நான்கு நிபந்தனைகள்

 

நாம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் கிட்டிச் சேரக்கடவோம்

 

எபிரெயர் 10:22-ன் படி, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் இருக்கும் கிருபாசனத்தின் அருகே கிட்டிச் சேரும்படி,
நாம் நான்கு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தாக வேண்டும். முதலில், “உண்மையான இருதயத்துடன்” நாம்
செல்ல வேண்டும். இரண்டாவதாக, “விசுவாசத்தின் பூரண நிச்சயத்துடன்” நாம் செல்ல வேண்டும்.

 

மூன்றாவதாக, “குற்ற மனச்சாட்சி நீங்க இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டு, சுத்தகரிக்கப்பட்ட
இருதயமுடையவர்களாய்” செல்ல வேண்டும். நான்காவதாக, “சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட
சரீரமுடையவர்களாய்” செல்ல வேண்டும்.

 

உண்மையான இருதயம்: நம்முடைய மூளையறிவைக் கொண்டு அல்ல, நம்முடைய
இருதயங்களோடுதான் நாம் தேவனை அணுகுகின்றோம். தேவன் சிறந்த அறிவாற்றல் உள்ள நபர்களைச்
சந்திப்பதில்லை. ஆனால் அவர் உண்மையாய், வாஞ்சையாய் தம்மைத் தேடுகிற இருதயத்தைச்
சந்திக்கிறார். ஆகையால் நாம் எவ்விதப் பாசாங்கும் செய்யாமல், வேஷமும் போடாமல், எதையும்
மறைக்காமல், எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் திறந்த இருதயமுடையவர்களாய் வர வேண்டும்.

 

விசுவாசத்தின் பூரண நிச்சயம்: எபிரெயர் 11:6 சொல்கிறது: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப்
பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர்
தம்மைத் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” அதாவது, தேவனுடைய
உண்மையை மட்டுமே விசுவாசிக்கிறவர்களாய் நாம் வர வேண்டும். நம்முடைய சுய நீதியின் மீதோ
அல்லது நம்முடைய சொந்த பெலத்தின் மீதோ விசுவாசம் வைத்தவர்களாய் நாம் வரக்கூடாது.

 

குற்ற மனச்சாட்சி நீங்க தெளிக்கப்பட்ட இருதயம்: குற்ற மனச்சாட்சி என்பது, தவறான பாவச்
செயல்களைச் செய்வதால் உண்டாகிறது. ஆனால் இயேசுவின் இரத்தம் தெளிக்கப்படுவதன் மூலம்,
நம்முடைய பாவச் செயல்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன என்ற உறுதியும், நம்முடைய இருதயம்
பாவத்திலிருந்து கழுவி, சுத்திகரிக்கப்பட்டு, தூய்மையானதாயிருக்கிறது என்ற நிச்சயமும் நமக்குள்
உண்டாகிறது.

 

சுத்த ஜலத்தினால் கழுவப்பட்ட சரீரம்: இயேசு ஜலத்தினாலும், இரத்தத்தினாலும் வந்தார் என்று 1
யோவான் 5:6 சொல்கிறது. எபிரெயர் 10:20-22 வசனங்களில், நாம் இந்த இரண்டு விஷயங்களையும்
பார்க்கின்றோம். துர்மனச்சாட்சி நீங்க தெளிக்கப்பட்ட இரத்தம் மற்றும் சுத்தமான தண்ணீரினால்
கழுவப்பட்ட நம் சரீரங்கள். இங்கு தண்ணீர் என்பது கிறிஸ்தவ முழுக்கு ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது
என்று நான் விசுவாசிக்கிறேன்.

 

புதிய ஏற்பாட்டில், கிறிஸ்தவ முழுக்கு ஞானஸ்நானம் என்பது
இயேசுகிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலில் நாம் பங்கடைகின்றோம் என்பதை
பிரதிபலிக்கின்றது. ஆக, இயேசுதான் எபிரெயர் 10:19-ல் குறிப்பிடப்பட்டிருக்கிற புதிதும் ஜீவனுமான
மார்க்கமாக இருக்கின்றார். நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்து, உயிரோடு எழும்பியபோது, அவர்
ஏற்றுக் கொண்ட, கடந்து வந்த எல்லாவற்றோடும் நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

 

தேவனே, உமக்கு நன்றி. காரணம், இயேசுவின் இரத்தத்தினால் இப்பொழுது என்னால் உம்மண்டை வர
முடியும். உண்மையான இருதயத்தோடும், விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும், குற்ற மனச்சாட்சி நீங்க
தெளிக்கப்பட்ட இருதயத்தோடும், சுத்த ஜலத்தினால் கழுவப்பட்ட சரீரத்தோடும் நான் வருகின்றேன் என்று
விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். இந்த விசுவாசத்தோடு, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நான் கிட்டிச் 
சேருகிறேன்.

 

ஆமென்...