இஸ்ரேலைப் புதுப்பிக்கும்படி தேவன் செய்கிற கிரியையைக் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்

 

எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்:
 

 

''உன்னை நேசிக்கிறவர்கள் சுகமாய் வாழ்ந்திருப்பார்களாக''.

 

வேதாகமம், தேவனுடைய அதிகாரப்பூர்வமான வார்த்தை என்பதை ஏற்றுக்கொள்கிற ஒவ்வொருவருக்கும்,
எருசலேமிற்காக ஜெபிக்கும்படியான அழைப்பு விடுக்கப்படுகிறது. ஒவ்வொரு தேசத்திலும், வெவ்வேறு
பின்னணியிலும் வாழ்கின்ற தம்முடைய ஜனங்கள் எல்லோரும் எருசலேம் என்ற ஒரு குறிப்பிட்ட
பட்டணத்தின் சமாதானத்திற்காக அக்கறையாய் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்,
கட்டளையிட்டிருக்கிறார்.

 

இதற்கு ஒரு நடைமுறைக் காரணம் உண்டு. இக்காலகட்டத்திற்கான
தேவனுடைய நோக்கம், அவருடைய ராஜ்யத்தை நிறுவுவதில் முடிவடையும்.  உம்முடைய ராஜ்யம்
வருவதாக, (மத்தேயு 6:10) என்ற வார்த்தைகள் நமக்கு நன்கு தெரியும். நாம் அவைகளைச் சொல்லி
அடிக்கடி ஜெபிக்கிறோம். இதன் மூலம், நாம் இந்த நோக்கத்தோடு நம்மை ஒன்றாய் இணைத்துக்
கொள்கிறோம்.

 

உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல, இந்தப் பூமியிலும் செய்யப்படுவதாக,
என்று அந்த ஜெபம் தொடருகிறது (மத்தேயு 6:10). நாம் இதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தப்
பூமியில்தான் தேவனுடைய ராஜ்யம் நிறுவப்பட வேண்டும். அவருடைய ராஜ்யம் இன்னும் மனுஷருடைய
கண்களுக்குத் தெரியவில்லை.

 

ஆனால் அது புரிந்து கொள்வதற்குக் கடினமானதோ அல்லது ஒரு
உருவமற்றதோ அல்ல. முடிவில், அது தொட்டுணரத்தக்க விதத்தில், கண்களால் பார்க்கக்கூடிய விதத்தில்
இந்தப் பூமியில் நிறுவப்படும். எருசலேம் பட்டணம்தான், தேவனுடைய ராஜ்யத்தின் தலைநகரமாகவும்,
அதன் மையமாகவும் இப்பூமியில் இருக்கும். நீதியான அரசாங்கத்தின் நிர்வாகம், எருசலேமிலிருந்து
ஆரம்பித்து, இப்பூமியின் எல்லாத் தேசங்களுக்கும் செல்லும்.

 

இந்தத் தேசங்களிலிருந்து காணிக்கைகளும்,
ஆராதனையும் எருசலேமிற்கு திரும்பி வரும். ஆக, எல்லா தேசங்களின் சமாதானமும், சுகவாழ்வும்
எருசலேமைச் சார்ந்திருக்கின்றன. எருசலேம் தன்னுடைய சமாதானத்திற்குள் நுழையும்வரை, இப்பூமியில்
எந்த ஒரு தேசமும் மெய்யான, நிலையான சமாதானத்தை அறிந்து கொள்ள முடியாது.

 

எருசலேமை நேசிக்க வேண்டும், எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்ற
தேவனுடைய அழைப்பிற்குச் செவிகொடுத்து கீழ்ப்படிகிற எல்லோருக்கும் ஒரு விசேஷமான,
விலையேறப்பெற்ற வாக்குத்தத்தத்தை தேவன் கொடுக்கிறார்: அவர் சுகித்திருப்பார்கள் (சுகமாய்
வாழ்ந்திருப்பார்கள்) என்பதுதான் அது (சங்கீதம் 122:6). இங்கு சுகித்திருத்தல் (சுகவாழ்வு) என்ற வார்த்தை,
பொருள்ரீதியான சுகவாழ்விற்கு அப்பாற்ப்பட்ட அர்த்தமுடையதாயிருக்கிறது.

 

இது ஒரு ஆழமான, உள்ளான சுகவாழ்வைக் குறிக்கிறது. இது எல்லா கவலைகள் மற்றும் பாரங்களிலிருந்து விடுதலையாய்
வாழ்கின்ற ஒரு வாழ்க்கையைச் சுட்டிக் காண்பிக்கிறது. எருசலேமிற்காக ஜெபிப்பதன் மூலம், நாம்
நம்மையே தேவனுடைய திட்டத்துடன் ஒன்றாய் இணைத்துக் கொள்ளும்போது, அவருடைய
சமாதானத்தின் முன் ருசியை நாம் அனுபவிக்கிறோம்.

 

தம்முடைய இந்த ஜனங்களைப் புதுப்பிக்கும்படி
தேவன் வைத்திருக்கிற திட்டங்களோடு செயல் ஈடுபாட்டுடன் தங்களை இணைத்துக் கொள்கிறவர்கள்,
இந்த உலகத்தின் எல்லா கூச்சல், குழப்பம், யுத்தங்கள் ,மற்றும் அமளிகளின் மத்தியிலும் உள்ளான
சமாதானத்தையும், அமர்ந்திருக்கும் நிலையையும், இளைப்பாறுதலையும் அனுபவிப்பார்கள்.
எருசலேமே, உன்னை நேசிக்கிறவர்கள் சுகமாய் வாழ்ந்திருப்பார்கள்.

 

 

நன்றி கர்த்தாவே, எருசலேமை நேசிக்கிறவர்களுக்கு நீர் தந்திருக்கிற இந்த வாக்குத்தத்த ஆசீர்வாதத்திற்காக உமக்கு நன்றி. தம்முடைய
ஜனங்களைக் குறித்து தேவன் வைத்திருக்கிற நோக்கங்களுக்காக நான் ஜெபிக்கும்போது, எனக்குள்
சமாதானம் வருகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே, நான் எருசலேமைக் குறித்த
அக்கறையோடு, அதன் சமாதானத்திற்காக உம்மிடம் ஜெபிக்கிறேன்.

 

 

ஆமென்.