறைந்தபட்சம், நான்கு காரியங்களை தேவன் சொல்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

இந்த நான்கு காரியங்கள், இயேசு கிறிஸ்துவின் சபைக்கும் நிச்சயமாக அப்படியே  பொருந்துகின்றன. சபைக்கும் இவை தொடர்புடையவைகளாக, முக்கியமானவைகளாக இருக்கின்றன. இவை நம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவைகளாகவும் இருக்கின்றன.

முதலில், வேதாகமம் உண்மையானது, இன்றைக்கும் தொடர்புடையதாய், பொருத்தமானதாய் இருக்கிறது என்று தேவன் சொல்கிறார்.

இரண்டாவதாக, தேவன் தம் உடன்படிக்கையைக் காக்கின்றார் என்று அவரே சொல்லியிருக்கிறார்.

மூன்றாவதாக, தேவன் சர்வாளுமையுள்ளவர் என்று அவர் நமக்குச் சொல்லியிருக்கிறார்,

நான்காவதாக, இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவர்களுடைய தேசத்தை திரும்ப மீட்டுக் கொடுக்கின்ற நிகழ்வை, இந்தக் காலகட்டத்தின் கடைசி நிகழ்வாக அரங்கேறும்படி தேவன் அதை முன் குறித்திருக்கிறார்.

கர்த்தர் அதைத்தான் சொல்கிறார். இந்தக் காலகட்டத்தின் முடிவோடு தொடர்புடைய ஒவ்வொரு தீர்க்கதரிசனமும், ஒரு முக்கியமான விஷயத்தை மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டிருக்கிறது.

சர்வாளுமையுள்ள தேசமாய் இஸ்ரவேல் தேசம் தன் சொந்த எல்லைகளுக்குள் அமைந்திருப்பதுதான் அது.

தேவனே, நீர் இஸ்ரவேலுக்கு உம்மையே அர்ப்பணித்திருக்கிறீர். உமக்கு நன்றி. இப்பொழுதே நான் அந்த தேசத்திற்காக பரிந்து மன்றாடி ஜெபிக்கின்றேன். தேவன் தம்முடைய உடன்படிக்கைகளைக் காக்கிறார் என்று நான் அறிக்கை செய்கிறேன். தேவன் தம்முடைய ஜனங்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்றும் நான் அறிக்கை செய்கிறேன். ஆமென்.