அக்டோபர் 5, ஆறுதலைப் பேசுங்கள்

எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்: "எருசலேமே, உன்னை நேசிக்கிறவர்கள் சுகமாய் வாழ்ந்திருப்பார்களாக."

இஸ்ரவேலைக் குறித்த தேவனுடைய நோக்கத்தோடு நாம் எவ்வாறு நம்மையே ஒன்றாக இணைத்து, அதோடு இசையச் செய்துக் கொள்ளப் போகிறோம்? அதற்கு ஒரு எளிமையான வழியை நான் உங்களுக்கு ஆலோசனையாகக் கொடுக்கிறேன். ஏசாயா 40:1-2 வசனங்களில், தேவன் சொல்கிறார்:

“என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள். எருசலேமுடன் பட்சமாய் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும், கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும் அதற்குக் கூறுங்கள்,” என்று உங்கள் தேவன் சொல்கிறார்.

நான் இந்த வசனத்தை அலசி ஆராய்ந்து பார்த்தேன். “என் ஜனத்தை ஆற்றுங்கள்,” என்று சொல்லிய பிறகு உடனே, எருசலேமைக் குறித்துச் சொல்லப்படுவதால், இது யூதர்களைக் குறித்துப் பேசுகிறது என்று நான் புரிந்து கொள்கிறேன்.

எருசலேமை தவிர்த்து விட்டு, யூதர்களை ஆறுதல்படுத்த முடியாது. அவர்களுடைய இருதயம் முழுவதும், எருசலேம் பட்டணத்தோடு இணைத்து, கட்டப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இருதயம், எருசலேமோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. “என் ஜனங்கள்” என்பது யூதர்களைக் குறிக்குமென்றால், “என் ஜனத்தை ஆற்றுங்கள்,” என்று யாரிடம் இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டது.

(எபிரெய மொழியில் பார்க்கும்போது), “என் ஜனத்தை ஆற்றுங்கள்,” என்ற வார்த்தைகள், ஒரு கூட்ட ஜனத்தைப் பார்த்து, பன்மையில் சொல்லப்பட்டது. இவர்கள் வேதாகமத்தின் தேவனையும், அவருடைய வார்த்தையின் அதிகாரத்தையும் ஏற்றுக் கொண்ட ஜனங்களாய் இருக்கிறார்கள். யார் இவர்கள்? நீங்களும், நானும்தான். நம்மைப்போல, கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஜனங்களைப் பார்த்துதான் இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கிறது.

தேவன் இங்கு என்ன சொல்கிறார்? “இஸ்ரவேலாகிய, என் ஜனத்தை ஆற்றித் தேற்றுங்கள்.” நாம் இஸ்ரவேலை ஆற்றித் தேற்ற வேண்டும் என்று தேவன் நம்மிடம் நிச்சயமாய் எதிர்பார்க்கிறார்.

இயேசுவை விசுவாசிக்கிற யூத விசுவாசிகள் பலர் எனக்கு நண்பர்களாயிருக்கிறார்கள். ஒரு உண்மையை, அவர்கள் என்னிடம் குறிப்பிட்டுச் சொல்வார்கள். உலகமெங்கும் இருக்கிற சபையானது, இஸ்ரவேலுக்கு ஆறுதல் சொல்வதைக் காட்டிலும், அதிக நேரத்தை, இஸ்ரவேல் மீது குற்றம் சொல்வதிலும், கடுமையாக விமர்சிப்பதிலும் செலவழிக்கிறது என்பதுதான் அது. கடுமையாக விமர்சித்து, குற்றம் சொல்லும்படி நாம் அழைக்கப்படவில்லை.

மாறாக, பட்சமாய், ஆறுதலாய் பேசும்படி நமக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துவதென்பது, இந்த ஆற்றித் தேற்றுவதற்கான ஒரு வழியாயிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். இஸ்ரவேலைக் குறித்த வேதாகமத்திற்கு முரண்பட்ட தவறான எண்ணங்களும், இஸ்ரவேலை அலட்சியப்படுத்தி, புறக்கணிக்கிற மனநிலைகளும், தவறான புரிந்துகொள்ளுதல்களும் உடைக்கப்பட வேண்டும், நிர்மூலமாக்கப்பட வேண்டும்.

உண்மையான கிறிஸ்தவ அன்பின் தணலில், இவைகளெல்லாம் உருகி, கரைந்து போக வேண்டும். இன்றைய காலகட்டத்தில், இதுதான் நமக்குக் கொடுக்கப்பட்ட வேலையாயிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.

"எருசலேமே, உன்னை நேசிக்கிறவர்கள் சுகமாய் வாழ்ந்திருப்பார்கள்." நன்றி கர்த்தாவே, இஸ்ரேலை நேசிக்கிறவர்களுக்கு நீர் தந்திருக்கிற இந்த வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. நான் தேவனுடைய ஜனங்களுக்கு ஆறுதலாகப் பேசுவேன்; நான் எருசலேமுக்கு பட்சமாய் ஆறுதலாய் பேசுவேன் என்று நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். எனவே, நான் எருசலேமைக் குறித்த அக்கறையோடு, அதன் சமாதானத்திற்காக உம்மிடம் ஜெபிக்கிறேன். ஆமென்.