செப்டம்பர் 23, தேவனே நித்திய பிதாவாயிருக்கிறார்

 “அப்பா, பிதாவே” என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியை நான் பெற்றிருக்கிறேன்

பிதாவாகிய தேவனுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் உறவை இன்னும் நெருக்கமாக நாம் நோக்கிப் பார்ப்போம்: "இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக் குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு (வேண்டிக் கொள்கிறேன்)" (எபேசியர் 3:14-15).

ஜெ.பி.பிலிப்ஸ் என்ற மொழிபெயர்ப்பு, 15-ம் வசனத்தை இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறது, "பரலோகம் மற்றும் பூமியில் தகப்பன் என்ற ஸ்தானமே, என்ற பெயரே அவரிடமிருந்துதான் தோன்றியிருக்கிறது."

இவ்வசனத்தில் வல்லமையான ஒரு வெளிப்பாடு இருக்கிறது. தேவனுக்குள் இருக்கும் தகப்பன் என்ற சுபாவம், நித்திய நித்தியமாய் அவருக்குள் இருக்கிறது. தகப்பன் அல்லது பிதா என்ற பெயரே, தேவனுக்குள் இருக்கும் தகப்பன் அல்லது பிதா என்ற சுபாவத்திலிருந்துதான் உருவாகியிருக்கிறது. அதிலிருந்துதான் ஒரு தகப்பனுக்குரிய அதிகாரமும், அதன் புனிதமான உறவும் உண்டாகியிருக்கிறது.

பரலோக தேவனுக்குள் இருக்கும் தகப்பன் என்ற சுபாவத்தின் தெய்வீக மற்றும் நித்திய தன்மை, பூமியில் வாழும் தகப்பன்மார் மூலம் வெளிப்பட வேண்டும்.

சிருஷ்டிப்பு நடப்பதற்கு முன்பே, தேவன் ஏற்கனவே பிதாவாகத்தான் இருந்தார். அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாக இருந்தார். தேவனுடைய திரித்துவத்தில் தகப்பனும், மகனுக்கும் இடையே உள்ள இந்த உறவு, நித்தியமானது. சிருஷ்டிப்பின் கிரியை நிகழ்வதற்கு முன், நித்திய நித்தியமாக, தேவனே பிதாவாக இருந்தார்.

நித்திய, நித்தியமாக, கிறிஸ்துவே அவருடைய மகனாக இருந்தார். சிருஷ்டிப்பில் ஒவ்வொரு தகப்பன் என்ற ஸ்தானமும், தேவனுக்குள் இருக்கும் நித்திய தகப்பன் என்ற சுபாவத்தின் அடிப்படையில்தான் பெயரிடப்பட்டிருக்கின்றன.

 

யோவான் சுவிசேஷத்தில், நமக்கு நன்கு தெரிந்த ஒரு வசனம் இருக்கிறது. இயேசு சொன்னார், "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் (பெரிய வீடுகள்) உண்டு" (யோவான் 14:2). தேவன் பிதாவாக இருக்கிறார், அவரிடத்தில் பெரிய வீடு உண்டு என்ற உண்மையை இவ்வசனம் வெளிப்படுத்துகிறது. வேதவசனத்தில், வீடு என்ற வார்த்தை, கற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தைக் குறிக்கும்படி பிரதானமாக பயன்படுத்தப்பட்டதில்லை.

மாறாக, அது ஒரு குடும்பத்தையும், அவர்கள் வாசம் பண்ணுகிற கட்டிடத்தையும் குறிக்கும்படியே எப்பொழுதும் பயன்படுத்தப்படுகிறது. "என் பிதாவின் வீட்டில்" என்று இயேசு சொன்னபோது, அவர் தேவனுடைய பரலோகக் குடும்பத்தைச் சுட்டிக் காண்பித்து பேசுகிறார். நித்திய நித்தியமாக தேவனே பிதாவாயிருக்கிறார். குடும்ப வாழ்க்கையும் நித்தியத்தில்தான் ஆரம்பித்தது.

தகப்பன் - பிள்ளை என்ற உறவும் தேவனுடைய திரித்துவத்தில் நித்தியத்திலேயே ஆரம்பித்து விட்டது.

நான் உம்முடைய பிள்ளை, நன்றி பிதாவே. தேவனுக்குள் இருக்கும் பிதா என்ற சுபாவம், நித்தியமானது; நான் தேவனுடைய பரலோகக் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்று நான் விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். “அப்பா, பிதாவே” என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியை நான் பெற்றிருக்கிறேன். ஆமென்.