அக்டோபர் 25, இயேசுவே, நமக்காக பரிந்து பேசி வழக்காடுகிறவர்

நம்முடைய அறிக்கையை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்

இயேசுவே “நம்முடைய அறிக்கையின் பிரதான ஆசாரியராக இருக்கிறார்” (எபிரெயர் 3:1). நம்முடைய அறிக்கை, இயேசுவே நம்முடைய பிரதான ஆசாரியர் என்று அறிவிக்கிறது; அவரை நம்முடைய பிரதான ஆசாரியராக அங்கீகரித்து, ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இதற்கு அப்படியே நேரெதிரான விஷயமும் உண்மையாயிருக்கிறது.

நாம் இதைக் குறித்து ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நாம் எந்த அறிக்கையையும் செய்யவில்லை என்றால், பிரதான ஆசாரியரே இல்லாத ஒரு நிலையில்தான் நாம் நிற்போம்.

அதற்காக நம்முடைய பிரதான ஆசாரியராய் இருந்து செய்கிற ஊழியத்தையே இயேசு நிறுத்தி விட்டார் என்று அர்த்தமல்ல. மாறாக, நம்முடைய பிரதான ஆசாரியராய் இருந்து அவர் செய்யக்கூடிய ஊழியத்திற்கு நாம் வாய்ப்பு கொடுக்காமல் இருந்து விடுகிறோம்.

அவரே நம்முடைய அறிக்கையின் பிரதான ஆசாரியராய் இருக்கிறார். வேதவசனத்தின் அடிப்படையில், விசுவாசித்து, நம்முடைய வாயினால் நாம் சரியான காரியங்களைப் பேசுவோம் என்றால், நாம் ஒருபோதும் வெட்கத்திற்கு உட்படுத்தப்பட மாட்டோம் என்பதற்கு இயேசு தாமே நித்தியத்திற்கும் உத்தரவாதமளித்திருக்கிறார்.

நாம் என்ன அறிக்கை செய்கிறோமோ, அதை நாம் நிச்சயம் எப்பொழுதும் அனுபவிப்போம். மாறாக, நாம் சரியான காரியங்களைப் பேசவில்லை என்றால், நம்முடைய பிரதான ஆசாரியரின் வாயை நாம் அமைதிப்படுத்தி விடுகிறோம், மௌனமாக்கி விடுகிறோம். பரலோகத்தில் நம்முடைய சார்பில் பேசுவதற்கு அவரிடத்தில் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது.

“நமக்காக பரிந்து பேசி வழக்காடுகிற வழக்கறிஞர் (Advocate)” என்றும் இயேசு அழைக்கப்படுகிறார்  (1 யோவான் 2:1). “வழக்கறிஞர் (Advocate)” என்ற வார்த்தை, “சட்ட நிபுணர் (Attorney)” என்று தற்காலத்தில் பயன்படுத்தப்படுகிற வார்த்தைக்கு ஒத்திருக்கிறது.

பரலோகத்தில், நம்முடைய வழக்கிற்காக பரிந்து பேசி வழக்காடுகிற சட்ட நிபுணராக இயேசு இருக்கிறார். அவர் ஒருபோதும் எந்த வழக்கிலும் தோற்றுப் போனதில்லை. ஆனால் நாம் ஒரு அறிக்கையையும் செய்யவில்லை என்றால், அங்கே வழக்காடுவதற்கு அவருக்கு வழக்கே இருக்காது. இதன் விளைவாக, வழக்கு நமக்கு எதிராகவே திரும்பி விடுகிறது.

ஆக, அறிக்கை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் இங்கு அறிந்து கொள்கிறோம். ஆகையால், “நம்முடைய அறிக்கையை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்,” என்று எபிரெய நிருபத்தில் எழுதப்பட்டிருக்கிற இந்த மூன்றாவது எச்சரிக்கைக்கு (எபிரெயர் 4:14) நாம் செவிகொடுப்போம்.

இது மிகவும் இன்றியமையாததாகும். சரியான அறிக்கையைக் குறித்த இந்தக் கோட்பாடு, சுவிசேஷத்தின் மையமாக இருக்கிறது. இதுவே இரட்சிப்பில், நம்முடைய அனுபவமாகவும் இருக்கிறது. உண்மையைச் சொன்னால், சரியான அறிக்கை இல்லையென்றால், இரட்சிப்பு உண்டாகாது என்றுதான் சொல்ல வேண்டும்.    

இயேசுவே, உமக்கு நன்றி. காரணம், நீரே எங்களுடைய அறிக்கையின் மகா பிரதான ஆசாரியராய் இருக்கிறீர். வேதவசனத்தின் அடிப்படையில், என்னுடைய வாயினால் விசுவாச வார்த்தைகளை நான் பேசினால், நான் என்ன அறிக்கை செய்கிறேனோ, அதை நான் நிச்சயம் பெற்றுக் கொள்வேன் என்பதற்கு இயேசு தம்மையே நித்திய நித்தியத்திற்கும் உத்தரவாதமாகக் கொடுத்திருக்கிறார். இதை நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். ஆகையால் என் அறிக்கையை நான் உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவேன். ஆமென்.