அக்டோபர் 20, ஜாக்கிரதை உணர்வை நாம் காத்து, பண்படுத்தி, வளர்க்க வேண்டும்

நாம் ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்

ஜாக்கிரதை என்பது ஒரு கனியாக இருக்கிறது. அதை பண்படுத்தி, பயிரிட்டு, காத்து, வளர்த்து, அறுவடை செய்ய வேண்டும். அதை எவ்வாறு பண்படுத்தி வளர்க்க வேண்டும் என்பதைக் குறித்து, சில சுருக்கமான வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.

1 தீமோத்தேயு 2:6-ல், பவுல் சொல்கிறார்: "பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடைய வேண்டும் [கடினமாய் உழைத்து பயிரிடுகிற விவசாயி, அதன் அறுவடையில், கனியில் பங்கடைகிற முதல் நபராக இருக்க வேண்டும்]."

பவுல் இங்கே ஒரு எளிமையான, அடிப்படை உண்மையை வெளிக் கொண்டு வருகின்றார். பயிர்களைப் பயிரிடுவதற்கு கடினமான உழைப்பு அத்தியாவசியமாகிறது. முயற்சிகளை எடுக்காமல், அதைச் செய்ய முடியாது.

இந்த உண்மை, ஆவிக்குரிய கனிகளைக் குறித்த விஷயத்தில் அப்படியே பொருந்துகிறது. ஆவிக்குரிய கனிகளை அறுவடையாய் பெறும்படி, அதற்காக பயிரிடுகிற விஷயத்திற்கும் கடின உழைப்பு இன்றியமையாததாயிருக்கிறது. நம்முடைய வாழ்க்கையிலும் ஆவிக்குரிய கனிகளை அறுவடையாய் பெறுவதற்கு இரண்டு வழிகளை இங்கே நான் சொல்ல விரும்புகிறேன்.

முதலில், நாம் தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து வாசிக்க வேண்டும். காரணம், நம்முடைய எல்லா தேவைகளையும் அடிப்படையில் தேவன் அங்கேதான் சந்தித்திருக்கிறார்.

நாம் அவருடைய வார்த்தையை அறிந்திருக்கவில்லை என்றால், நமக்குத் தேவையான, நாம் பெற்றுக் கொள்ள விரும்புகிற பல தேவனுடைய ஆசீர்வாதங்களை நாம் இழந்து விடுவோம்.

திரும்பவும், பவுல் தீமோத்தேயுவுக்கு இவ்வாறு எழுதினார்: "நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்துப் போதிக்கிறவனாயும், உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு" (2 தீமோத்தேயு 2:15).

தேவனுடைய வார்த்தையாகிய, வேதவசனத்தை, சத்திய வார்த்தையை நிதானமாய், துல்லியமாய் பகுத்துக் கையாள வேண்டுமென்றால், நாம் கடினமாய் உழைக்கிற வேலையாட்களாய் இருக்க வேண்டும். அதாவது, நாம் நம் சட்டைக் கைகளை மடித்து விட்டு, களத்தில் இறங்கி உழைக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

நாம் பின்பற்ற வேண்டிய இரண்டாவது வழிகாட்டுதல், ஜெபத்தில் நேரம் செலவழிப்பதாகும். ஜெபம் என்று சொல்லும்போது, நாம் தேவனிடம் பேசுவதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. செவிகொடுத்துக் கேட்பதையும் நான் சொல்கிறேன்.

ஜெபத்தில், நாம் பேசிக் கொண்டே இருப்பதைக் காட்டிலும், அவருடைய சத்தத்திற்கு செவி கொடுப்பதென்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இங்கும் இயேசுதான் நமக்கு பூரணமான முன்மாதிரியாக இருக்கிறார்.

இந்த பூமியில் இயேசு செய்த ஊழியத்திற்கு, பிதாவாகிய தேவனோடு அவருக்கிருந்த உறவுதான் அடிப்படையாய், அஸ்திபாரமாய் இருந்தது. அந்த உறவைக் காத்துக் கொண்டு, அதில் வளரும்படி, இயேசு அதிகமான நேரத்தை ஜெபத்தில் செலவழித்தார்.

பெரும்பாலும், அதிகாலை நேரத்தில் அவர் ஜெபித்தார். அங்கேதான் அவர் பிதாவாகிய தேவனுடைய சத்தத்தைக் கேட்டார். அவருடைய ஊழியத்திற்கான வழிகாட்டுதலையும் அங்கே அவர் பெற்றுக் கொண்டார்.

கர்த்தாவே, உம்முடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கான வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. தேவனுடைய வார்த்தையை வாசித்து, என் நேரத்தை ஜெபத்தில் செலவழிப்பதன் மூலம், என் வாழ்க்கையில் ஜாக்கிரதை எனும் கனியை பண்படுத்தி, வளர்ப்பேன் என்று நான் அறிக்கை செய்கிறேன். இவ்விஷயத்தில் நான் ஜாக்கிரதையாயிருப்பேன். ஆமென்.