செப்டம்பர் 11, மனதுருகி, கரம் நீட்டி, தொட்டு சுகமாக்கினார்

ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்துவதுபோல, தேவனும் என்னை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்துகிறார்

மனதுருக்கம் என்பது வேதவசனத்தில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது? மாற்கு முதல் அதிகாரத்தில் எழுதப்பட்ட ஒரு சம்பவத்தை நாம் பார்ப்போம்.

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் (இயேசுவினிடத்தில்) வந்து, அவர் முன்பாக, முழங்கால்படியிட்டு, "உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்," என்று வேண்டிக் கொண்டான்.

இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு, "எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு," என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். (மாற்கு 1:40-42)

"இயேசு மனதுருகி, கரம் நீட்டி, தொட்டு சுகமாக்கினார்," என்று இவ்வசனம் சொல்கிறது. இந்த உணர்வு, அடி வயிற்றின் (bowels) ஆழத்திலிருந்து வெளிப்படுகிறது. மனதுருக்கம் என்பது ஆழமான, அழுத்தமான, தீவிரமான அன்பின் உணர்வாக அடி வயிற்றிலிருந்து வெளிப்படுகிறது.

கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு, இதை அடி வயிற்றின் மனதுருக்கமாக, "bowels of compassion" என்றே குறிப்பிடுகிறது. அடி வயிற்றிலிருந்து எழும்பும் மனதுருக்கத்தில்தான், நம்முடைய ஆழமான அன்பின் உணர்வுகள் இருக்கின்றன.

இவை நம்முடைய இருதயத்தில் இல்லை. நம் அடி வயிற்றில் இருக்கின்றன. இங்கிருந்துதான் சகலமும் வெளிப்படுகிறது.

என்னுடைய முதல் மனைவி லிடியா தன் சுய சரிதையை எழுதியபோது, அதில் "என் அடி வயிற்றுப் பகுதி அசைக்கப்பட்டது (My bowels were moved)," என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார்.

ஆங்கிலத்தில் இப்படி எழுதுவது சரியாக இருக்காது என்று இந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது.

ஆனால் எனக்குத் தெரிந்த மற்ற மொழிகளில், லத்தீன், கிரேக்கம் மற்றும் எபிரெய மொழிகளில், உங்களுடைய உள்ளார்ந்த, ஆழமான உறுப்பாக உங்களுடைய இருதயத்தைக் குறிப்பிட மாட்டார்கள், அடிவயிற்றைத்தான் குறிப்பிடுவார்கள்.

அன்பாக இருக்கட்டும், பயமாக, பகைவைராக்கியமாக அல்லது மற்ற உணர்வுகளாக இருக்கட்டும், இவற்றின் ஆரம்பம், அடிவயிறுதான். இதுதான் உங்களுடைய மகா ஆழத்தில் இருக்கின்றது.

பிதாவாகிய தேவனே, நீர் என்னை மிகவும் அக்கறையாய் விசாரிக்கிறீர், கவனித்துக் கொள்கிறீர். உமக்கு நன்றி. இயேசு மனதுருக்கத்தோடு நடந்து கொண்டதுபோல, நானும் அதே வழியில், என்னுடைய உள்ளார்ந்த, மகா ஆழத்திலிருந்து என் அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கின்றேன். ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்துவதுபோல,  தேவனும் என்னை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்துகிறார். ஆமென்.