நிராகரிக்கப்படுதலால் உண்டாகக்கூடிய வேதனைக்கான தீர்வு


நாம் பிதாவாகிய தேவனால் ஏற்றுக் கொள்ளப்படும்படி,
நாம் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையை இயேசு ஏற்றுக் கொண்டார்

 

நிராகரிக்கப்படுதலினால் உண்டாகும் பிரதானமான விளைவாக ஒன்றை நான் விசுவாசிக்கிறேன். அவர்களால்
மற்றவர்களிடமிருந்து அன்பைப் பெற்றுக் கொள்ளவோ, மற்றவர்கள் மீது அன்பு காண்பிக்கவோ முடியாது. முதலில், நாம்
அன்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் மற்றவர்கள் மீது அன்புகூற முடியும்.

 

புதிய ஏற்பாட்டில், யோவான் இதைக் குறித்து எழுதுகின்றார். 1 யோவான் 4:19-ஐ நாம் வாசிப்போம்: “அவர் (தேவன்) முந்தி நம்மிடத்தில்
அன்புகூர்ந்தபடியால், நாமும் அவரிடத்தில் அன்புகூருகின்றோம்.” ஒருவர் மற்றவர்கள் மீது அன்புகூர வேண்டுமென்றால்,
அவர் முதலில் அன்புகூரப்பட வேண்டும் என்றுதான் நான் விசுவாசிக்கிறேன். ஆகையால் ஒருபோதும் அன்புகூரப்படாத
ஒரு நபரால், மற்றவர்கள் மீது அன்புகூர முடியாது என்பதுதான் உண்மை.

 

நிராகரிக்கப்படுவதால் உண்டாகக்கூடிய இரண்டாவது விளைவு, இதுதான்: நிராகரிக்கப்படுதலை சந்திக்கிறவர்கள்,
பொதுவாக மூன்று முக்கிய வழிகளில் எதிர்வினையாற்றுகிறார்கள். முதலில், அந்த நபர் தோல்வியை சீக்கிரத்தில்
ஒப்புக்கொண்டு விடுவார்.

 

அவருக்குள் அந்த உறுதி இருக்காது. அல்லது, இரண்டாவதாக, அந்த நபர் தன்னை தற்காத்துக்
கொள்ளும் முயற்சியை தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பார். அல்லது, மூன்றாவதாக, அந்த நபர் எதிர்த்துப்
போராடுவார். நிராகரிக்கப்படுதலுக்கு எதிர்வினையாற்றுகிற இந்த மூன்று வழிகளிலும் ஒரு விஷயம் பொதுவாக
இருக்கின்றது. இந்த மூன்றுமே, தற்காப்புச் செயலாக இருக்கின்றது, தன் காயத்தை மறைத்துக் கொள்ளும் ஒரு
முயற்சியாக இருக்கின்றது. ஆனால் இவை எதுவுமே ஆக்கப்பூர்வமான ஒரு தீர்வு கிடையாது. ஆனாலும் தேவனிடம்
ஆக்கப்பூர்வமான ஒரு தீர்வு இருக்கின்றது.

 

ஏசாயா 61:1-ல், மெசியாவாகிய இயேசுவின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிற ஒரு வாக்குத்தத்தத்தை நாம்
வாசிக்கின்றோம்: “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்கு
சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்.

 

இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்கு கட்டவிழ்த்தலையும் கூறவும்………..”
இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றியதன் மூலம், நிராகரிக்கப்படுதல் எனும் பிரச்சனைக்கு தேவன் ஒரு தீர்வைத்
தந்திருக்கிறார். இது நமக்கு இயேசுவின் மூலம், சிலுவையின் வழியாக கிடைத்திருக்கிறது. நாம் தேவனுடைய
மகன்களாய், மகள்களாய் மாற வேண்டும் என்பதுதான், சிருஷ்டிப்பிற்கு முன்பே, தேவனுடைய நித்திய நோக்கமாக
இருந்தது.

 

இயேசு நம்முடைய பாவத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டு, நம்முடைய நிராகரிக்கப்படுதலின் வேதனையை
அவர் அனுபவித்தபோது, பிதாவாகிய தேவனால் நாம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான ஒரு வழியை அவர் திறந்து விட்டார்.
பிதாவாகிய தேவன் நம்மை ஏற்றுக் கொள்வதுதான், மெய்யாகவே இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.

 

 

 

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. நிராகரிக்கப்படுவதால் உண்டாகக்கூடிய வேதனைகளை
விட்டு வெளியே வந்து, மெசியாவாகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவன் எனக்குத் தந்திருக்கிற தீர்வை நான் பெற்றுக்
கொள்கிறேன். பிதாவாகிய தேவனால் நான் ஏற்றுக் கொள்ளப்படும்படி, இயேசு என்னுடைய நிராகரிப்பை தன் மேல் ஏற்றுக்கொண்டார் என்று நான் அறிக்கை செய்கிறேன்.

 

 

ஆமென்....