தேவன் என்னை முழுமையாய் அறிந்திருக்கிறார்

 

நான் அவரிடம் கேட்பதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்பதை என் பிதா அறிந்திருக்கிறார்
நம்முடைய தலையிலுள்ள முடிகள் எத்தனை என்பதையும் தாண்டி, அதற்கும் அப்பாற்ப்பட்ட விதத்தில், தேவன் நம்
ஒவ்வொருவரையும் முழுமையாய் அறிந்திருக்கிறார் (மத்தேயு 10:30). பின் வரும் அழகான சங்கீதத்தில், நம்மை
மலைக்கச் செய்யக்கூடிய ஆச்சரியமான ஒரு வெளிப்பாட்டோடு தாவீது ஆரம்பிக்கிறார்:
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.

 

என் உட்காருதலையும், என் எழுந்திருக்குதலையும் நீர்
அறிந்திருக்கிறீர். என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச்
சூழ்ந்திருக்கிறீர். என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ,
கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது
கரத்தை என் மேல் வைக்கிறீர்.

 

இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத
உயரமுமாயிருக்கிறது. உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தை விட்டு
எங்கே ஓடுவேன்? (சங்கீதம் 139:1-7) தாவீது என்ன சொல்கிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்: தேவன் நம்முடைய நினைவுகளை தூரத்திலிருந்தே
அறிந்து கொள்கிறார். ஒருமுறை தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றுக் கொண்ட ஒரு நபர் இவ்வாறு சொன்னார்.
அதாவது அந்த வெளிப்பாட்டை அவரிடம் கொண்டு வந்த ஒரு தூதன், அவரிடம் இவ்வாறு சொன்னானாம்,
“மனுஷருடைய சத்தங்களை இந்த பூமியில் எவ்வாறு கேட்க முடிகிறதோ, அப்படிப்போல, மனுஷருடைய நினைவுகளை
பரலோகத்தில் சத்தமாய் கேட்க முடியும்.”

 

இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் தாவீது இங்கே அதைத்தான் அப்படியே சொல்கிறார்.
இதையெல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, நிச்சயமாக, நாமும் தாவீதின் வார்த்தைகளையே
எதிரொலிப்போம்: “இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், என் மூளையறிவுக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.”

 

தாவீது ஒரு கேள்வியைக் கேட்கிறார், “உம்முடைய ஆவிக்கு மறைவாக நான் எங்கே ஓடுவேன்?” இதுதான் தேவன்
தம்முடைய ஆவியின் மூலமாய், இந்தப் பிரபஞ்சமெங்கும் உள்ள ஒவ்வொன்றையும் எவ்வளவாய் அறிந்திருக்கிறார்
என்பதை நமக்கு விளக்குகிற ஒரு திறவுகோலாய் இருக்கிறது.

 

தேவனுடைய ஆவியானவர் இந்தப் பிரபஞ்சமெங்கும்
ஊடுருவிப் பரவியிருக்கிறார். தேவனுடைய ஆவியானவர் பிரசன்னமாகியிராத இடம் என்று ஒரு இடமும் இல்லை.
தேவன் தம்முடைய ஆவியானவர் மூலம், நாம் அறிந்த சகலத்தையும் அறிந்திருக்கிறார். நம்முடைய தலையிலுள்ள
முடிகளின் எண்ணிக்கை போன்ற ஒருபோதும் நாம் அறிய முடியாத காரியங்களையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார்.

 

 

பிதாவாகிய தேவனே, நீர் என்னை முழுமையாய் அறிந்திருக்கிறீர். உமக்கு நன்றி.
தேவன் தம்முடைய ஆவியானவர் மூலம், என்னைக் குறித்து நான் அறிந்த காரியங்களையும்,
அதற்கும் அப்பாற்ப்பட்ட காரியங்களையும், இன்னும் சகலத்தையும் அறிந்து வைத்திருக்கிறார் என்று
நான் விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறேன். நான் அவரிடம் கேட்பதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்பதை என் பிதா அறிந்திருக்கிறார்.

 

 

ஆமென்...