அவருடைய நீதியினால் நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது

 


தேவனுடைய கிருபாசனத்தின் அருகே நாம் கிட்டிச் சேரக்கடவோம்

 

தேவனுடைய சிங்காசனத்தைக் கிட்டிச் சேரும்படி நமக்கிருக்க வேண்டிய தைரியத்திற்கான அடிப்படை,
நம்முடைய சுய நீதியோ அல்லது நம்முடைய உண்மையோ அல்ல என்பதை நாம் நினைவில் வைத்துக்
கொள்ள வேண்டும். இது மிக மிக முக்கியமான ஒரு விஷயமாகும். மாறாக, தேவனுடைய நீதியும்,
தேவனுடைய உண்மையும்தான் அதற்கு அடிப்படையாயிருக்கிறது.

 

1 யோவான் 3:21-22 வசனங்களில்
இந்தச் சிந்தை வெளிப்படுகிறது: “பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று
தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, நாம் வேண்டிக் கொள்ளுகிறதெதுவோ,
அதை அவராலே பெற்றுக் கொள்கிறோம்.”

 

ஏதோ ஒரு வகையான நீதியோ, தகுதியோ நம்மிடம் இருக்கிறது என்று நினைத்து, தேவனை
அணுகும் விஷயத்தில் நம்முடைய சுய நீதியை நாமே உரிமை பாராட்டிக் கொள்வோம் என்றால், அதன்
விளைவாக, அவரண்டை செல்வதற்கு தைரியம் எதுவும் நமக்குள் இருக்காது. காரணம், நம்மில் ஒரு
தகுதியும் இல்லை என்பதுதான் உண்மை. நம்மில் ஒரு நீதியும் இல்லை.

 

நம்முடைய நம்பிக்கையும், தைரியமும் நம்மை அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது.
நம்முடைய இருதயம் நம்மைக் குற்றந்தீர்க்க நாம் அனுமதிக்காத ஒரு இடத்திற்கு நாம் வர
வேண்டும். நம்முடைய சுய நீதியையோ அல்லது நம்முடைய ஞானத்தையோ நம்பியிராமல்,
தேவனுடைய உண்மையை மட்டுமே நம்பியிருக்கிற ஒரு இடத்திற்கு நாம் வர வேண்டும்.

 

அதுதான் நமக்குள் தைரியத்தை உண்டாக்குகிறது. “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து,
மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை,” என்று ரோமர்
8:1-ல், பவுல் எழுதியிருக்கிறார். தொடர்ந்து வரும் இந்த அதிகாரத்தின் வசனங்களில், பரிசுத்த
ஆவியானவரால் நிரப்பப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்படுகிற ஒரு வாழ்க்கையின் மிகவும் அழகான,
மகிமையான ஒரு படத்தை பவுல் வரைந்திருக்கிறார்.

 

இந்த வாழ்க்கையினால் உண்டாகும் நன்மைகள்,
விசேஷமான சிலாக்கியங்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் அவர் அதில் தொகுத்து
எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழையச் செய்யும் ஒரு வாசலாக, இந்த அதிகாரத்தின்
முதல் வசனம் எழுதப்பட்டிருக்கிறது. நாம் அதை திரும்பவும் வாசிப்போம்: “ஆனபடியால், கிறிஸ்து
இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு
ஆக்கினைத்தீர்ப்பில்லை.”

 

ஆகையால் எல்லா குற்ற உணர்வுகளையும் நாம் ஒதுக்கி, தள்ளி விட வேண்டும்.
தேவனை சரியான விதத்தில் அணுகுவதற்கான ஒரு முக்கியமான நிபந்தனை, இயேசுவின்
நாமத்தில் அவரிடம் வருவதுதான். இயேசுவின் நாமத்தில் நாம் வரும்போது, அவர் நிமித்தம், நம்முடைய
ஜெபங்கள் கேட்கப்படுகின்றன என்ற நிச்சயம் நமக்கு உண்டாகிறது. அது நம்முடைய கவனத்தை,
நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையின் காரியங்களிலிருந்தும், கிரியைகளிலிருந்தும் அகற்றி விடுகிறது.

 

இயேசுவின் நாமத்தில் நாம் வரும்போது, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன என்றும், நாம்
தேவனுடைய பிள்ளைகளாய் அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறோம் என்றும் விசுவாசித்து நாம்
வருகின்றோம். இது தேவனைப் பிரியப்படுத்துகிறது. இவ்விதத்தில் நாம் வர வேண்டும் என்றுதான் அவர்
விரும்புகிறார்.

 

கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி. இப்பொழுது நான் உம்மிடம் தைரியமாய் வர முடியும். என்
பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன, நான் தேவனுடைய பிள்ளையாய் அவரால் ஏற்றுக்
கொள்ளப்பட்டிருக்கிறேன் என்று விசுவாசித்தவனாய், இயேசுவின் நாமத்தில் நான் தேவனுடைய
சிங்காசனத்தண்டை வருகின்றேன். நான் நிச்சயம் தேவனுடைய கிருபாசனத்தின் அருகே கிட்டிச்

சேருவேன்.

 

ஆமென்...