நவம்பர் 28, நம்முடைய சிங்காசனத்திலிருந்து முதலில் நம்மையே கீழே இறக்குவோம்

நாம் ஒருவர் மற்றவரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கக்கடவோம்

மற்றவர்களுக்கு ஊழியம் அல்லது பணி செய்ய வேண்டும் என்பதைக் குறித்து, அப்போஸ்தலனாகிய பவுல் பேசுகிற இன்னொரு வேதப்பகுதியை நான் இங்கே எடுத்துக் காண்பிக்க விரும்புகிறேன்.

அவர் இதை கொரிந்து பட்டணத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகிறார். பவுலின் பின்னணியைப் பார்த்தோம் என்றால், அவர் ஒரு மத வைராக்கியம் பிடித்த யூதர்.

அவர் நியாயப்பிரமாணத்தை உண்மையாய், ஒழுங்காய் கடைபிடித்து வாழ்ந்தவராய் இருந்தார். அவர் ஒரு பரிசேயர். ஒரு போதகராவதற்குரிய தகுதி அவரிடம் இருந்தது.

அவருக்குள் இருந்த இவ்வகையான நீதி, மற்றவர்களிடமிருந்து அவரை பிரித்துக் கொள்ளச் செய்தது. அந்த நீதி, அவர் மற்றவர்களை அற்பமாய் நினைக்கும்படி, அசட்டை பண்ணும்படி செய்தது.

ஆனால் அவர் இயேசுவை தன் ஆண்டவராக அறிந்து, ஏற்றுக் கொண்டபோது, ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லக் கூடிய ஒரு மாற்றம் அவருடைய சுபாவத்திற்குள் நிகழ்ந்தது. அடிப்படையில், கொரிந்து பட்டணத்து ஜனங்கள் இந்தப் பூமியில் மிகவும் மோசமான, அழுக்கான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அவர்களில் சிலர் ஓரினச் சேர்க்கை பாவத்தில் ஈடுபட்டு வாழ்ந்தனர், சிலர் வேசிகளாய் வாழ்ந்தனர், சிலர் பெருங்குடிகாரர்களாய் வாழ்ந்தனர், சிலர் மற்றவர்களை தூஷித்து வாழ்ந்தனர்.

அவர்கள் அவ்வளவு நல்ல ஆட்களே அல்ல. கொரிந்து பட்டணம், அன்றைய உலகத்தில் ஒரு முக்கியமான துறைமுகப் பட்டணமாக இருந்தது. மற்ற துறைமுகப் பட்டணங்களைப்போல, இந்தப் பட்டணத்தில் எல்லா வகையான ஜனங்களும் வாழ்ந்து வந்தனர்.

ஆனாலும் பவுல் எழுதுகிற ஆச்சரியமான ஒரு வாக்கியத்தை வாசிப்போம்: “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவை கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவின் நிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.” (2 கொரிந்தியர் 4:5).

இவ்வசனத்தில், “இயேசுவின் நிமித்தம் உங்கள் ஊழியக்காரர்” என்று வருகிற இடத்தில், ஆங்கிலத்தில், “இயேசுவின் நிமித்தம் உங்களுடைய அடிமை வேலைக்காரர்,” என்ற அர்த்தத்தில் வருகின்றது.

கொரிந்து பட்டணத்தில் அவ்வளவு மோசமான வாழ்க்கை வாழ்ந்த அவர்களைப் பார்த்து, இந்தப் பெருமை மிக்க பரிசேயர் சொல்கிறார், “இயேசுவின் நிமித்தம், நாங்கள் உங்களுடைய அடிமை வேலைக்காரர்கள்.” இது ஆச்சரியமாக இருக்கிறது!

நாம் எடுத்து வைக்க வேண்டிய மூன்று அடிகளைக் கவனியுங்கள்: முதலில், நம் சுயத்தை சிங்காசனத்திலிருந்து கீழே இறக்க வேண்டும். காரணம், “எங்களையே பிரசங்கியாமல்” என்று பவுல் சொல்கிறார்.

இரண்டாவதாக, சிங்காசனத்தை கிறிஸ்துவுக்குக் கொடுக்க வேண்டும். காரணம், “கிறிஸ்து இயேசுவை கர்த்தரென்று பிரசங்கிக்கிறோம்,” என்று பவுல் சொல்கிறார்.

மூன்றாவதாக, மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டும். காரணம், “இயேசுவின் நிமித்தம், நாங்கள் உங்களுடைய அடிமை ஊழியக்காரர்கள்,” என்று பவுல் இங்கு சொல்கிறார்.

இந்த மூன்று அடிகளும் மிக மிக முக்கியமானவை. அன்பினால், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யுங்கள். சுய நலத்திலிருந்து விடுதலையாவதற்கு இதுதான் செய்தியாய், ஒரே தீர்வாய் இருக்கிறது.   

கர்த்தாவே, மற்றவர்களை நேசிக்கும்படி நீர் எனக்கு உதவி செய்கிறீர். உமக்கு நன்றி. நான் என்னை சிங்காசனத்திலிருந்து கீழே இறக்கி விட்டு, சிங்காசனத்தை கிறிஸ்துவுக்குக் கொடுக்கிறேன். மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்படி நான் தீர்மானிக்கிறேன். நான் மற்றவர்களைக் குறித்து எண்ணிப் பார்ப்பேன். ஆமென்.