மே 20, மகிமைக்கென்று முன்குறிக்கப்பட்டிருக்கிறோம்

நாம் அவருடைய மகிமையில் பங்கடையும்படி, இயேசு நம்முடைய நிந்தை அவமானத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டார்

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.

எவர்களை முன் குறித்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

இவைகளைக் குறித்து நாம் என்ன சொல்வோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால், நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக் குமாரன் என்றும் பாராமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:29-32)

நாம் இயேசுவோடு அவருடைய மரணத்தில் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வோம் என்றால், நாம் அவருடைய சம்பூரண, அபரிமிதமான, ஏராளம் தாராளமான சுதந்திரத்திற்குள் பிரவேசிக்கின்றோம்.

நாம் தேவனோடு சுதந்தரர்களாகவும், இயேசு கிறிஸ்துவோடு உடன் சுதந்தரர்களாகவும் மாறுகின்றோம். ஆனால் இது படிப்படியாக நடந்து முடிந்திருக்கின்றது.

பவுல் இங்கு ஐந்து படிகளை சுருக்கமாக விளக்கிக் காண்பிக்கிறார். இவையெல்லாம் கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளாக எழுதப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு நிகழ்வுகள், காலத்திற்கு முன்பே நித்தியத்தில் நடந்து முடிந்தன.

தேவன் நம்மை முன்னறிந்தார். அவர் நம்மை முன் குறித்தார். பிறகு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதன் மூலம், தேவன் நம்மை அழைத்தார். நாம் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, கீழ்ப்படிந்தபோது, அவர் நம்மை நீதிமான்களாக்கினார்.

ஆனால் அவர் அங்கேயே நின்று விடவில்லை, அதை நிறுத்தி விடவும் இல்லை. அவர் நம்மை மகிமைப்படுத்தினார். இயேசுவோடு பரலோகத்தில் அவருடைய மகிமையில் பங்கடையும் ஒரு நிலைக்கு அவர் நம்மை உயர்த்தியிருக்கிறார்.

அவர் நம்மை ராஜாக்களாய், ஆசாரியர்களாய் மாற்றியிருக்கிறார். இது எதிர்காலத்தில் நடக்கவில்லை. இது கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒன்றாகும்.

நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளை தேடுங்கள். பூமியிலுள்ளவைகளை அல்ல.

மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால் நீங்கள் மரித்தீர்கள். உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடே கூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். (கொலோசெயர் 3:1-4)

நாம் கிறிஸ்துவின் மகிமையில் ஏற்கனவே பங்கடைந்திருக்கிறோம். ஆனால் இது கண்களால் பார்க்க முடியாத, நம் கண்களுக்குத் தெரியாத உலகத்தில் நடந்திருக்கிறது. இப்பொழுது இயேசு எங்கே இருக்கிறாரோ, அங்கே நாம் இருக்கின்றோம்.   

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. தேவன் என்னை முன்னறிந்தார், அவர் என்னை முன்குறித்தார், அவர் என்னை அழைத்தார், அவர் என்னை நீதிமானாக்கினார், அவர் என்னை மகிமைப்படுத்தினார் என்று நான் அறிக்கை செய்கின்றேன். நான் அவருடைய மகிமையில் பங்கடையும்படி, இயேசு என் நிந்தை அவமானத்தை சிலுவையில் தன் மேல் ஏற்றுக் கொண்டார். ஆமென்.