செப்டம்பர் 2, தேவன் எவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கிறார்!

அன்பினாலே என் பிதாவாகிய தேவன் என்னை அவருடைய மகனாய், மகளாய் ஏற்றுக் கொண்டிருக்கிறார்

இயேசு சிலுவையில் மரித்தபோது, தேவாலயத்தில் பரிசுத்த தேவனையும், பாவ மனுஷனையும் பிரித்துக் கொண்டிருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது.

இது தேவன் நம்மை ஏற்றுக் கொண்டார் என்பதை நமக்கு அறிவிக்கிறது (மத்தேயு 27:51). அது மேலேயிருந்து கீழாகக் கிழிந்தது. எனவே இதற்கு எந்த ஒரு மனுஷனையும் பொறுப்பாகச் சொல்லி விட முடியாது.

தேவனே இதைச் செய்திருக்கிறார். கிழிந்த திரைச்சீலை, இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொரு நபருக்கும் பிதாவாகிய தேவன் கொடுக்கிற அழைப்பாய் இருக்கிறது, “உள்ளே வா. நீ இனி உள்ளே வரலாம். உன்னை நான் வரவேற்கிறேன். நான் உன்னை ஏற்றுக் கொள்ளும்படி, என் குமாரனை நான் நிராகரித்தேன்,” என்று தேவன் சொல்கிறார்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார். (எபேசியர் 1:3-4).

இது நம்முடைய தெரிந்துகொள்ளுதல் இல்லை. இது தேவனுடையதாயிருக்கிறது. நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், இரட்சிக்கப்படும்படி நீங்களே தீர்மானித்தீர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்!

நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், அதற்குக் காரணம், தேவனே உங்களைத் தெரிந்து கொண்டார். நீங்கள் அவருடைய தெரிந்துகொள்ளுதலுக்கு இணங்கினீர்கள். நீங்கள் வேண்டுமானால், உங்களுடைய மனதை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் தேவன் தம்முடைய தீர்மானத்தை மாற்றிக் கொள்வதில்லை.

இன்று பிரசங்கிக்கப்படுகிற சுவிசேஷச் செய்திகளில், நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் சகலமும் நடக்கிறது என்ற விஷயத்திற்கு தவறான முக்கியத்துவம், அளவுக்கு அதிகமாகக் கொடுக்கப்படுகிறது.

நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் முதலில் தேவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கவில்லை என்றால், இந்த விஷயத்தில் நாம் ஒரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அல்ல, மாறாக, தேவன் என்ன செய்து முடித்திருக்கிறார் என்பதைப் பொறுத்து தேவனோடு உங்களுடைய உறவை நீங்கள் அமைத்துக் கொள்வீர்கள் என்றால், நீங்கள் ஒரு நிலையான, உறுதியான, வலிமையான கிறிஸ்தவராய் இருப்பீர்கள். உங்களையும், என்னையும் காட்டிலும் தேவனை அதிகமாய், எவ்வளவு வேண்டுமானாலும் சார்ந்து கொள்ளலாம்!

பிதாவாகிய தேவனே, உம்முடைய பிள்ளையாய் என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறீர். உமக்கு நன்றி. நான் என்ன செய்கிறேன் என்பதன் அடிப்படையில் அல்ல, தேவன் என்ன செய்து முடித்திருக்கிறார் என்பதன் அடிப்படையில் நான் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறேன் என்று நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். அன்பினாலே என் பிதாவாகிய தேவன் என்னை அவருடைய மகனாய், மகளாய் ஏற்றுக் கொள்ளும்படி முன் குறித்திருக்கிறார். ஆமென்.