நம்முடைய உள்நோக்கங்களைக் குறித்து விழிப்பாய், எச்சரிக்கையாயிருக்க வேண்டும்

 


தேவனுடைய கிருபாசனத்தின் அருகே நாம் கிட்டிச் சேரக்கடவோம்

 

முக்கியமான தேவைகளுக்காக தேவனிடம் விண்ணப்பிக்கும்படி, நாம் தேவனுடைய கிருபாசனத்தின்
அருகே வருகின்றோம். இதில் ஒரு மிக முக்கியமான நிபந்தனையை நாம் பார்க்க வேண்டும். நம்முடைய
உள்நோக்கங்கள்தான் அந்த நிபந்தனையாயிருக்கிறது. தேவன் நம்முடைய உள்நோக்கங்கள்
ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்கிறார்.

 

நாம் எதற்காக ஜெபிக்கிறோம் என்று அந்த காரண
காரியங்களை தேவன் மிகவும் குறிப்பாக சோதித்துப் பார்க்கிறார். யாக்கோபு 4:2 சொல்கிறது, “நீங்கள்
விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்கு சித்திக்கிறதில்லை (கிடைக்கிறதில்லை).”
கிறிஸ்தவர்கள் இன்னும் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ளாமலிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம்,
ஜெபிக்கவில்லை அல்லது கேட்கவில்லை என்பதுதான்.

 

இதில் அவர்கள் ரொம்பவும் சாதாரணமாக தவறி விடுகிறார்கள். பிறகு 3-ம் வசனத்தில், யாக்கோபு தொடர்ந்து எழுதுகிறார், “நீங்கள் விண்ணப்பம்
பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று (பயன்படுத்த
வேண்டுமென்று) தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்.”
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், சுயநலத்தை மையமாகக் கொண்ட ஜெபங்கள்,
நம்முடைய உள்நோக்கங்கள் தவறானவை என்பதைத்தான் சுட்டிக் காண்பிக்கின்றன.

 

நம்முடைய தனிப்பட்ட சுகபோகங்கள், சௌகரியங்கள், நம் சுயநல விருப்பங்களை மனதில் கொண்டே நாம்
ஜெபிப்போம் என்றால், அது தவறான உள்நோக்கத்தைக் கொண்ட ஒரு ஜெபமாகும்.
அப்படியென்றால், எது சரியான உள்நோக்கம்? இயேசு அதை ஏற்கனவே சொல்லியிருக்கிறார்:
“நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச்
செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:13-14).

 

தேவன் பதிலளிக்கக்கூடிய ஜெபங்களின் சரியான பின்னணியாக, உள்நோக்கமாக இதுதான் இருக்க
வேண்டும். ஜெபம் என்பது உண்மையாய், உத்தமமாய் ஜெபிக்கப்பட வேண்டும். அப்பொழுது அந்த
ஜெபத்திற்கு பதிலளிப்பதன் வாயிலாக, இயேசுகிறிஸ்துவின் மூலம் தேவன் மகிமைப்படுவார்.
2 கொரிந்தியர் 1:20-ல், பவுல் அதைக் குறித்து எழுதியிருக்கிறார், “எங்களால் தேவனுக்கு
மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும்,
அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.”

 

தேவனிடம் வந்து, அவருடைய வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி சுதந்தரிப்பதன் நோக்கமே,
அவைகளுக்குப் பதிலளிப்பதன் வாயிலாக, நம் மூலமாக தேவன் மகிமைப்படுவதுதான். தேவனுடைய
வாக்குத்தத்தங்களை நாம் அதிகதிகமாய் உரிமைபாராட்டும்போது, நாம் அவரை அதிகதிகமாய்
மகிமைப்படுத்திக் கொண்டே செல்கிறோம். மாறாக, தேவனுடைய வாக்குத்தத்தங்களை நாம் அதிகமாய்
உரிமை பாராட்டத் தவறும்போது, நாம் அவரை மகிமைப்படுத்துவதில் குறைவுபடுகிறோம், தவறி
விடுகிறோம்.

 

தேவனை மிகவும் அதிகமாய் மகிமைப்படுத்துகிற நபர்தான், கிறிஸ்துவுக்குள் தேவனுடைய
வாக்குத்தத்தங்களை மிகவும் அதிகமான அளவில் உரிமைபாராட்டி சுதந்தரிக்கிற நபராயிருக்கிறார்.
தேவன் மகிமைப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஜெபத்திற்கு பதிலை நாடுவதுதான்,
தேவனுக்குப் பிரியமான, அவர் ஏற்றுக் கொள்கிற ஒரு உள்நோக்கமாயிருக்கிறது.

 

இந்த ஜெபங்கள், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஏறெடுக்கப்பட வேண்டும்.

 

கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி. இப்பொழுது நான் உம்மிடம் தைரியமாய் வர முடியும். என்
ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பதன் வாயிலாக, இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் மகிமைப்பட
வேண்டும் என்பதை ஜெபத்தில் என் உள்நோக்கமாய் ஏற்றுக் கொள்கிறேன். இந்த உள்நோக்கத்தோடு, நான்

நிச்சயம் தேவனுடைய கிருபாசனத்தின் அருகே கிட்டிச் சேருவேன்.

 

ஆமென்...