நம்முடைய சுதந்திரம் (உரிமைச் சொத்து) எவ்வளவாய் பரந்து விரிந்திருக்கிறது!


“அப்பா, பிதாவே” என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியை நான் பெற்றிருக்கிறேன்

 

கிறிஸ்துவுக்குள் நம்முடைய உரிமைச் சொத்து எவ்வளவாய் பரந்து விரிந்திருக்கிறது என்பதைக் குறித்துப்
பேசுகிற ஒரு வசனத்தை நாம் பார்ப்போம். ரோமர் 8:32 சொல்கிறது, “(தேவன்) தம்முடைய சொந்தக்
குமாரன் என்றும் பாராமல், நம்மெல்லாருக்காகவும் அவரை (கிறிஸ்துவை) ஒப்புக்கொடுத்தவர், அவரோடே
கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி (இலவசமாய் கொடுக்காமல் இருப்பது எப்படி)?”
நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்போது, தேவன் நமக்கு எல்லா நன்மைகளையும் இலவசமாகக்
கொடுக்கிறார்.

 

அவரைத் தவிர்த்து விட்டு, நம்மால் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. உரிமைச்சொத்து
மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சுதந்திரம் எவ்வளவாய் பரந்து விரிந்திருக்கிறது என்பதற்கு
இவ்வசனத்தில் வலிமையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மால் இதைச் சம்பாதிக்க
முடியாது. நாம் இதை ஒரு இலவச ஈவாகப் பெற்றுக் கொள்கிறோம். இதில் சகல நன்மைகளும்
உள்ளடங்கியிருக்கிறது.

 

நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்போது, பிதாவாகிய தேவனிடம் இருக்கிற
சகல நன்மைகளையும், குமாரனாகிய தேவனிடம் இருக்கிற சகல நன்மைகளையும் ஒரு முழுமையான
உரிமைச்சொத்தாக நாம் பெற்றுக் கொள்கிறோம். நாம் அவற்றின் வாரிசுகளாய், சுதந்தரர்களாய்
மாறுகின்றோம்.

 

விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் எவ்வளவு பெரிய ஐசுவரியவான்களாய் இருக்கிறார்கள் என்பதை
பவுல், கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபத்தில் அவர்களுக்கு எடுத்துக் காண்பிக்க முயற்சிக்கிறார்.
உண்மையில் அவர் அவர்களைக் கொஞ்சம் கடிந்து கொள்கிறார். காரணம், அவர்கள் ஏதோ
தரித்திரர்களைப் போல நடந்து கொண்டார்கள். அவர்கள் அற்பமாய், குறுகிய மனப்பான்மையுடன் நடந்து
கொண்டார்கள்.

 

அவர்கள் ஒருவர் மற்றவர் மீது பொறாமை கொண்டார்கள். “நீங்கள் எவ்வளவு அதிகமாய்
பெற்றிருக்கிறீர்கள் என்பதை இன்னும் உணரவில்லை,” என்று பவுல் அவர்களிடம் சொன்னார்.
“இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பனாக. எல்லாம்
உங்களுடையதே. பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும்,
மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது.

 

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள். கிறிஸ்து தேவனுடையவர்” (1 கொரிந்தியர் 3:21-23). இது நம்மை மூச்சு முட்டச்
செய்யும் வாக்கியமாயிருக்கிறது! பவுல் இங்கு என்ன சொல்கிறார்? “எல்லா நன்மைகளும் உங்களுடையது.
எனவே குறுகிய மனப்பான்மையுடன், அற்பமாய் நடந்து கொள்ளாதீர்கள். பிரசங்கியார்களையே அளவுக்கு
மிஞ்சி சார்ந்து கொண்டிருக்காதீர்கள். எல்லாம் உங்களுடையது.

 

எனவே ‘நான்’, ‘என்னுடையது’ என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழாதீர்கள்,” என்பதைத்தான் பவுல் இங்கு வலியுறுத்துகிறார். உரிமைச்சொத்து
என்பது ஒரு ஈவாக, நமக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது; நம்மால் இதை சம்பாதிக்க முடியாது
என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நம்முடைய விசுவாசத்தையும், புரிந்து
கொள்ளுதலையும் விரிவுபடுத்தி, விசாலமாக்கும்படி நாம் பரிசுத்த ஆவியானவரிடம் ஜெபிக்க வேண்டும்.

 

இது மிகவும் முக்கியமானது. பரிசுத்த ஆவியானவர்தான் இவை எல்லாவற்றையும் நிர்வாகம் செய்கிறார்.
அவர் நம்முடன் பேசவில்லை என்றால், அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தவில்லை
என்றால், இவை வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருக்கும். இவை நம் வாழ்க்கையில் நிஜமாக மாறாது.
பரிசுத்த ஆவியானவரே, வாக்குத்தத்தங்களை நம் வாழ்க்கையில் நிஜமாக்குகிறார்.

 

நான் உம்முடைய பிள்ளை, நன்றி பிதாவே. கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதன் மூலம், நான் இந்த
உரிமைச் சொத்தின் வாரிசாக மாறுகிறேன் என்று விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். “அப்பா, பிதாவே”
என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியை நான் பெற்றிருக்கிறேன்.

 

 

ஆமென்...