மே 21, நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறோம்!

நாம் பிதாவாகிய தேவனால் ஏற்றுக் கொள்ளப்படும்படி, நாம் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையை இயேசு ஏற்றுக் கொண்டார்

நிராகரிக்கப்படுதல் என்பதை எளிமையாக இவ்வாறு சொல்லலாம். அது மற்றவர்களால் விரும்பப்படாத நிலையில்   நீங்கள் வாழ்வதாகும் அல்லது மற்றவர்கள் உங்களை நேசிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும், ஒருவரும் உங்களை நேசிக்காத நிலையில் வாழ்வதாகும்.

குறிப்பிட்ட சிலருடன் நட்புறவு கொண்டு, சேர்ந்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். ஆனால் எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்டதைப்போல நீங்கள் உணருகின்றீர்கள். எப்பொழுதும் வெளியே இருந்து, உள்ளே பார்க்கக்கூடிய நிலையில்தான் நீங்கள் வாழ்கின்றீர்கள்.

அதாவது நீங்கள் வெளியே தான் நிற்கின்றீர்கள். ஒருவரும் உங்களை உள்ளே சேர்த்துக் கொள்ளவில்லை. இன்றைக்கு நிறைய பேர், நிராகரிக்கப்படுவதால் உண்டாகும் வேதனையை அனுபவிக்கின்றனர்.

அதற்குக் காரணம், இன்றைக்கு நம் சமுதாயம் இருக்கின்ற நிலையும், அதன் அழுத்தங்களும்தான். அதிலும் குடும்ப வாழ்க்கையை உடைக்கின்ற அழுத்தங்கள் முக்கியமானவைகளாய் இருக்கின்றன.

நிராகரிக்கப்படுதலின் எதிர்ப்பதம் என்ன? ஏற்றுக் கொள்ளப்படுதலாகும். “தேவன் தமக்கு மிகவும் பிரியமான கிறிஸ்துவுக்குள் நம்மை ஏற்றுக் கொண்டார்,” என்ற எபேசியர் 1:6-ம் வசனத்தின் வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நாம் தகுதியற்றவர்களாய், தேவனுக்கு விரோதமாக கலகம் செய்கிறவர்களாய் வாழ்ந்து வந்தோம். பிதாவாகிய தேவன் நம்மை ஏற்றுக் கொள்ளும்படியாக, தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு நிராகரிக்கப்பட்டார்.

நம்முடைய இந்தப் பிரச்சனைக்கு நிச்சயமான ஒரு தீர்வு இதுதான்: நாம் பிதாவாகிய தேவனால் ஏற்றுக் கொள்ளப்படும்படி, நாம் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையை இயேசு ஏற்றுக் கொண்டார் என்று விசுவாசிக்க வேண்டும்.

தேவனுடைய குடும்பம்தான் மிகச் சிறந்த ஒரே குடும்பம். அதற்குச் சமமான வேறு ஒரு குடும்பம் எதுவுமில்லை. உங்களுடைய சொந்தக் குடும்பத்தாரே உங்கள் மீது அக்கறையாய் இருக்கவில்லை என்றாலும், உங்களுடைய அப்பா உங்களை நிராகரித்தாலும் அல்லது உங்களுடைய அம்மாவிற்கு உங்களோடு நேரம் செலவிட முடியவில்லை என்றாலும், தேவன் உங்களை விரும்புகிறார். தேவன் உங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அவர் உங்களை நேசிக்கிறார். அவருடைய விசேஷமான அக்கறையும், அன்பும் குவிகின்ற மையமாய் நீங்கள் இருக்கின்றீர்கள். இந்தப் பிரபஞ்சத்தில் அவர் செய்கிற ஒவ்வொரு காரியமும் உங்களைச் சுற்றித்தான் சுழல்கின்றது.

நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறோம் என்று தேவன் சொல்லும்போது, அவர் ஏதோ நம்மை சகித்துக் கொண்டார், பொறுத்துக் கொண்டார் என்ற அர்த்தத்தில் அவர் அதைச் சொல்லவில்லை. நாம் ஒருபோதும் அவருடைய நேரத்தை வீணடிக்க மாட்டோம்.

அவரை வருத்தமடையச் செய்கிற ஒரே விஷயம், நாம் அவரை விட்டு தூரமாய் போய், நீண்ட காலம் வாழ்வதுதான். அவர் நம்மை ஒரு மூலையில் தள்ளி, “கொஞ்சம் பொறு. எனக்கு நிறைய வேலை இருக்கிறது.

உன்னோடு செலவிடுவதற்கு எனக்கு நேரம் இல்லை,” என்று அவர் சொல்லவில்லை. மாறாக, அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் உன் மீது அக்கறையாயிருக்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன். நீ தாராளமாக உள்ளே வரலாம். உனக்காக நீண்ட நாட்களாக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. தேவன் தமக்கு மிகவும் பிரியமானவராகிய கிறிஸ்துவுக்குள் என்னை ஏற்றுக் கொண்டார். அவர் என்னை தழுவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். பிதாவாகிய தேவனால் நான் ஏற்றுக் கொள்ளப்படும்படி, இயேசு என்னுடைய நிராகரிப்பை ஏற்றுக் கொண்டார். ஆமென்.