நவம்பர் 23, வாக்குத்தத்தத்தை அடைவதற்கான யுத்தம்

அசைவில்லாமல் நம்முடைய அறிக்கையை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்

சுகமளிக்கும் ஆராதனையை நான் நடத்தும்போதெல்லாம், பின் வரும் அறிக்கையைச் செய்யும்படி, நான் வழக்கமாக ஜனங்களிடம் வலியுறுத்துவேன். காரணம், சுகத்தைப் பெறும்படி அது ஜனங்களை தகுதிப்படுத்தும்.

நான் இதை விளக்கிச் சொல்கிறேன். உங்களுடைய சிறுநீரகங்களில் ஒரு பிரச்சனை இருக்குமென்றால், நீங்கள் இவ்வாறு அறிக்கை செய்யுங்கள், “இயேசுதாமே என் பெலவீனங்களை ஏற்றுக் கொண்டார்.

அவரே என் வியாதிகளை சுமந்தார். அவருடைய தழும்புகளால் நான் சுகமானேன்.” இங்கு “இயேசுதாமே” என்று சொல்லும்போது, அவர் ஒருவருக்கு மட்டுமே எல்லா முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதைக் காண்பிக்கிறது.

அதற்குப் பிறகும், உங்களுடைய சிறுநீரகங்களில் பிரச்சனை இருக்குமென்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்களுடைய அறிக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னும் உங்களுடைய சிறுநீரகங்களில் பிரச்சனை தொடருகிறதா?

ஆம் என்றால், உங்களுடைய அறிக்கையை அலசடிபடாமல் அசைவில்லாமல் இன்னும் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதாவது, இன்னும் உங்களுடைய அறிக்கையை அதிக உறுதியோடு செய்யுங்கள்.

இது ஒரு யுத்தமாக இருக்கிறது. உங்களுடைய சுகத்தை நோக்கி தீவிரமாய் நீங்கள் முன்னேறிச் செல்வதென்பது, அதிக உறுதியுடன் செய்ய வேண்டிய ஒரு யுத்தமாய் இருக்கிறது. என்னை நம்புங்கள். இதை என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

எபிரெய நிருப ஆசிரியர் இவ்வாறு எபிரெய கிறிஸ்தவர்களுக்குச் சொல்கிறார், “பாவத்திற்கு விரோதமாய் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே” (எபிரெயர் 12:4).

பாவத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் வியாதியை எதிர்த்தும் நாம் போராட வேண்டும் என்பதை சில நேரங்களில் நாம் மறந்து விடுகிறோம்.

ஆம், நாம் நிச்சயமாய் யுத்தம் பண்ண வேண்டும். காரணம், நாம் யுத்தவீரர்களாய் இருக்கிறோம். நாம் கீழே படுத்துக் கொண்டு, நம் மீது பிசாசு ஏறிச் செல்லும்படி நாம் இடம் கொடுக்கக்கூடாது. அவ்வளவு சுலபமாக நாம் சரணடைவோம் என்றால், அது தேவனுக்கு மகிமையைக் கொடுக்காது.

அலசடிபடாமல், அசைக்கப்படாதவர்களாய், உறுதியாய் நம்முடைய அறிக்கையைச் செய்ய வேண்டிய விஷயத்தில், நாம் சரீர சுகத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தக்கூடாது.

அது கிட்டத்தட்ட எல்லோரையும் தொடுகிற, எல்லோருக்கும் தேவைப்படுகிற ஒன்றாக இருந்தாலும், நம் பணத் தேவைகளைக் குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம்? என்னைப் பொறுத்தவரை, இது ஒரு சடங்கு அல்ல.

என்னுடைய அறிக்கையை உறுதியாய் செய்வதன் மூலம், என்னுடைய ஊழியத்திற்காக தேவன் தம்முடைய களஞ்சியத்தில் வைத்திருக்கிற பொக்கிஷங்களை நான் கட்டவிழ்க்கிறேன். நாம் செய்ய வேண்டும் என்று தேவன் நம்மிடம் சொல்லியிருக்கிற ஒவ்வொரு வேலைக்கும் தேவையான எல்லாவற்றையும் அவர் ஏற்கனவே முன் ஆயத்தமாய் செய்து வைத்திருக்கிறார் என்று அவரே நம்மிடம் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அந்த பூரணமான முன் ஆயத்தத்தை நாம் பெற வேண்டுமென்றால், நாம் விசுவாசித்து, அறிக்கை செய்ய வேண்டும். நான் அதை தனிப்பட்ட விதத்தில் என்னுடையதாக்கிக் கொள்கிறேன்.

இந்த அறிக்கை, 2 கொரிந்தியர் 9:8-ம் வசனத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது: “நீங்கள் (நாம்) எப்பொழுதும் எல்லாவற்றிலும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் (நம்மிடத்தில்) சகலவித கிருபையையும் பெருகச் செய்ய வல்லவராயிருக்கிறார்.” தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

கர்த்தாவே, உமக்கு நன்றி. நீர் உண்மையுள்ளவர். நீர் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறீர்.   எனக்காக தேவன் ஆயத்தம் செய்து வைத்திருக்கிற சுகம் மற்றும் எல்லாத் தேவைகளையும் பெற்றுக் கொள்ளும்படி, நான் விசுவாசித்து, அறிக்கை செய்து, யுத்தம் செய்கிறேன். என்னுடைய அறிக்கையை நான் அலசடிபடாமல், அசையாமல் உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவேன். ஆமென்.