செப்டம்பர் 18, பிறப்பும், புத்திர சுவீகாரமும்

“அப்பா, பிதாவே” என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியை நான் பெற்றிருக்கிறேன்

நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளும்போது, நீங்கள் தேவனுடைய பிள்ளையாய் மாறுகின்றீர்கள். நீங்கள் "இயேசுவின் சுபாவத்தையும்" பெற்றுக் கொள்கிறீர்கள்.

இயேசுவின் சுபாவம், பிதாவாகிய தேவனை "அப்பா, பிதாவே" என்று உரிமையோடு அழைக்கக்கூடிய சுபாவமாகும். இது அப்பா - பிள்ளை உறவாகும்.

ரோமர் 8-ம் அதிகாரத்தில், பவுல் இரண்டு முக்கியமான விஷயங்களைக் குறித்துப் பேசுகிறார். ஒன்று, பிறப்பு. இன்னொன்று, புத்திர சுவீகாரமாகும். இவையிரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

இவை வித்தியாசமானவை, தனித்தன்மை உடையவை. பிறப்பு என்பது ஒரு சுபாவத்தை உருவாக்குகிறது. புத்திர சுவீகாரம் என்பது சட்டப்பூர்வமான உரிமையைக் கொடுக்கின்றது.

பிறப்பு மற்றும் புத்திர சுவீகாரம் என்ற இந்த இரண்டு விஷயங்களிலுமே தேவன் நமக்கு மிகப் பெரிய நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆனால் இவையிரண்டும் ஒரே நன்மையை நமக்குக் கொடுக்கவில்லை. இந்த ஒவ்வொன்றிலிருந்தும் தனித்தன்மை உடைய, வித்தியாசமான நன்மைகளை நாம் பெறுகின்றோம்.

ரோமப் பேரரசில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின் வெளிச்சத்திலிருந்து நாம் இதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். பவுலின் நாட்களில், ரோமப் பேரரசருக்கு பல மகன்கள் இருந்தனர்.

இது வழக்கமாய் காணப்பட்ட ஒரு காரியமாகும். ஆனால் அவன் தனக்குப் பின் பேரரசனாக வரும்படி, ஒரு குறிப்பிட்ட மகனைத் தேர்ந்தெடுப்பான். அவன் அந்த மகனை புத்திர சுவீகாரமும் செய்து கொள்வான்.

அப்பொழுது அந்தப் பேரரசின் எல்லா சட்டப்பூவமான உரிமைகளும், புத்திர சுவீகாரம் செய்து கொள்ளப்பட்ட அந்த மகனுக்குச் சென்று சேரும். புத்திர சுவீகாரம் செய்து கொள்வதன் நோக்கம், சட்டப்பூர்வமான ஒன்றாகும். அது அந்த மகனுடைய சுதந்திரத்தை, உரிமைச் சொத்தை உறுதி செய்கிறது.

நாம் மறுபடியும் பிறக்கும்போது, மீண்டும் உருவாக்கப்படுகிறோம். "இயேசுவின் சுபாவத்தைப்" பெற்றுக் கொள்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெறும்போது, நாம் புத்திர சுவீகாரத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.

பரலோகத்தின் மிகச் சிறந்த வழக்கறிஞர் வந்து, நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை நமக்கு உறுதிப்படுத்துகிறார். இதுதான் நாம் பெற்றுக் கொள்கிற சுதந்திரத்தை, உரிமைச் சொத்தை நமக்கு உறுதிப்படுத்துகிறது. இதினால் உண்டாகக்கூடிய நன்மையை உங்களால் பார்க்க முடிகிறதா?

இது ரோமப் பேரரசருக்கு நிகழ்வதைப்போல இருக்கிறது. அவனுக்கு ஒரு மகன் பிறக்கும்போது, அவனுடைய மகன் அவனுடைய சுபாவத்தைப் பெறுகிறான். ஆனால் உரிமைச் சொத்தை, சுதந்திரத்தைப் பெற வேண்டுமென்றால், அவனுடைய மகன் புத்திர சுவீகாரம் செய்யப்பட வேண்டும்.

இது அவனுடைய மகனுக்கு சட்டப்பூர்வமான உரிமையைக் கொடுக்கிறது, பேரரசரின் மகனாய் அவனுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைச் சொத்தையும் கொடுக்கிறது.    

நான் உம்முடைய பிள்ளை, நன்றி பிதாவே. பிறப்பு மற்றும் புத்திர சுவீகாரத்தின் மூலம், நான் தேவனுடைய சுபாவத்தையும், அவருடைய பிள்ளைக்குரிய சட்டப்பூர்வமான உரிமையையும் பெற்றிருக்கிறேன் என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன்.“அப்பா, பிதாவே” என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியை நான் பெற்றிருக்கிறேன். ஆமென்.