நவம்பர் 6, பூரணராகும் நிலையை நோக்கி முன்னேறுவோம்

பூரணர்களாகும்படி தொடர்ந்து முன்னேறக்கடவோம்

“பூரணர்களாகும்படி தொடர்ந்து முன்னேறக்கடவோம்,” என்ற இந்தக் குறிப்பிட்ட எச்சரிக்கை, குறிப்பாக, புதிய ஏற்பாட்டு எபிரெய விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட ஒன்றாகும். காரணம், அவர்கள் அதன்படி வாழத் தவறியிருந்தனர்.

அவர்கள் தங்களுடைய விசேஷமான சிலாக்கியங்களையும், உரிமைகளையும் நம்பி, அவற்றில் அவர்கள் இளைப்பாறி, சுகம் கண்டிருந்தனர். வெளிப்படையாகச் சொன்னால், அவர்கள் சோம்பேறிகளாகியிருந்தனர். அவர்கள் இவற்றை ரொம்பவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர், அலட்சியப்படுத்தினர்.

நாம் விஸ்தாரமாய் பேசலாம். நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப் பண்ணுகிறது அரிதாயிருக்கும். காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டிய தாயிருக்கிறது.

நீங்கள் பலமான ஆகாரத்தை அல்ல. பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாத வனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக, முயற்சி செய்யும் ஞானோந்திரியங்களை உடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே [பக்குவமடையும்படி முன்னேறுகிறவர்களுக்கே] தகும். (எபிரெயர் 5:11-14).

எபிரெய விசுவாசிகள் ஆவிக்குரிய குழந்தைகளாக இருந்தனர் என்பதைத்தான் அப்பட்டமாக, இந்த நிருப ஆசிரியர் இங்கு சொல்கிறார். அவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ ஜீவிய வளர்ச்சியின் அந்தக் கட்டத்தில், குழந்தைகளாய் இருந்திருக்கக் கூடாது.

கடந்து போன பல வருடங்களில், அவர்களுக்கு நிறைய நிறைய வாய்ப்புகள் கிடைத்திருந்தன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, அவர்கள் பக்குவமடைந்து, பூரணராகிற நிலையை நோக்கி முன்னேறியிருக்க வேண்டும்.

பூரணராகும்படி முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழியைக் குறித்தும் எபிரெய நிருப ஆசிரியர் இங்கு விளக்கிச் சொல்லியிருக்கிறார். தீமையிலிருந்து நன்மையைப் பிரித்தறியும்படி, நம்மை நாமே பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.

நீதியின் பாதையில், பூரணராகும் நிலையை நோக்கி முன்னேறிச் செல்வதென்பது, நம்மை நாமே தொடர்ந்து பயிற்றுவித்துக் கொள்வதன் மூலம் நடக்கின்றது. இது தானாகவே நடந்து விடாது. இதற்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும், தொடர்ச்சியான பயிற்சியும் தேவையாயிருக்கிறது.

ஆகையால்தான், “நாம் ஜாக்கிரதையாயிருக்கக் கடவோம்,” என்ற எச்சரிக்கை ஆரம்பத்திலேயே நமக்குக் கொடுக்கப்பட்டது. தீமையிலிருந்து நன்மையைப் பிரித்தறிவதில், நம்மை நாமே பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு பெரிய பெரிய கிறிஸ்தவ சபைகள் கூட, எது ஆவிக்குரியது, எது வேதவசனத்தின் அடிப்படையிலானது என்பதற்கும், எது விழுந்து போன ஜென்ம சுபாவத்தின் வெளிப்பாடு, எது மாம்ச சிந்தை என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பிரித்தறிய முடியாத நிலையில்தான் இருக்கின்றன.

இதற்கான ஒரே தீர்வு, தீமையிலிருந்து நன்மையைப் பிரித்தறியக்கூடிய விதத்தில், நம்மை நாமே தொடர்ந்து, எச்சரிக்கை உணர்வுடன் முறையாகப் பயிற்றுவித்துக் கொள்வதுதான்.

கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி. நீர் என்னை நேரான முன்னேற்றத்தின் பாதையில் நடத்துகிறீர். எனக்கிருக்கும் விசேஷமான சிலாக்கியங்களை சார்ந்து, அவைகளையே நம்பி, அவைகளில் இளைப்பாறி சுகம் காண மாட்டேன். மாறாக, பூரணராகும் நிலையை நோக்கி, தொடர்ந்து முன்னேறும்படி என்னையே நான் பயிற்றுவித்துக் கொள்கிறேன். பூரணராகும்படி, நான் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறேன். ஆமென்.