செப்டம்பர் 7, தேவனுடைய சித்தத்தை அறிந்த நிலையில் ஜெபிக்க வேண்டும்

நான் அவரிடம் கேட்பதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்பதை என் பிதா அறிந்திருக்கிறார்

விண்ணப்ப ஜெபம் என்பது, ஜெபத்தைப் பயன்படுத்தி, நம்முடைய தேவைகளை ஜெப விண்ணப்பங்களாக்கி தேவனிடத்தில் தெரிவிப்பதாகும். இது சரியான ஜெபம்தான். ஜெபத்தில் இதற்கு இடமும் உண்டு.

ஆனால் மிக மிகச் சிறிய இடம்தான் இதற்கு உண்டு. காரணம், நமக்கு என்ன தேவை என்பதை நாம் அவரிடம் கேட்பதற்கு முன்பே தேவன் அதை அறிந்திருக்கிறார். ஜெபத்தைக் குறித்து பலரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஜெபம் என்றாலே தேவனிடம் சென்று, உங்களுக்குத் தேவையானவைகளின் பட்டியலை (ஷாப்பிங் லிஸ்ட்டை) கொடுப்பதுதான்.

ஆனால் தேவன் நம்மிடம் அதை எதிர்பார்க்கவில்லை. ஜெபம் என்றாலே அதுதான் என்பதும் சரியல்ல.

நம் எல்லோருக்குமே தேவைகள் அவ்வப்போது இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்வோம் என்றால், அதுதான் மிகச் சிறந்த தீர்வாயிருக்கிறது. என் நண்பர் பாப் மம்ஃபோர்ட் வழக்கமாக இவ்வாறு சொல்வார், “நான் என்ன செய்ய வேண்டும்? என்னுடையதிலிருந்து ஒரு சிறிய தங்கக் கட்டியை எடுத்து தேவையுள்ள மற்றவர்களுக்குக் கொடுக்கலாம்.

அல்லது தங்கச் சுரங்கத்திற்கான வழியையே அவர்களுக்குக் காண்பித்து விடலாம். இதில் எதைச் செய்தால், அவர்களுக்கு நல்லது?” பாருங்கள், நான் உங்களுக்காக ஜெபிக்கலாம். நீங்களும் சுகமடையலாம். அது ஒரு சிறிய தங்கக்கட்டியை உங்களுக்குக் கொடுப்பதுபோலத்தான்.

ஆனால் தங்கச் சுரங்கத்திற்குச் செல்லும் வழியையே நான் உங்களுக்குக் காண்பிக்க முடியும். அப்பொழுது உங்களுக்குத் தேவையான அளவிற்கு எவ்வளவு தங்கக்கட்டிகள் வேண்டுமோ, அவ்வளவை நீங்கள் அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறார் என்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவி கொடுக்கிறார் என்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக் கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம். (1 யோவான் 5:14-15)

ஆக, நம்மிடம் ஒரு விண்ணப்பம் இருந்து, அதைக் குறித்த தேவனுடைய சித்தத்தை அறிந்தவர்களாய் நாம் ஜெபிக்கின்றோம் என்றால், நாம் நிச்சயம் அந்த ஜெபத்திற்கான பதிலைப் பெறுவோம் என்று நாம் உறுதியாக அறிந்து கொள்ளலாம்.

நாம் தேவனுடைய சித்தத்தை அறிந்தவர்களாய் ஜெபிக்கும்போது, அவர் நமக்குச் செவி கொடுக்கிறார் என்பதை நாம் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியும்.

அவர் நமக்குச் செவி கொடுக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ளும்போது, நாம் எதற்காக ஜெபித்திருக்கிறோமோ, அதை நிச்சயம் நாம் பெற்றுக் கொள்வோம் என்றும் அறிந்து கொள்ள முடியும்.

பிதாவாகிய தேவனே, நீர் என்னை முழுமையாய் அறிந்திருக்கிறீர். உமக்கு நன்றி. நான் தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்கும்போது, அவர் எனக்குச் செவி கொடுக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் எனக்குச் செவி கொடுக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கும்போது, நான் எதைக் கேட்டிருக்கிறேனோ, அதை நிச்சயம் பெற்றுக் கொள்வேன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். இதை நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். நான் அவரிடம் கேட்பதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்பதை என் பிதா அறிந்திருக்கிறார். ஆமென்.