அக்டோபர் 12, விசுவாசத்தோடு பிரவேசிக்கிறோம்

கிறிஸ்துவுக்குள் உண்டான இளைப்பாறுதலை, நாம் தவற விட்டு விடாதபடி, பயந்திருக்கக்கடவோம்

விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைபாறுதலில் பிரவேசிக்கிறோம் [அல்லது அந்த இளைப்பாறுதலில் பிரவேசித்துக் கொண்டிருக்கிறோம்]. அவருடைய கிரியைகள் உலகத் தோற்றம் முதல் முடிந்திருந்தும், “இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்,” என்றார்.

மேலும், “தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்,” என்று ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அன்றியும், “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை,” என்றும் அந்த இடத்தில்தானே சொல்லியிருக்கிறார். (எபிரெயர் 4:3-5)

இந்த வேதப்பகுதியில், “விசுவாசித்தவர்களாகிய” என்ற வார்த்தை, கடந்தகால வினைச்சொல்லாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “பிரவேசிக்கிறோம்” என்ற வார்த்தை, நிகழ்கால வினைச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆக, தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் நாம் பிரவேசிப்பதற்கு முன், நாம் ஏற்கனவே விசுவாசித்திருக்க வேண்டும். நாம் திரும்பத் திரும்ப விசுவாசிப்பதில்லை. அது ஒருமுறை செய்து முடிக்கப்பட்ட ஒன்றாகும். நாம் தீர்மானத்தை எடுத்து விட்டோம்.

அந்த அடிப்படையில், நம்மால் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும். திரும்பத் திரும்ப தொடர்ந்து புதிதாக விசுவாசிக்கிறவர்கள், இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கான தகுதியை அடையவில்லை. ஏற்கனவே விசுவாசித்திருக்கிறவர்கள் மட்டுமே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கிறார்கள்.

இந்த இளைப்பாறுதலின் சத்தியத்தை இன்னும் அறிந்து கொள்ளும்படி, பழைய ஏற்பாட்டிற்குச் செல்வோம். ஆதியாகமம் 2:2 சொல்கிறது, “தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.” தேவன் தாம் செய்து கொண்டிருந்த எல்லா வேலைகளையும் செய்து முடித்து விட்டு, இளைப்பாறினார்.

தேவன் களைப்படைந்ததால், இளைப்பாறினார் என்று நான் விசுவாசிக்கவில்லை. மாறாக, இளைப்பாறுதல் என்பது அவருக்குப் பிரியமான ஒன்றாக இருந்தது. அவர் ஆற அமர்ந்து, தாம் உருவாக்கின ஒவ்வொன்றையும் பார்த்தார். நேரமெடுத்து, அந்த ஒவ்வொன்றின் அழகையும் அவர் ரசித்தார், அனுபவித்தார்.

நாம் செய்து முடித்த, நாம் உருவாக்கின காரியங்களை நேரமெடுத்து, நம்மில் எத்தனை பேர் ரசித்துப் பார்க்கிறோம்? இன்றைக்கு சிலர் ஏதோ ஒரு காரியத்தைச் செய்து முடித்து விட்டார்கள் என்றால், உடனடியாக, அடுத்த காரியத்தைச் செய்வதில் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள். பெரும்பாலானோரின் மன நிலை இதுதான். ஆனால் தேவன் உருவாக்கின மாதிரி இதுதான்.

ஒன்றை நீங்கள் செய்து முடித்த பிறகு, நேரம் செலவழித்து, அதன் அழகை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான் அது. நீங்கள் செய்து முடித்த காரியம் எதவாயிருந்தாலும், ஆற அமர்ந்து, அதைப் பார்த்து ரசிப்பதென்பது தேவனுடைய சுபாவமாயிருக்கிறது. உண்மையில், இளைப்பாறுகிற சுபாவமே, தேவனுடைய சுபாவமாயிருக்கிறது. 

உம்முடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும்படி தந்திருக்கிற வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி, கர்த்தாவே. தம்முடைய இளைப்பாறுதலை நம்மோடு பகிர்ந்து கொள்வது, தேவனுக்குப் பிரியமான விஷயங்களில் ஒன்றாயிருக்கிறது. அவர் பிரவேசித்திருக்கிற இளைப்பாறுதலுக்குள் நானும் பிரவேசிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆகையால் கிறிஸ்துவுக்குள் உண்டான இளைப்பாறுதலை தவற விட்டுவிடாதபடி, நான் எச்சரிக்கையாயிருக்கிறேன் என்று அறிக்கை செய்கிறேன். ஆமென்.