பிதாவாகிய தேவனுடைய சித்தத்தைச் செய்வோம்


பூரணர்களாகும்படி தொடர்ந்து முன்னேறக்கடவோம்

 

எபேசியர் 1:5-ல், விசுவாசிகளாகிய நம் எல்லோரையும் குறித்து பவுல் இவ்வாறு எழுதியிருக்கிறார்: “தேவன்
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய் தமக்கு சுவீகாரப்
புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.”

 

தேவன் தம்முடைய பிள்ளைகளைக் குறித்து வைத்திருக்கிற
நோக்கத்தைக் குறித்தும் பவுல், ரோமர் 8:29-ல் இவ்வாறு எழுதியிருக்கிறார்: “தம்முடைய குமாரன் (இயேசு)
அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ,
அவர்களை தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்.” ஆக, இயேசுதான்
தேவனுடைய குமாரன் என்பதற்கு மாதிரியாயிருக்கிறார்.

 

பூரண நிலையை அடையும்படிக்கு, நாம் எல்லோரும் அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாற வேண்டியவர்களாய் இருக்கிறோம். அவர்தாமே புதிய,
ஜீவ மார்க்கமாயிருக்கிறார். நாம் அந்த மார்க்கத்தின் வழியாக, பூரண நிலையை நோக்கிச் செல்கிறோம்,
மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கிறோம், தேவனண்டை கிட்டிச் சேருகிறோம் (எபிரெயர் 6:1-2; 10:19-
22). இயேசுவை பூரண நிலையை நோக்கி நடத்திய அதே வழியைத்தான் நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற
வேண்டும்.

 

பூரண நிலையை நோக்கிய பாதையானது இயேசுவுக்கு சுலபமாக இருக்கவில்லை. நமக்கும் அது
சுலபமாக இருக்காது, கடினமாகத்தான் இருக்கும். “இயேசு நம்மைப்போல எல்லா விதத்திலும்
சோதிக்கப்பட்டாலும், பாவமில்லாதவராயிருக்கிறார்,” என்று எபிரெயர் 4:15 சொல்கிறது. மாம்சத்தில்
வெளிப்பட்ட இயேசு, எல்லா வகையான சோதனைகளையும் எதிர்கொண்டார்.

 

நமக்கு எதிராக வருகிற எல்லா பாவ சோதனைகளும், இயேசுவுக்கும் வந்தது. ஆனாலும் அவர் ஒருபோதும் பாவம் செய்ததில்லை.
சோதனைக்குட்படுத்தாத பாவம் என்று எதுவுமில்லை! நாம் அந்த சோதனைக்கு இணங்கி விட்டுக்
கொடுக்கும்போதுதான், பாவம் வருகின்றது.

 

இயேசு தம்முடைய மாம்சத்தில் இங்கு வாழ்ந்தபோது, எல்லா பாவ சோதனைகளையும்
மேற்கொள்ளும்படி எது அவரை பெலப்படுத்தியது? பிதாவாகிய தேவனுடைய சித்தத்தைச் செய்யும்படி
ஒருமுகமாய், உறுதியாய் நின்று அவர் எடுத்த தீர்மானம்தான், அவருடைய வெற்றிக்கு வழிவகுத்தது.

 

இந்த உண்மையை தாவீது தீர்க்கதரிசனமாகச் முன் கூட்டியே எடுத்துரைத்தான். சங்கீதம் 40:7-8
வசனங்களை வாசிப்போம்: அப்பொழுது நான், “இதோ, வருகிறேன். புஸ்தகச் சுருளில் என்னைக் குறித்து
எழுதியிருக்கிறது. என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன். உமது
நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது,” என்று சொன்னேன்.

 

இயேசு இந்த பூமியில் ஊழியம் செய்து கொண்டிருந்த நாட்களில், அவர் செய்த எல்லாவற்றிற்கும்
பின்னணியில் இருந்த இந்த அடிப்படை நோக்கத்தை திரும்பத் திரும்ப வெளிப்படுத்தினார். தம்முடைய
பிதாவாகிய தேவன் தனக்குக் கொடுத்திருந்த ஒவ்வொரு வேலையையும் அவர் செய்து முடிக்கும்வரை,
அவர் முழுமையான திருப்தியை அடையவே இல்லை.

 

யாக்கோபின் கிணறு அருகே, அவர் தம்முடைய
சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார், “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து,
அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது (என்னை பெலப்படுத்தி,
நிலைநிறுத்துகிற உணவாயிருக்கிறது)” (யோவான் 4:34). [யோவான் 5:30 மற்றும் 6:38 வசனங்களையும்
வாசித்துப் பாருங்கள்.]

 

கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி. நீர் என்னை நேரான முன்னேற்றத்தின் பாதையில் நடத்துகிறீர்.
பூரண நிலையை அடைவதில் இயேசுவின் சாயலுக்கு ஒப்பாக மாறும்படி தீர்மானிக்கிறேன். தேவனுடைய
சித்தத்தைச் செய்து, அவருடைய வேலையைச் செய்து முடிக்கும்படி என்னை ஒப்புக் கொடுக்கிறேன்.

பூரணராகும்படி, நான் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறேன்.

 

ஆமென்...