நவம்பர் 17, உயிர் இரத்தத்தில் இருக்கிறது

நாம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் கிட்டிச் சேரக்கடவோம்

பழைய ஏற்பாட்டில், லேவியராகமம் புத்தகத்தில், இஸ்ரவேலினுடைய ஆரோனின் ஆசாரியத்துவத்திற்கென்று கொடுக்கப்பட்ட பிரமாணங்கள் அடங்கியிருக்கின்றன. கர்த்தர் சொன்னார், “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது.

நான் அதை உங்களுக்கு பலிபீடத்தின் மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காக பாவ நிவிர்த்தி செய்யும்படிக்கு கட்டளையிட்டேன். ஆத்துமாவிற்காக பாவ நிவிர்த்தி செய்கிறது இரத்தமே.” (லேவியராகமம் 17:11).

இது பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு இயேசுவில் நிறைவேறப் போகிற ஒரு நிகழ்வைக் குறித்த வல்லமையான ஒரு தீர்க்கதரிசனமாக இருக்கிறது. ‘உயிர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற வார்த்தை, ஆத்துமாவைக் (நெப்பீஷ் nephesh) குறிக்கின்ற எபிரெய வார்த்தையாகும். ஒரு மனுஷனின் உயிர், இரத்தத்தில் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அது ஆத்துமாவாகவும் இருக்கிறது.

இரத்தம் ஓடுவது நின்று விட்டால், அவ்வளவுதான், உயிர் நின்று விடும். அங்கே மரணம்தான் உண்டாகும். இது நம் எல்லோருக்கும் தெரியும். நிச்சயமாக, உயிர் இரத்தத்தைச் சார்ந்திருக்கிறது.

லேவியராகமத்தின் முந்தின அதிகாரத்தில், பாவ நிவிர்த்தி நாளைக் குறித்த பிரமாணங்களில், மோசே தன் சகோதரனும், பிரதான ஆசாரியனுமாகிய ஆரோனிடம், வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் அவன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள், அதாவது தேவனுடைய பிரசன்னம் இருக்கும் அந்த இடத்திற்குள்ளேயே செல்ல முடியும் என்று சொன்னான்.

சுகந்த வாசனையான புகைமண்டலத்தை மேலே அனுப்பும்படி, நிலக்கரியினால் எரியூட்டப்பட்ட நறுமணத் தூபங்களால் நிறைந்த தூபக்கலசத்தை ஒரு கையிலும், ஆசரிப்புக் கூடாரத்தின் முன் பாவ நிவாரண பலியாக கொல்லப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை இன்னொரு கையிலும் ஏந்தியவனாய் அவன் உள்ளே செல்ல வேண்டும்.

நறுமண தூபங்கள் நிறைந்த கலசத்தையும், பலியிடப்பட்ட மிருகத்தின் இரத்தத்தையும் அவன் எடுத்துச் செல்லவில்லை என்றால், அவனுடைய மரணம் நிச்சயம் நடக்கும். இந்த இரண்டு காரியங்களும் இல்லாமல், தேவனுடைய பிரசன்னத்திற்கு நுழைவதற்கு வேறு வழியே இல்லை.

நறுமண தூபங்கள் நிறைந்த கலசம் என்பது ஆராதனையை அடையாளப்படுத்துகிற ஒரு அழகான உருவகமாக இருக்கிறது. தேவனுடைய பிரசன்னத்திற்குள் ஆராதனை இல்லாமல் நாம் ஒருபோதும் நுழையவே முடியாது.

இரத்தமில்லாமலும் நாம் வரவே முடியாது. அது நம்முடைய பாவங்களுக்காக செலுத்தப்பட்ட கிருபாதாரபலிக்கு அடையாளமாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் காணப்படுகிற இந்தப் படங்களெல்லாம், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவில் நிறைவேறினவைகளைக் குறித்த தீர்க்கதரிசனங்களாக, முன்னோட்டங்களாக அல்லது முன்படங்களாக இருக்கின்றன.

தேவனே, உமக்கு நன்றி. காரணம், இயேசுவின் இரத்தத்தினால் இப்பொழுது நான் உம்மண்டை வர முடியும். ஆராதனையோடும், கிருபாதார பலியில் சிந்தப்பட்ட இரத்தத்தோடும் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நான் விசுவாசித்து வருகின்றேன். இந்த விசுவாசத்தோடு, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நான் கிட்டிச் சேருகிறேன். ஆமென்.