செப்டம்பர் 4, தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்

நான் அவரிடம் கேட்பதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்பதை என் பிதா அறிந்திருக்கிறார்

சகலத்தையும் அறிந்து வைத்திருக்கும் தன்மை, தேவனுடைய நித்திய சுபாவங்களில் ஒன்றாயிருக்கிறது. 1 யோவான் 3:20-ல், எளிமையான, அதே நேரத்தில் ஆழமான, அழுத்தமான ஒரு வெளிப்பாட்டை நாம் எதிர்கொள்கின்றோம்: “……..தேவன்………..சகலத்தையும் அறிந்திருக்கிறார்,” என்பதுதான் அது.

தேவனுக்குத் தெரியாத விஷயம் என்று எதுவுமில்லை. இந்தப் பூமியில் வாழும் மிக மிகச் சிறிய ஒரு பூச்சியிலிருந்து, பால்வெளியில் தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரம் வரை, அவருக்கு எல்லாம் தெரியும். தேவனுடைய கண்களுக்கு மறைவாய் இருக்கக்கூடிய விஷயம் எதுவுமில்லை.

நம்மைக் குறித்து நமக்குத் தெரியாத விஷயங்களைக் கூட, தேவன் அறிந்திருக்கிறார். நேற்று நான் எழுதியதுபோல, அவர் நம்முடைய தலையிலுள்ள முடிகளின் எண்ணிக்கையைக் கூட அறிந்திருக்கிறார் (மத்தேயு 10:30).

நினிவே பட்டணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஜனத்தொகை எவ்வளவு என்பதை தேவன் அறிந்து வைத்திருந்தார் (யோனா 4:11).

யோனாவுக்கு நிழல் கொடுக்கும்படி தேவன்தான் ஒரு செடியை வளரச் செய்தார். அவரே அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தினார். பிறகு அந்தச் செடியை அரித்துப் போடும்படி, அவரே ஒரு பூச்சிக்குக் கட்டளையிட்டார். அதன் செயலையும் அவரே கட்டுப்படுத்தினார் (யோனா 4:6-7).

“நம் கண்கள் கண்டிராத, நம் காதுகளில் கேட்டிராத, நம்முடைய இருதயத்தில் தோன்றியிராத” காரியங்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார் (1 கொரிந்தியர் 2:9). அவர் தொடர்ந்து 10-ம் வசனத்தில் இவ்வாறு எழுதுகிறார், “ஆனால் நமக்கோ தேவன் அவைகளை தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.”

முன்பு இருந்த, இப்பொழுது இருக்கிற, இனி வரப்போகிற காரியங்களின் மகா ஆழமான ஆழங்களையும் பரிசுத்த ஆவியானவர் தோண்டி எடுக்கிறார், உயரங்களின் மகா உயரங்களையும் எட்டி அடைகின்றார். அவருடைய அறிவு முடிவில்லாதது.

எல்லாவற்றையும் கடந்த, இந்த முடிவில்லாத அறிவின் வெளிச்சத்தில்தான், அதன் அடிப்படையில்தான், நாம் ஒவ்வொருவரும் தேவனுக்கு முன்பாக நம்மைக் குறித்து கணக்கு கொடுக்கக்கூடியவர்களாய் இருக்க வேண்டும், அதற்கு ஆயத்தமாகவும் வேண்டும். “அவருடைய (தேவனுடைய) பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும், வெளியரங்கமாயும் இருக்கிறது. அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.” (எபிரெயர் 4:13). 

பிதாவாகிய தேவனே, நீர் என்னை முழுமையாய் அறிந்திருக்கிறீர். உமக்கு நன்றி. தேவனுடைய அறிவு முடிவில்லாதது, அவருக்குத் தெரியாத விஷயம் என்று எதுவுமில்லை என்று நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். நான் அவரிடம் கேட்பதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்பதை என் பிதா அறிந்திருக்கிறார். ஆமென்.