ஏழைகளை அக்கறையோடு விசாரிக்க வேண்டும்


நாம் அவருடைய சம்பூரணத்தில் பங்கடையும்படி,
இயேசு நம்முடைய தரித்திரத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டார்

 

பண விஷயத்தோடு தொடர்புடைய நான்கு தவறான சிந்தனைகளைக் குறித்து நேற்று நாம் பார்த்தோம். இன்னொரு
தவறான மனப்பான்மையும் இருக்கின்றது. அதை நாம் மிகவும் எச்சரிக்கையோடு தவிர்க்க வேண்டும். ஏழைகளைக் குறித்த
தவறான மனப்பான்மைதான் அது. ஏழைகளை இழிவாய் அற்பமாய் எண்ணுவதைக் குறித்தும், நம்முடைய சுய
லாபத்திற்காக ஏழைகளை பயன்படுத்திக் கொள்வதைக் குறித்தும், வேதாகமம் நம்மை தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே
இருக்கிறது.

 

இந்த விஷயத்தை நம்மிடம் எச்சரித்து, அறிவுறுத்திச் சொல்லக் கூடிய வேதவசனங்கள் நிறையவே இருக்கின்றன.
ஆனால் நீதிமொழிகளிலிருந்து ஒரு சில வசனங்களை நாம் பார்ப்போம்:
பிறனை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான். தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். (நீதிமொழிகள்
14:21) ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்
(நீதிமொழிகள் 19:17).

 

ஏழையின் கூக்குரலுக்கு தன் செவியை அடைத்துக் கொள்கிறவன், தானும் சத்தமிட்டு கூப்பிடும்போது கேட்கப்பட
மாட்டான். (நீதிமொழிகள் 21:13).

 

தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான். தன் கண்களை ஏழைக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள்
வரும் (நீதிமொழிகள் 28:27).

 

நீதிமான் ஏழைகளின் நியாயத்தை கவனித்து அறிகிறான். துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான். (நீதிமொழிகள்
29:7).

 

இந்த வசனங்களும், இன்னும் இதே அர்த்தத்தில் பேசுகிற மற்ற வசனங்களும், ஏழைகளின் தேவைகளைக் குறித்து
நாம் அக்கறையாய் விசாரிக்க வேண்டும் என்ற மிகப் பெரிய பொறுப்பை நம் மீது வைக்கின்றது. ஏழைகளைக் குறித்து
அக்கறை கொள்ளுதல் என்பது, நீதியாய் வாழ்வதன் ஒரு முக்கியமான அடையாளமாயிருக்கிறது.

 

இதற்கு அப்படியே நேரெதிராக, ஏழைகள் படும் துன்பங்களைப் பார்க்காமல், தன் கண்களை எடுத்து விடுவதென்பது துன்மார்க்கத்தின் ஒரு
அடையாளமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, ஏழைகளை அக்கறையாய் விசாரிக்கும்போது, அதற்கு ஒரு வெகுமதி
வாக்குப் பண்ணப்பட்டிருக்கிறது. நாம் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, நாம் கர்த்தருக்கே கடன் கொடுக்கிறோம் என்று
சாலமோன் நமக்குச் சொல்லியிருக்கிறார். கர்த்தர் நம்முடைய கடனை திருப்பிச் செலுத்தும்போது, வட்டியையும் சேர்த்துக்
கொடுக்க வேண்டும் என்பதை அவர் மறப்பதில்லை!

 

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. ஏழைகளின் தேவைகளைக் குறித்து நான் அக்கறை
கொள்வேன் என்றும், நான் அவர்களை அக்கறையாய் விசாரிப்பேன் என்றும் நான் தீர்மானிக்கிறேன். காரணம், நான்
அவருடைய சம்பூரண ஐசுவரியங்களில் பங்கடையும்படி, இயேசு என்னுடைய தரித்திரத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டார்.

ஆமென்...