நவம்பர் 5, நாம் பூரணர்களாகும்படி தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்

பூரணர்களாகும்படி தொடர்ந்து முன்னேறக்கடவோம்

எபிரெய நிருபத்தில், நமக்கு எச்சரிப்பாக, அறிவுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிற நான்கு முக்கியமான காரியங்களை இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். இப்பொழுது நாம் ஐந்தாவது முக்கியமான எச்சரிப்பைக் குறித்துப் பார்ப்போம்.

இது நாம் எடுக்க வேண்டிய மிக முக்கியமான, ஒரு புதிய தீர்மானமாக இருக்கிறது. எபிரெயர் 6:1-2 சொல்கிறது, “ஆகையால், கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல, உபதேச வசனங்களை நாம் விட்டு…………..பூரணராகும்படி கடந்து போவோமாக.” பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு தங்களுடைய கிறிஸ்தவ ஜீவியத்தைக் குறித்து இப்படியொரு எண்ணம் இருக்கிறது.

அதாவது நீங்கள் எப்படியாவது ஒரு இடத்தை அடைந்து, “இதோ, நான் இங்கே வந்து விட்டேன்,” என்று சொல்லி, அங்கேயே தங்கி விடலாம் என்பதுதான் அது. ஆனால் அது உண்மையல்ல.

ஆவிக்குரிய வாழ்க்கையில், ஒரு இடத்தில் தங்கி அங்கேயே நிலையாய் இருந்து விடுவதென்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயமாகும். நீதிமொழிகள் 4:18 சொல்கிறது, “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும், அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசம் போலிருக்கும். [நீதிமான்களுடைய பாதை, அதிகாலை சூரிய வெளிச்சத்திலிருந்து, நண்பகல் சூரிய வெளிச்சம் வரை பிரகாசத்தின் மேல் பிரகாசமடைந்து கொண்டே போகிற ஒன்றாயிருக்கிறது.]”

“நீதிமான்களின் பாதை” என்று சொல்லும்போது, அது ஒரு குறிப்பிட்ட விசுவாசியையோ அல்லது ஒரு விசுவாசிகளின் கூட்டத்தையோ குறிக்கவில்லை. மாறாக, அது ஒவ்வொரு நீதிமானையும் குறிக்கிறது. இங்கு நீதி என்பது ஒரு பாதையாயிருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அது ஒரே இடத்தில் நிற்கும்படியாகவோ அல்லது உட்கார்ந்து கொள்ளும்படியாகவோ வடிவமைக்கப்படவில்லை. நீதி என்பது ஒரு பாதையாய் இருக்கிறபடியால், அது ஒரு இயக்கத்தை, முன்னேற்றத்தை, வளர்ச்சியைச் சுட்டிக் காண்பிக்கிறது.

கர்த்தராகிய இயேசுவை அவருடைய மகிமையின் பூரணத்தில், நம்முடைய இரட்சகராய், ஆண்டவராய் முதலில் நாம் அவரை அறிந்து கொள்ளும்போது, அதிகாலை வெளிச்சமாய் இந்தப் பாதை ஆரம்பிக்கிறது.

இது இருளுக்குப் பிறகு வரும் சூரிய உதயத்தைப் போல இருக்கிறது. இது அதிகாலை வெளிச்சமாய் நம்முடைய இருதயங்களுக்குள் நுழைகின்றது. ஆனால் அதிகாலை வெளிச்சத்தோடு தேவனுடைய நோக்கங்கள் முடிந்து விடவில்லை. இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

நாம் நீதியின் பாதையில் நடக்கும்போது, வெளிச்சம் எப்பொழுதும் பிரகாசத்தின் மேல் பிரகாசமடைந்து கொண்டே செல்லும். நாம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், ஒவ்வொரு புதிய நாளை ஆரம்பிக்கும்போதும், முந்திய அடியைக் காட்டிலும், முந்திய நாளைக் காட்டிலும் வெளிச்சம் இன்னும் அதிக பிரகாசமாய் இருக்கும்.

“நண்பகல் வரைக்கும்” என்பதுதான் நம் இலக்காயிருக்கிறது. அதுதான் நாம் சென்றடைய வேண்டிய இடமாயிருக்கிறது. உச்சகட்ட நண்பகல் வெளிச்சத்தை நாம் அடைய வேண்டும்.

உச்சகட்ட நண்பகல் சூரிய வெளிச்சத்திற்குக் குறைவான ஒரு நிலையை நாம் அடைவதை தேவன் விரும்புவதில்லை. அதிகாலை சூரிய வெளிச்சம், நம்முடைய ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. பாதை, வளர்ச்சியின் பாதையாக இருக்கிறது.

வெளிச்சம், பிரகாசத்தின் மேல் பிரகாசமடைந்து கொண்டே செல்கிறது. ஆனால் நண்பகல் வெளிச்சத்தை நாம் அடையும்வரை, இடையில் எந்த நிறுத்தத்திற்கும் அனுமதியில்லை.   

கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி. நீர் என்னை முன்னேற்றத்தின் பாதையில் நடத்துகிறீர். நீதியின் பாதையில், நான் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும், வளர வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன், அறிக்கை செய்கிறேன். பூரணராகும்படி, நான் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறேன். ஆமென்.