அக்டோபர் 15, நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியது, மிக மிக முக்கியம்

நாம் ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்

"சபையோராகிய நாம்" ஒன்றாய் சேர்ந்து எடுக்க வேண்டிய இரண்டாவது தீர்மானம், எபிரெயர் 4-ம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இது ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியதைக் குறித்ததாகும்: "

ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி (எடுத்துக்காட்டின்படி), ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்து போகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்" (எபிரெயர் 4:11).

எகிப்திலிருந்து வனாந்திரத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களின் பிரயாணத்தில் நிகழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று முன்பு நான் சுட்டிக் காண்பித்தேன்.

அவர்களில் பெரும்பாலானோர், வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை, தேவன் அவர்களுக்கு வாக்குப் பண்ணின இளைப்பாறுதலை அடையாமல் போனார்கள். அவர்களுடைய தவறான நடத்தையும், தவறான எண்ணங்களும்தான் இதற்குக் காரணம். அவர்கள் வனாந்திரத்தில் விழுந்து போனார்கள். அவர்களுடைய அவிசுவாசம் மற்றும் கீழ்ப்படியாமையினால், அவர்கள் அந்த வனாந்திரத்திலே மரித்துப் போனார்கள் என்று வேதவசனம் சொல்கிறது (எண்ணாகமம் 14:29,32).

அது மட்டுமல்ல, அவர்களுடைய அவிசுவாசம் மற்றும் கீழ்ப்படியாமையினால், அவர்கள் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கத் தவறினார்கள். வெளியே பார்க்கக்கூடிய விஷயங்களெல்லாம், அவர்களிடம் இருந்தன.

ஆனால் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கக்கூடிய திறன் அவர்களுக்குள் இல்லை. இதுதான் மெய்யான மார்க்கத்தின் உள்ளான நிஜத் தேவையாய் இருக்கிறது.

ஆக, இஸ்ரவேல் செய்த இந்தத் தவறு, பெருந்துயரை அவர்களுக்கு உண்டாக்கி விட்டது. "பயப்படக்கடவோம்" என்று எபிரெயர் 4:1-ல் எழுதிய எபிரெய நிருப ஆசிரியர், இஸ்ரவேலின் எடுத்துக்காட்டை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார், "ஜாக்கிரதையாயிருக்கக் கடவோம்." இது இயல்பாய் நடக்கக்கூடிய விஷயம் என்றுதான் நான் விசுவாசிக்கிறேன்.

இந்த ஆவிக்குரிய நிலையின் ஆபத்துக்களை மெய்யாகவே நம் இருதயத்தில் கருத்தாய் சிந்தித்துப் பார்த்து, பயப்படுவோம் என்றால், அடுத்ததாக, இயல்பாக நாம் செய்யக்கூடிய விஷயம், ஜாக்கிரதையாய் இருப்பதுதான்.

ஜாக்கிரதையாயிருப்பதென்றால் என்ன என்பதை ஒரு கணம் நாம் சிந்தித்துப் பார்ப்போம். ஒரு வார்த்தையின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒருவழி, அதன் எதிர்ச்சொல்லை கருத்தில் எடுத்துக் கொள்வதுதான்.

ஜாக்கிரதை என்ற வார்த்தையின் எதிர்ச்சொல், அலட்சியம் செய்தல்; சோம்பேறித்தனம் என்பதாகும். அலட்சியமாயிருப்பதைக் குறித்து, சோம்பேறித்தனத்தைக் குறித்து ஒரு நல்ல வார்த்தை கூட வேதாகமத்தில் எழுதப்படவில்லை.

ஆனால் இன்றைய கிறிஸ்தவ உலகத்தில், இந்த வார்த்தையைக் குறித்த போதனைகளுக்கு போதுமான கவனம் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

கர்த்தாவே, உம்முடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கான வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. கர்த்தராகிய உம்முடைய சத்தத்திற்கு செவிகொடுத்து கீழ்ப்படிவதுதான், மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் அதிமுக்கியமான ஒன்றாக எனக்கு இருக்கிறது என்று நான் தீர்மானிக்கிறேன், அறிக்கை செய்கிறேன். எனவே இவ்விஷயத்தில் நான் ஜாக்கிரதையாயிருப்பேன். ஆமென்.