நவம்பர் 19, நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டியதன் முக்கியத்துவம்

அசைவில்லாமல் நம்முடைய அறிக்கையை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்

விசுவாசத்தைக் குறித்தும், அன்பைக் குறித்தும் நிறைய பிரசங்கங்களை கிறிஸ்தவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கையைக் குறித்து, ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகத்தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன், அதுதான் என்னுடைய தனிப்பட்ட நிலையாகவும் இருந்தது. தேவன்தான் உதவி செய்தாக வேண்டும், இல்லையென்றால் அவ்வளவுதான் என்ற நிலையில் நான் இருந்தேன்.

விசுவாசத்தைக் குறித்து பல செய்திகளையும், அன்பைக் குறித்து சில செய்திகளையும் நான் கேட்டிருந்தேன். ஆனால் அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில், எனக்கு நம்பிக்கைதான் தேவைப்பட்டது.

பரிசுத்த ஆவியானவர் என்னை நேரடியாக வேதவசனத்திற்கு அழைத்துச் சென்றார். காரணம், நம்பிக்கையைக் குறித்து ஒரு செய்தியைக்கூட நான் ஒருபோதும் கேட்டதில்லை.

அந்த நிலையில், பரிசுத்த ஆவியானவர்தான் என் தேவையை சந்தித்தார். இந்தக் காரணத்தினால்தான், கிறிஸ்தவர்கள் நம்பிக்கையின் முக்கியத்துவத்தைக் குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் நான் குறிப்பாக அக்கறையுள்ளவனாயிருக்கிறேன்.

நம்பிக்கை என்றால் என்ன, அது எவ்வளவு முக்கியமானது, நீங்கள் எவ்வாறு அதை உடையவர்களாய் வாழ முடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

விசுவாசத்தையும், அன்பையும் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், நமக்கு நம்பிக்கை அத்தியாவசியமாகிறது. நம்மிடம் நம்பிக்கை இல்லையென்றால், நம் விசுவாசம் கசிந்து விடும். நம்முடைய அன்பு விழுந்து விடும். நம்பிக்கை என்பது வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம்.

இல்லையென்றால், விட்டு விடலாம் என்ற ஒரு நிலை அல்ல. கிறிஸ்தவ ஜீவியத்தின் நிறைவிற்கு நம்பிக்கை என்பது இன்றியமையாத ஒரு தேவையாயிருக்கிறது.

“எங்கே வாழ்க்கை இருக்கிறதோ, அங்கே நம்பிக்கை இருக்கும்,” என்று அடிக்கடி ஜனங்கள் சொல்வார்கள். இந்த வாக்கியத்தில், உண்மை இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் அதை அப்படியே திருப்பிச் சொன்னாலும், அதிலும் உண்மை இருக்கிறது. அதாவது எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது.

அப்படியென்றால், நம்பிக்கை இல்லாத இடத்தில், வாழ்க்கை இல்லை. என்னுடைய கருத்தின்படி, நம்பிக்கையின்மை, அதாவது நம்பிக்கையற்ற நிலையில் வாழ்வதென்பது மனுஷனுடைய அனுபவத்தில் மகா வேதனையான ஒரு நிலை என்றுதான் நான் சொல்வேன். நம்பிக்கையற்ற, விரக்தியான நிலையைக் காட்டிலும் வேதனையான வேறொரு நிலையை என்னால் சிந்திக்க முடியவில்லை.

ஆனாலும், இன்றைக்கு நம்முடைய உலகத்தில் எண்ணிக்கையிலடங்காத ஜனங்கள் முற்றிலும் எவ்விதமான நம்பிக்கையும் இல்லாத நிலையில்தான் வாழ்கின்றனர். நான் விமான நிலையத்தில் உட்கார்ந்திருக்கும்போது, நடைப்பயிற்சி செல்லும்போது, ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, மற்றவர்களுடைய முகங்களை நான் பார்க்கிறேன்.

அவர்களில் பலருடைய முகங்களில் என்னால் வெறுமையைப் பார்க்க முடிகின்றது. ஆனால் தேவனுக்கு நன்றி. நம்பிக்கையற்றவர்களாய் நாம் வாழ வேண்டிய அவசியமில்லை.        

கர்த்தாவே, உமக்கு நன்றி. நீர் உண்மையுள்ளவர். நீர் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறீர். எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது என்பதை நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். என்னுடைய அறிக்கையை நான் அலசடிபடாமல், அசையாமல் உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவேன். ஆமென்.