செப்டம்பர் 29, நம் சரீரத்தின் உறுப்புகளை தேவனுக்கு அர்ப்பணிப்போம்

என் பிதாவாகிய தேவனே என்னை உருவாக்கினார்

நம்முடைய சரீரத்தைக் குறித்த தேவனுடைய நோக்கம் என்ன என்பதை நாம் தொடர்ந்து பார்ப்போம். இப்பொழுது நம்முடைய சரீரத்தின் உறுப்புகள் அனைத்தும் தேவனுடைய நீதியின் கருவிகளாய், அடிமைகளாய் மாற வேண்டும்.

முதலில், பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வாசஸ்தலமாக நம் சரீரத்தை எடுத்துக் கொள்கிறார். பிறகு, நம்முடைய சரீரங்கள் அவருடைய கருவிகளாய் மாறுகின்றன.

உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை (உறுப்புகளை) அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை (உறுப்புகளை) நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். (ரோமர் 6:19)

நம்முடைய சரீர உறுப்புகளைக் குறித்த தேவனுடைய திட்டம் இதுதான்: நாம் அவைகளை அவருக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுக்க வேண்டும். என்ன நேர்ந்தாலும் சரி, அவருடைய சித்தத்தை செய்வதற்கு ஆயத்தமான நிலையில் அவைகளை வைத்திருக்க வேண்டும்.

நாம் நம்முடைய சரீரத்தின் உறுப்புகளை தேவன் பயன்படுத்தத் தகுந்த "நீதிக்குரிய ஆயுதங்களாக, கருவிகளாக" அர்ப்பணிக்க வேண்டும். எவ்வித நிபந்தனையும் இல்லாமல், அவ்வாறு நாம் தேவனுக்கு அர்ப்பணிக்கும்போது, நம்முடைய சரீரங்கள் வேறுபிரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுகின்றன, பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணத் தகுதியான ஆலயங்களாய் மாறுகின்றன.

எவ்வித முன் நிபந்தனையும் இல்லாமல், நமக்கென்று எதையும் பிரித்து, ஒதுக்கி வைத்துக் கொள்ளாமல், நாம் நம் சரீரத்தின் உறுப்புகளை அவருக்கு இணங்கச் செய்து கீழ்ப்படுத்தும்போது, அவருடைய சித்தத்தைச் செய்யக்கூடிய நீதியின் கருவிகளாய், அடிமைகளாய் ஒப்புக்கொடுக்கும்போது, அப்பொழுது தேவன் சொல்கிறார், "இப்பொழுதுதான் எல்லாம் சரியாய் இருக்கிறது.

உன் சரீரம் எனக்குரியதாய் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், இந்த வாழ்க்கையிலும், இனி வரும் வாழ்க்கையிலும் அதை பத்திரமாய், நல்ல ஆரோக்கியத்தோடு காத்துக் கொள்ள வேண்டிய முழு பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன்."

கர்த்தாவே, நீர் எனக்குள் செய்திருக்கிற கிரியைக்காக உமக்கு நன்றி. என் பிதாவாகிய தேவனே என்னை உருவாக்கினார். ஆகையால் என் சரீரம் தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படும்படி, பரிசுத்த ஆவியானவர் தங்கி வாசம் பண்ணத்தகுந்த ஆலயமாய் மாற்றப்படும்படி, இப்பொழுது நான் என்னுடைய சரீரத்தை எவ்வித முன் நிபந்தனையுமில்லாமல், எனக்கென்று எதையும் பிரித்து வைத்துக் கொள்ளாமல், முழுமையாய் தேவனுக்கு அர்ப்பணிக்கிறேன். ஆமென்.