செப்டம்பர் 26, நம்முடைய சரீரங்கள் விலைமதிக்க முடியாதவை

என் பிதாவாகிய தேவனே என்னை உருவாக்கினார்

நம்முடைய சரீரம் எதினால் உருவாக்கப்பட்டிருக்கிறது, அது எவ்வளவு முக்கியமானது என்பதைக் குறித்து வேதாகமம் சொல்வதை நாம் கவனிப்போம். வேதாகமம் அதைக் குறித்து நிறைய பேசியிருக்கிறது. ஒருவேளை உங்களில் அநேகர் அதை அறியாமலிருக்கலாம்.

கிறிஸ்தவர்கள் தங்களுடைய சொந்த சரீரங்களை குறைவுபடுத்திப் பேசுகிறார்கள், அவற்றிற்கு குறைவான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் அவற்றை மட்டுப்படுத்திப் பேசுகிறார்கள். இது எப்பொழுதுமே என்னை வருத்தப்படுத்துகிறது.

சகோதர, சகோதரிகளே, நம்முடைய சரீரங்கள் தேவனுடைய அற்புதங்களாய் இருக்கின்றன. உங்களுடைய கார் விபத்தில் சிக்கி, அப்பளம் போல நொறுங்கி விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது நீங்கள் ஒரு புதிய கார் வாங்கியாக வேண்டும். அதற்கு உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு சில இலட்சங்கள்தான். ஆனால் உங்களுடைய ஒரு கண்ணில் காயம் உண்டாகி விட்டால், நீங்கள் பணம் செலுத்தி, ஒரு புத்தம் புதிய கண்ணை வாங்கி விட முடியாது. நிச்சயமாக முடியாது. அது விலைமதிக்க முடியாதது.

ஆக, உங்களுடைய சரீரத்தின் ஒவ்வொரு முக்கியமான உறுப்பிற்கும் அதே முக்கியத்துவம்தான் இருக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் தங்களுடைய சரீரங்களைக் காட்டிலும், தங்களுடைய கார்களுக்கும், மற்ற தங்களுடைய உடைமைகளுக்கும்தான் மிகவும் அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள்.

இதைப் பார்க்கும்போது, இது என்னை வருத்தமடையச் செய்கிறது. இது தவறான, அடிமுட்டாள்தனமான ஒரு மதிப்பீடாகும்.

சங்கீதம் 139, தாவீது எழுதிய ஒரு சங்கீதமாகும். அவன் தன்னுடைய சொந்த சரீரத்தைக் குறித்த நம்ப முடியாத ஆச்சரியங்களை அதிசயத்து, தியானித்து, அதை எழுதியிருக்கிறான். அதில் தாவீது கர்த்தரிடம் இவ்வாறு சொல்கிறான்:

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய்  உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன். உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். (சங்கீதம் 139:14)

தாவீது தன் சொந்த சரீரத்தைக் குறித்து இங்கு பேசிக் கொண்டிருக்கிறான். நீங்களும் உங்களுடைய சொந்த சரீரத்தைக் குறித்து இவ்வாறாகவே சொல்வீர்களா? நீங்களும் இவ்வாறு சொல்வீர்கள் என்றால், அது உங்களுடைய எண்ண ஓட்டத்தை மாற்றும்.

சில கிறிஸ்தவர்கள், தங்களுடைய சொந்த சரீரங்களைக் குறித்து மிகவும் பாரமடைந்தவர்களாய் இருக்கிறார்கள். சரீரம் என்ற ஒரு பிரச்சனை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதுபோல அவர்கள் நினைக்கிறார்கள். இது தவறான கண்ணோட்டம்.

நீங்கள் விரும்பினால், இப்பொழுதே நீங்களும் என்னோடு சேர்ந்து இந்த வார்த்தைகளை சத்தமாகச் சொல்லலாம்: “தேவனே, நீர் என்னை பிரமிக்கத்தக்க அதிசயமாய் உருவாக்கியிருக்கிறீர். நான் அதை எண்ணிப் பார்த்து, உம்மைத் துதிப்பேன்.”

கர்த்தாவே, நீர் எனக்குள் செய்திருக்கிற கிரியைக்காக உமக்கு நன்றி. “என் சரீரம் விலைமதிக்க முடியாதது. காரணம், தேவன் என்னை பிரமிக்கத்தக்க அதிசயமாய் உருவாக்கியிருக்கிறார். நான் அதை எண்ணிப் பார்த்து, தேவனைத் துதிப்பேன்,” என்று நான் விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். என் பிதாவே என்னை உருவாக்கினார். ஆமென்.