செப்டம்பர் 30, நாம் நம் சரீரத்தை தேவனுடைய பலிபீடத்தில் அர்ப்பணிக்க வேண்டும்

என் பிதாவாகிய தேவனே என்னை உருவாக்கினார்

ரோமர் 12:1-ல், நாம் நம்முடைய சரீரங்களை, இந்தப் பூமியில் இப்பொழுது வாழ்கின்றபொழுதே, ஜீவ பலியாய் தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார்:

"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்கிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை."

நீங்கள் உங்களுடைய சரீரத்தை ஜீவபலியாய் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கின்றீர்கள் என்றால், நீங்கள் இனி உங்களுடைய சரீரத்தைக் குறித்து உரிமை பாராட்டவோ, சொந்தம் கொண்டாடவோ முடியாது.

உங்களுடைய சரீரம், எங்கு செல்ல வேண்டும் என்பதை நீங்கள் இனி தீர்மானிக்க முடியாது. உங்களுடைய சரீரம், என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் இனி தீர்மானிக்க முடியாது.

உங்களுடைய சரீரம், என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் இனி தீர்மானிக்க முடியாது.

அந்தத் தீர்மானங்களை எடுப்பதற்கான உரிமையை நீங்கள் தேவனிடம் விட்டுக் கொடுத்து விட்டீர்கள். இப்பொழுதிலிருந்து, உங்களுடைய சரீரம் இனி உங்களுக்குச் சொந்தமானது அல்ல.

அது இனி தேவனுக்கு மட்டுமே சொந்தமானது. நீங்கள் அதை ஜீவபலியாய், அவருடைய பலிபீடத்தில், அவருக்கென்று ஒப்புக்கொடுத்து விட்டீர்கள்.

தேவனுடைய பலிபீடத்தில் ஒன்றை ஒப்புக்கொடுத்து விட்டால், அவ்வளவுதான், அந்தக் கணத்திலிருந்து, இனி அது தேவனுக்கு மட்டுமே சொந்தமாகி விடுகிறது. யார் அதைக் கொடுத்தாரோ, அது இனி அந்த நபருக்குச் சொந்தமானது அல்ல. அதைத்தான் தேவன் எதிர்பார்க்கிறார்.

இயேசு தம்முடைய சரீரத்தை பலியாக ஒப்புக்கொடுத்ததுபோல, நாமும் நம்முடைய சரீரங்களை பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதுதான் தேவனுடைய நிபந்தனை. இங்கு வித்தியாசம் என்னவென்றால், இயேசு மரணத்தின் மூலம் தம்முடைய சரீரத்தைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்.

ஆனால் நாம் உயிரோடு இருக்கும்பொழுதே, நம்முடைய சரீரங்களை பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்படித்தான் வேதவசனம் இங்கு நம்மிடம் பேசுகிறது. நாம் அவைகளை தேவனிடம் சரணடையச் செய்ய வேண்டும்.

அவற்றின் மீது நமக்கிருக்கும் உரிமைகளை, சொந்தம் கொண்டாடும் உணர்வுகளை நாம் தேவனிடம் விட்டுக் கொடுத்து விட வேண்டும்.

இந்த வார்த்தைகள், நம்மை அளவுக்கு அதிகமாகவே அச்சுறுத்தலாம். ஆனால் இது மிகவும் உற்சாகமூட்டக்கூடிய ஒன்று என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்களையும், உங்களுடைய சரீரத்தையும் பயன்படுத்தி என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து தேவனிடம் ஒரு நல்ல திட்டம் இருக்கிறது.

ஆனால் நீங்கள் உங்களுடைய சரீரத்தை தேவனுக்குச் சொந்தமாக ஒப்புக்கொடுக்கும்வரை, அவர் அதை உங்களிடம் தெரிவிக்க மாட்டார். முதலில், நீங்கள் உங்களுடைய சரீரத்தை தேவனிடம் அர்ப்பணிக்க வேண்டும். அப்பொழுது அதைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.     

கர்த்தாவே, நீர் எனக்குள் செய்திருக்கிற கிரியைக்காக உமக்கு நன்றி. என் பிதாவாகிய தேவனே என்னை உருவாக்கினார். ஆகையால் நான் என்னுடைய சரீரத்தை தேவனுடைய பலிபீடத்தில் ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கும்படி தீர்மானிக்கிறேன். இனி இது எனக்குச் சொந்தமானது அல்ல, அது என் தேவனுக்கே சொந்தம். ஆமென்.