நித்தியத்தில் தேவனோடு வாழும் வாழ்க்கை
தேவனோடு நித்தியமாக நாம் இணைக்கப்பட்டிருக்கும்படி, இயேசு தம் மரணத்தினால் அறுப்புண்டு போனார்
சிலுவையில் கிறிஸ்து என்ன செய்தாரோ, அதன் முழு நிறைவை நித்தியத்தில் சந்தோஷமாக அனுபவிப்போம்
என்பதுதான், கிறிஸ்துவுக்குள் நமக்கு உண்டாயிருக்கும் ஜீவனின் மூன்றாவது அம்சமாக இருக்கிறது. தேவனிடமிருந்து
நித்திய நித்தியமாக பிரிக்கப்பட்ட நிலையில், நரகத்தில் வாழாமல், தேவனுடைய பிரசன்னத்தில் நம் நித்தியத்தை
செலவிடும் ஒரு நித்திய, நிரந்தரமான அனுபவமாக இது இருக்கின்றது.
1 தெசலோனிக்கேயர் 4:16-17 வசனங்களை வாசிப்போம்:
ஏனெனில் கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும்,
வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட
ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்.
நித்தியத்தில், தேவனுடைய பிரசன்னத்தில், நம்முடைய மீட்பு முழுமையாய் நிறைவடையும். வெளிப்படுத்தின
விசேஷத்தின் கடைசி இரண்டு அதிகாரங்களில், தேவனுடைய பிரசன்னத்தில் நாம் செலவிடப் போகிற நம் நித்தியத்தைக்
குறித்து விவரமாய் சொல்லப்பட்டிருக்கிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 21:1-2 வசனங்களை வாசிப்போம்: பின்பு நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் கண்டேன். முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து
போயின. சமுத்திரமும் இல்லாமல் போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை
தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன். அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட
மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
புதிய எருசலேம், பரலோகத்திலிருந்து கீழே இறங்கி வருகின்ற சபையாயிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.
அது தேவனுடைய நிரந்தரமான வாசஸ்தலமாக இருக்கின்றது. சபையானது தேவன் நிரந்தரமாய் வாசம் பண்ணக்கூடிய
வாசஸ்தலமாய் இருக்க வேண்டும் என்பதுதான் சபையைக் குறித்த தேவனுடைய உச்சகட்ட நோக்கமாய் இருக்கிறது.
3-ம் வசனம் சொல்கிறது: மேலும் பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன். அது, “இதோ, மனுஷர்களிடத்திலே
தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது. அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார். அவர்களும் அவருடைய
ஜனங்களாயிருப்பார்கள். தேவன்தாமே அவர்களோடே கூட இருந்து, அவர்களுடைய தேவனாயிருப்பார்,” என்றது.
எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. நான் என் நித்தியத்தை நரகத்தில் செலவிட மாட்டேன்.
தேவனுடைய பிரசன்னத்தில்தான் நான் என் நித்தியத்தை செலவிடுவேன் என்று அறிக்கை செய்கிறேன். காரணம், நான்
தேவனோடு நித்தியமாய் இணைக்கப்பட்டிருக்கும்படி, இயேசு தம் மரணத்தினால் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து துண்டிக்கப்பட்டார்.
ஆமென்...
Leave a comment