மே 4, ஆசீர்வாதங்களை நிர்வகிக்கின்றவர் யார்?

நாம் ஆசீர்வாதத்திற்குள் நுழையும்படி, இயேசு சாபமாக்கப்பட்டார்

“ஆபிரகாமின் ஆசீர்வாத சுதந்தரம்” அனைத்தையும் பரிசுத்த ஆவியானவரே நிர்வகிக்கின்றார் (கலாத்தியர் 3:14). இந்தச் சத்தியத்தை விளக்கிக் காண்பிக்கக்கூடிய ஒரு அழகான சம்பவத்தை ஆதியாகமம் 24-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கின்றோம்.

ஆபிரகாம் எவ்வாறு தன் மகன் ஈசாக்கிற்கு ஒரு மணவாட்டியைத் தேர்ந்தெடுத்தான் என்பதை இச்சம்பவம் சொல்கிறது. இது மிகவும் எளிமையான, ஆனால் அழகான ஒரு சம்பவமாயிருக்கிறது. இதில் முக்கியமாக நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் மூன்று பேர்: பிதாவாகிய தேவனை பிரதிபலிகின்ற ஆபிரகாம்; தேவனுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை பிரதிபலிக்கின்ற ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு; மணவாட்டியாகிய ரெபேக்காள். இவள் கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபையைப் பிரதிபலிக்கின்றாள்.

இன்னும் ஒரு நபரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஒரு விதத்தில், அவர் இங்கு மிக முக்கியமான ஒரு நபராய் இருக்கிறார். இந்த நபர், பெயரிடப்படாத வேலைக்காரன்.

இவன் பரிசுத்த ஆவியானவரை பிரதிபலிக்கின்றான். இவர்களை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு, இந்த அதிகாரத்தை நாம் வாசிப்போம் என்றால், இதற்குள் பொதிந்திருக்கும் மிகவும் வல்லமையான,  நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லக்கூடிய சத்தியங்களை அது நமக்கு வெளிப்படுத்தும்.

ஆபிரகாமுக்குச் சொந்தமாயிருந்த சகலமும், அந்த வேலைக்காரனின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் நாம் வாசிக்கின்றோம். இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆபிரகாம் என்ற தகப்பன் மற்றும் அவனுடைய மகன் ஈசாக் என்ற இருவருக்கும் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் அவனே நிர்வகித்து வந்தான்.

இது பரிசுத்த ஆவியானவரைக் குறித்தும் உண்மையாய் இருக்கிறது. அவரே தேவனுடைய சகல பொக்கிஷங்களையும், ஐசுவரியங்களையும் நிர்வகிக்கின்றார். நாம் தேவனுடைய சுதந்தரர். இயேசுகிறிஸ்துவுடன் உடன் சுதந்தராக நாம் இருக்கின்றோம்.

ஆனால் பரிசுத்த ஆவியானவர், நம்முடைய சுதந்தரத்தின் நிர்வாகியாக இருக்கின்றார். பரிசுத்த ஆவியானவரை தவிர்த்து விட்டு, நம்மால் நம்முடைய சுதந்தரத்தைப் பெற முடியாது, அதை அனுபவிக்கவும் முடியாது.

ஆபிரகாமின் பிள்ளைகளாகிய நம்முடைய சுதந்தரத்தைக் குறித்து வேதாகமம் பேசும்போது, ஆவியானவரின் வாக்குத்தத்தத்தை நாம் பெறுவதைக் குறித்து மிகவும் குறிப்பாக சுட்டிக் காண்பித்துப் பேசுகின்றது. அவர் ஒருவர் மட்டுமே, நம்முடைய சுதந்தரமாகிய சகல ஆசீர்வாதங்களுக்குள்ளும் நம்மை நடத்தக்கூடியவராக இருக்கிறார்.

ஆபிரகாமின் ஆசீர்வாதம், “சகல காரியங்களிலும்” இருந்தது (ஆதியாகமம் 24:1). ஆனால் பரிசுத்த ஆவியானவரே அந்த ஆசீர்வாதங்களை நிர்வகிக்கின்றவராக இருக்கின்றார்.

ஆகையால்தான் கலாத்தியர் நிருபத்தில், ஆவியானவரின் வாக்குத்தத்தத்தைப் பெறுவதைக் குறித்து பவுல் மிகவும் குறிப்பாக சுட்டிக் காண்பிக்கிறார். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.      

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே என் சுதந்தரத்தின் நிர்வாகி என்று நான் அறிக்கை செய்கிறேன். ஆவியானவரின் வாக்குத்தத்தத்தை நான் விசுவாசத்தினால் பெற்றுக் கொள்கிறேன். “ஆபிரகாமின் ஆசீர்வாதம்” என் வாழ்க்கையின் சகல காரியங்களின் மீதும் இப்பொழுது இருக்கின்றது என்று நான் அறிக்கை செய்கின்றேன். நான் ஆசீர்வாதத்திற்குள் பிரவேசிக்கும்படி, இயேசு சாபமாக்கப்பட்டார் என்றும் அறிக்கை செய்கிறேன். ஆமென்.