செப்டம்பர் 5, இயேசுவின் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட அறிவும், ஞானமும் எப்படிப்பட்டதாயிருந்தது?

நான் அவரிடம் கேட்பதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்பதை என் பிதா அறிந்திருக்கிறார்

தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட அறிவும், ஞானமும், இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்த நாட்களிலெல்லாம் வெளிப்பட்டது. அவர் யூதாஸ் இஸ்காரியோத்தை எதிர்கொண்ட விதத்தைக் காட்டிலும், வேறு எதிலும் அவ்வளவு அதிகத் தெளிவாய் வெளிப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

சீஷர்கள் இயேசுவிடம், “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும், அறிந்தும் இருக்கிறோம்,” என்று சொன்னபோது (யோவான் 6:69), இயேசு அவர்களுக்குக் கொடுத்த பதிலில், ஒன்றைத் தெளிவாக வெளிப்படுத்தினார்.

மெசியாவாகிய அவர், அவருடைய சீஷர்களில் ஒருவனாலே காட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அவர் வெளிப்படுத்தினார். இயேசு சொன்னார்: “பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான்.” (யோவான் 6:70).

பிறகு 71-ம் வசனம் சொல்கிறது, “சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஒருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக் கொடுக்கப் போகிறவனாயிருந்தபடியினால், அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்.”

யூதாஸ் இதை அறிந்து கொள்வதற்கு முன்பே, யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் அறிந்திருந்தார்.

இயேசு ஒரு வார்த்தையைச் சொல்லி, அவனை அதைச் செய்யும்படி விட்டு விடும் வரை, யூதாஸினால் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. கடைசி இராவுணவின்போது, “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்,” என்று இயேசு தம் சீஷர்களை எச்சரித்திருந்தார் (யோவான் 13:21).

அவன் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, இயேசு அதற்கு இவ்வாறு பதிலளித்தார்:

நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து, எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி, “நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்,” என்றார்………………………………அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப் போனான். அப்பொழுது இராக்காலமாயிருந்தது. (யோவான் 13:26-27, 30)

இயேசுவே ஒரு வார்த்தையைச் சொல்லி, யூதாஸ் தம்மைக் காட்டிக் கொடுக்கும்படி அனுமதிக்கும்வரை, யூதாஸினால் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்ளும்போது, இது என்னை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்துகிறது. இந்தச் சம்பவம் முழுவதிலும், காட்டிக் கொடுத்தவன் அல்ல, காட்டிக் கொடுக்கப்பட்டவர்தான் சகலத்தையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 

பிதாவாகிய தேவனே, நீர் என்னை முழுமையாய் அறிந்திருக்கிறீர். உமக்கு நன்றி. சர்வத்தையும் அறிந்திருக்கிற தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட அறிவையும், ஞானத்தையும் இயேசுவே வெளிப்படுத்தினார் என்று நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். நான் அவரிடம் கேட்பதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்பதை என் பிதா அறிந்திருக்கிறார். ஆமென்.