அக்டோபர் 6, கர்த்தராகிய இயேசுவே, நம்மைச் சுகமாக்கும் மருத்துவர்

எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்:"எருசலேமே, உன்னை நேசிக்கிறவர்கள் சுகமாய் வாழ்ந்திருப்பார்களாக."

முதலில், தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக் கொண்டு, இஸ்ரவேல் ஜனங்கள் அவரால் மீட்கப்பட்ட, அவருடைய சொந்த ஜனங்களாய், உடன்படிக்கையின் ஜனங்களாய் மாறிய பிறகு, அவர் அவர்களுக்குக் கொடுத்த முதல் விசேஷமான வெளிப்பாடு, அவர் அவர்களை சுகமாக்கும் பரிகாரி என்பதுதான்.

இது யாத்திராகமம் 15:26-ல் சுட்டிக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கே கர்த்தர் இஸ்ரவேலிடம் இவ்வாறு சொல்கிறார், “நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்.”

“உன் பரிகாரி” என்ற வார்த்தைக்கு, தற்கால எபிரெய மொழியில், “உன் மருத்துவர்” என்று அர்த்தம். யாத்திராகமம் 15:26-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிற அதே வார்த்தைதான், இன்றைய எபிரெய மொழியில், “மருத்துவர்” என்று பயன்படுத்தப்படுகிறது.

எபிரெய மொழியின் மூவாயிரம் வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றின் காலகட்டத்தில், இவ்வார்த்தை தன் அர்த்தத்தை மாற்றிக் கொள்ளவில்லை. “நானே உன் மருத்துவர்,” என்ற வார்த்தைகளை அழுத்தமாக, ஆணித்தரமாக கர்த்தர் இஸ்ரவேலிடம் வலியுறுத்திச் சொல்கிறார்.

கர்த்தருடைய நாமமும், கர்த்தருடைய உடன்படிக்கையும் ஒருபோதும் மாறாத இரண்டு விஷயங்களாய் இருக்கின்றன. தம்முடைய ஜனங்களின் மருத்துவராய் கர்த்தர் செய்கிற கிரியைகள், -அவருடைய நாமம் மற்றும் அவருடைய உடன்படிக்கையோடு ஒன்றாய் இணைந்திருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், இது ஒருபோதும் மாறாது.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மெசியாவைக் குறித்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும்படி, ஒரு இரட்சகராய், மீட்பராய், இயேசு இஸ்ரவேல் ஜனங்களிடம் வந்தார்.

தம்முடைய ஜனங்களின் மருத்துவராய், அவர் தேவனை திரும்பவும் அவர்களிடம் வெளிப்படுத்தினார். இயேசுவின் சுகமளிக்கும் ஊழியம், அவரிடமிருந்து ஆரம்பிக்கவில்லை, அவரிடமிருந்து புறப்படவுமில்லை.

மாறாக, அது தேவனுடைய சுகமளிக்கும் சுபாவத்தை வெளிப்படுத்தியது. தம்முடைய ஜனங்களோடு தேவன் ஏற்படுத்திய சுகமளிக்கும் உடன்படிக்கையையும் அது வெளிப்படுத்தியது. தம்முடைய ஜனங்களுக்கு சுகத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் தேவன் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார் என்றால், அதற்கு அஸ்திபாரம், அவருடைய வார்த்தையும், வேதவசனங்களும்தான்.

நம்முடைய தேவைகளுக்கான தேவனுடைய பதில், பிரதானமாக, அவருடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது, அத்தியாவசியமானதாயிருக்கிறது! நாம் அவருடைய வார்த்தையை அலட்சியப்படுத்தி, கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம் என்றால், பிறகு அவர் நம்முடைய தேவைகளைச் சந்திப்பார் என்று எதிர்பார்ப்பதற்கு உண்மையில் நமக்கு எந்த உரிமையும் இருக்காது.

மாறாக, நாம் அவருடைய வார்த்தைக்குத் திரும்பி, அதன் மூலம் அவரை நாடுவோம் என்றால், நம்முடைய ஆவிக்குரிய, சரீரப்பிரகாரமான தேவைகள் அனைத்தையும் அவர் சந்திக்கிறார் என்பதை அவருடைய வார்த்தையில் கண்டறிவோம்.

"எருசலேமே, உன்னை நேசிக்கிறவர்கள் சுகமாய் வாழ்ந்திருப்பார்கள்." நன்றி கர்த்தாவே, இஸ்ரேலை நேசிக்கிறவர்களுக்கு நீர் தந்திருக்கிற இந்த ஆசீர்வாதத்திற்காக உமக்கு நன்றி. தம்முடைய ஜனங்களின் மருத்துவராய் கர்த்தர் செய்கிற கிரியைகள், அவருடைய நாமம் மற்றும் அவருடைய உடன்படிக்கையோடு ஒன்றாய் இணைந்திருக்கின்றன என்பதை நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். எனவே, நான் எருசலேமைக் குறித்த அக்கறையோடு, அதன் சமாதானத்திற்காக உம்மிடம் ஜெபிக்கிறேன். ஆமென்.