நம்முடைய ஆவிக்குரிய இலக்கு என்ன?


பூரணர்களாகும்படி தொடர்ந்து முன்னேறக்கடவோம்

 

கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு
நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்,
கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய
அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. (எபிரெயர் 6:1-2)

 

பரிபூரண நிலையை நாடி, நாம் அதை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலான
கிறிஸ்தவர்கள், பாவமே இல்லாத பரிபூரண நிலையைக் குறித்த போதனைகளை நிறைய
கேட்டிருக்கிறபடியால், பரிபூரணம் என்ற வார்த்தையே அவர்களுடைய செவிகளில் தவறான அர்த்தத்தோடு
விழுகின்றதை நான் கவனித்திருக்கிறேன். இது வருந்தத்தக்க விஷயமாகும்.

 

தாங்கள் பூரண நிலையை அடைந்து விட்டதாக உரிமைபாராட்டிக் கொள்கிற பெரும்பாலான கிறிஸ்தவர்கள், அதற்கு அப்படியே
நேரெதிரான நிலையை, தங்களுடைய வார்த்தைகளிலும், நடத்தையிலும், தாங்கள் வாழ்கின்ற விதத்திலும்
வெளிப்படுத்துகிறார்கள்.

 

இந்த மாய்மாலமான மனநிலை, பரிபூரண நிலையை அடைய வேண்டும் என்ற
நாட்டத்திலிருந்து, இலக்கிலிருந்து கிறிஸ்தவர்களை வழி விலகச் செய்து விடுகிறது.

 

பரிபூரணம் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய மூன்று மாற்று
மொழிபெயர்ப்பு வார்த்தைகளை உங்கள் முன் கொண்டு வர விரும்புகிறேன்: “பக்குவமடைதல் (maturity)”,
“நிறைவான நிலையை அடைதல் (fulfillment)”, “முழுமையடைதல் (completion)” என்ற வார்த்தைகள்தான் அவை.
“முடிவு” என்ற அர்த்தமுடைய கிரேக்க பெயர்ச்சொல்லில் இருந்துதான், பரிபூரணம் என்ற அர்த்தமுடைய
வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

 

ஆகையால், இது நாம் அடைய வேண்டிய ஒரு இலக்கை
அல்லது ஒரு குறிக்கோளைக் குறிக்கிறது. ஒரு ஆவிக்குரிய இலக்கு இருந்தால் நல்லது என்பதை நாம்
எல்லோரும் ஒத்துக் கொள்வோம் என்றுதான் நான் நினைக்கிறேன். விசுவாசத்தினால் நீதியின் பாதைக்குள்
பிரவேசித்த பிறகு, ஒன்று, நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்லலாம் அல்லது அப்படியே பின்வாங்கி, நாம்
திரும்பி பின்னோக்கிச் செல்லலாம்.

 

ஒருவர் பின்வாங்கி, திரும்பிச் சென்றார் என்றால், அதில் தேவன்
ஒருபோதும் பிரியமாயிருக்க மாட்டார். ஆகையால் நாம் கெட்டுப்போக பின்வாங்குகிறவர்களாயிராமல்,
ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாய் இருக்க வேண்டும் (எபிரெயர் 10:38-39).
இங்கே இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஒன்று, வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற நிலை (ideal).
இன்னொன்று, நம் கண் முன்பாக இருக்கின்ற நிலை (actual).

 

பக்குவமுள்ள சரியான சிந்தை என்பது, வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற நிலையை பார்த்து விசுவாசித்தாலும், கண் முன்பாக இருக்கின்ற
நிலையோடு வாழ்வதுதான். மாறாக, கண் முன்பாக இருக்கின்ற நிலையை ஏற்றுக் கொண்டு,
வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற நிலையை நிராகரித்தால், அது தோல்வியில் முடியும். பக்குவமற்ற,
தவறான சிந்தை என்பது, வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற நிலையை மட்டும் ஏற்றுக் கொண்டு, கண்
முன்பாக இருக்கின்ற நிலையை ஏற்க மறுப்பதாகும். வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற நிலையை
நீங்கள் பார்த்திருக்கிறபடியால், கண் முன்பாக இருக்கின்ற நிலையை குற்றப்படுத்தி விமர்சிக்காதீர்கள்.

 

கண் முன்பாக இருக்கின்ற நிலையை நீங்கள் பார்த்திருக்கிறபடியால், வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற
நிலையை நிராகரித்து விடாதீர்கள். பக்குவமடைந்த, சரியான சிந்தை என்பது, வேதாகமத்தில்
சொல்லப்பட்டிருக்கிற நிலையை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டு, கண் முன்பாக இருக்கின்ற
நிலையோடு வாழ்வதுதான்.

 

 

கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி. நீர் என்னை நேரான முன்னேற்றத்தின் பாதையில் நடத்துகிறீர்.
பக்குவம்-நிறைவு-முழுமை எனும் இலக்கை நோக்கிச் செல்கிறவர்களோடு, என் ஆத்துமா ஈடேறும்படி,
நானும் சேர்ந்து செல்கிறேன். பூரண நிலையை அடையும்படி, நான் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறேன்.

 

ஆமென்...